காஸா எல்லையில் இன்று காலை 8.30 முதல் போர் நிறுத்தம் ஆரம்பமாகின்றது.
இஸ்ரேலியப் பிரதேசத்தின் மீதான ஹமாஸின் தாக்குதல்களின் 1,139 பேர் கொல்லப்பட்டு, 250 பேரைக் கைப்பற்றிய ஹமாஸின் கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமையிலான ஆயுதக் குழுக்களுக்குப் பதிலடியாகவே காஸா மீதான போரை இஸ்ரேல் தொடங்கியது.
இஸ்ரேல் காஸாவில் தனது கொடூரமான தாக்குதலைத் தொடங்கி 15 மாதங்கள் கடந்த பின்னர் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் அநுசரணையுடன் 2025.ஜனவரி 19ம் திகதியாகிய இன்றுடன் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வருவது, மனித நேயத்தை விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
பாலஸ்தீன மக்களை கூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற அமெரிக்கா, இஸ்ரேலின் கனவுகளை தகர்த்து, ஹமாஸ் போராளிகள் போராடினர். உலகம் நினைத்துப் பார்க்க முடியாத அளவான இழப்புகளை பாலஸ்தீன் சந்தித்தது.
பொருளாதார நெருக்கடி, உலக நாடுகளின் நெருக்கடி, நாட்டு மக்களின் போராட்டம் என்று பல்வேறுபட்ட நெருக்கடிகளை இஸ்ரேலும் சந்தித்து வந்தது.
இலகுவாகவும், விரைவாகவும் ஹமாஸ் போராளிகளை ஒழித்து விடலாம் என்று நினைத்த அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளை உலகத்தின் முன் தலைகுனிய வைத்த நிலையில் ஆங்காங்கே யுத்த நிறுத்தம் வேண்டி போராட்டங்களும் நிகழ்ந்து வந்தன.
2023, அக்டோபர் 7ம் திகதி போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை 46,707 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆறு வாரங்கள் வரை நீடிக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டத்தில், ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களில் பெண் இராணுவ வீரர்கள், குழந்தைகள், பொது மக்கள் மற்றும் 50வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 33 பேரை விடுதலை செய்யும். அதற்குப் பகரமாக, பெண் இராணுவத்தினர் ஒருவருக்கு 50 என்ற கணக்கிலும், மற்றவர்களில் ஒருவருக்கு 30 பேர் என்ற கணக்கிலும் இஸ்ரேல் சிறைபிடித்துவைத்துள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யும்.
இதன்படி ஹமாஸ் விடுவிக்கும் 33 பேருக்ககீடாக இஸ்ரேல் 1000 பேர்களை விடுவிக்கும். பின்னர், இஸ்ரேல் சிறைப் பிடித்துள்ள பாலஸ்தீனியரில் பெண்கள் மற்றும் 19 வயதுக்குட் பட்ட குழந்தைகள் அனைவரையும் விடுவிக்கும்.
அந்த வகையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர், இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலை பெறுவதோடு, வடக்கு காஸா முனைக்கு ஆயுதமில்லாத பாலஸ்தீனியர் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுவர்.அத்துடன் பாதிக்கப்பட்ட காஸா முனைக்கு நிவாரண உதவிக்காக உட்செல்ல தினசரி 600 ட்ரக்குகளை இஸ்ரேல் அனுமதிக்கும்.
மேற்படி நிபந்தனைகள் சரியாக நிறைவேற்றப்பட்டால், அடுத்த கட்டம் நடைமுறைப் படுத்தப்படும். அதன்படி, ஹமாஸிடமுள்ள பிற கைதிகள் அனைவரும் விடுவிக்கப் படுவதுடன், அதற்கீடாக, இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனியக் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதோடு, காஸா முனையிலிருந்து இஸ்ரேல் தனதுபடைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளும்.
இவை முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டதும், கைதாகி இறந்தவர்களின் உடல்களை ஹமாஸ் கையளிக்கும். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட காஸா பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப 3-5 ஆண்டு மறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்நிலையில், காஸாவை மறுபடியும் கட்டியெழுப்பும் பொறுப்பு மனிதாபிமானத்தை நேசிக்கின்ற அனைத்து உலக நாடுகளையும் சாருகின்றது!
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments