
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதற்கு அடுத்த நாளில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். 29 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில், ஞானசேகரனை குற்றவாளி என்று கடந்த 28ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஞானசேகரனுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்,11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி ராஜலட்சுமி, ஜூன் 2ஆம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
அதில், மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பிரிவுகளில் தனித்தனியாக தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில், அதிகபட்சமாக 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் காட்டக் கூடாது என்று நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.
ஞானசேகரனுக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளில் தனித்தனியாக தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், அதிகபட்சமாக பி.என்.எஸ் சட்டத்தில் பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனை குறைப்பு இல்லாமல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஆணையிட்டார். விருப்பத்திற்கு மாறாக அத்துமீறி நடந்த குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள், வலுக்கட்டாயமாகக் கடத்தி ஆசைக்கு இணங்க வைத்த குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உடலில் காயம் ஏற்படுத்தியதற்காக ஓர் ஆண்டு, விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள், கடுமையாக தாக்குதல் பிரிவில் 7 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் 7 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்ததற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தியதாக ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியதாக பதியப்பட்ட குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்படவில்லை. இவற்றில் அதிகபட்சமாக விதிக்கப்பட்ட 30 ஆண்டு சிறை தண்டனையை ஞானசேகரன் அனுபவிக்க வேண்டியுள்ளது.
யார் அந்த சார்? - ஞானசேகரன் தீர்ப்பின் விவரம்
இந்த வழக்கின் திர்ப்பில் நீதிபதி ராஜலட்சுமி கூறும்போது, 'சார்' என்ற வார்த்தையை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில் தான் ஞானசேகர் பயன்படுத்தி உள்ளார். தன்னை பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசை திருப்பவும், மிரட்டவும் 'சார்' வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இது அறிவியல் பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்று கொள்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments