Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகம் சுழல்வது அன்பினால் மட்டுமே!


இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாது. ஒருவரின் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நாம் செய்யக்கூடிய சிறிய விஷயங்கள் கூட மனமகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். அதை அன்பின் காரணமாக நாம் ஆத்மார்த்தமாக மனதிலிருந்து செய்கிறோம். எனவே, அன்பின் காரணமாக நாம் செய்யும் செயல்கள் எதுவும் பெரிய சுமையாக தெரியாது. இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒருநாள் துறவி ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை தூக்கிக்கொண்டு மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தார். அது ஒரு செங்குத்தான மலை என்பதால், மேலே ஏற ஏற சுமை அதிகமாகி அந்த துறவிக்கு மூச்சு வாங்க துவங்கியது. அதற்கு மேல் ஏற முடியாமல் அந்த துறவி அங்கேயே அமர்ந்து விட்டார்.

அப்போது அந்த வழியாக ஒரு மலைவாழ் சிறுமி வந்தாள். அவள் தனது மூன்று வயது தம்பியை தூக்கிக்கொண்டு மிக உற்சாகமாக பாடல் ஒன்றை பாடிக்கொண்டு மலை உச்சிக்கு ஏறி செல்வதை பார்த்தார் துறவி.

அந்த துறவிக்கு பயங்கர ஆச்சர்யம். அவர் சிறுமியைப் பார்த்து, ‘இவ்வளவு சிறிய பையைத் தூக்கிக்கொண்டே என்னால் மலை ஏற முடியவில்லையே! உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரிய சிறுவனை சுமந்துக்கொண்டு மலை ஏற முடிகிறது?’ என்று ஆச்சர்யமாக கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி சொன்னாள், ‘ஐயா! நீங்கள் தூக்கிக்கொண்டிருப்பது ஒரு சுமையை ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பது என் தம்பியை. நீங்கள் சுமையை தூக்கிக்கொண்டு செல்வதால், அது உங்களுக்கு பாரமாக தோன்றுகிறது. நானோ அதிகமாக பாசம் வைத்திருக்கும் என் தம்பியை சுமந்து செல்கிறேன். எனவே, அது எனக்கு சுமையாக தெரியவில்லை’ என்று சிரித்துக்கொண்டே கூறினாள். துறவிக்கு இப்போது நன்றாக புரிந்தது. ‘அன்பு எதையும் சுமக்கும்’ என்பதை உணர்ந்துக் கொண்டார்.

இந்தக் கதையில் சொன்னதுபோல, இந்த உலகம் சுழல்வது அன்பினால் மட்டுமேயாகும். நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பினால் செய்யும் காரியங்கள் எதுவும் நமக்கு சுமையாகவும், பாரமாகவும் தெரியாது. அது நம் மனதிற்கு மகிழ்ச்சியையே தரும். எனவே, அன்பை எப்போதும் முழுமையாக வெளிக்காட்ட தயங்க வேண்டும். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கலாம். முயற்சித்துப்பாருங்கள்.

kalkionline




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments