
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
2025-ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு-செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான வருமானமாக 4,990 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, செலவாக 7,190 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையாக 2,200 பில்லியன் ரூபா காணப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய விடயங்கள்
1) அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபா வரை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது
இந்த சம்பள அதிகரிப்பை பல கட்டங்களின் கீழ் செயல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
02) தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவிலிருந்து 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27,000 ரூபா வரையும், 2026ம் ஆண்டு முதல் 30,000 ரூபா வரையும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்காக தனியார் துறை நிறுவன உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறுகின்றார்.
03) தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1700 ரூபாவாக வழங்குவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யும் என அவர் கூறுகின்றார்.
04) மலையக தமிழர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக 7,583 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள லைன் வீடுகளை அபிவிருத்தி செய்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவதற்காக 4,267 மில்லியன் ரூபா.
மலையக தமிழ் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி, வாழ்க்கை தர உயர்வு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2,450 மில்லியன் ரூபா.
மலையக தமிழ் சமூகத்தின் பாடசாலைகளுக்கான நவீன வகுப்பறைகளை அமைப்பதற்காக 866 மில்லியன் ரூபா.
05) ஓய்வூதியத்தை அதிகரிக்க இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி அல்லது அதற்கு பின்னர் ஓய்வு பெறுகின்றவர்களின் ஓய்வூதியம் புதிய திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது.
அரச ஊழியர்களின் இடர் கடன் எல்லை 250,000 முதல் 400,000 வரை அதிகரிக்கப்படுகின்றது.
அதற்கு மேலதிகமாக 01.01.2020-ஆம் தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளின் ஓய்வூதியம் 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
06) விவசாயிகளை பாதுகாக்கும் திட்டம் தொடர்பிலும் அநுர குமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.
இதன்படி, பெரும்போகத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதற்காக 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், விவசாயிகளுக்கான உர மானியத்தை வழங்குவதற்காக 35000 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
07) பொது போக்குவரத்து வசதிகளை நவீனமயப்படுத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு நகர் பகுதிக்குள் பிரதான மார்க்கங்களில் மூன்று நுழைவாயில்களை கொண்ட நவீன பஸ்கள் 100 ஐ சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று, ரயில் போக்குவரத்;து திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய ரயில் பெட்டிகளை நிர்மாணிப்பதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
08) தமிழர்கள் செறிந்து வாழும் வட மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தில் பிரதான வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்வதற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியின் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாண பணிகளுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
09) கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பொருளாதார அபிவிருத்திக்காகவும், கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை சேவைகளை முன்னோற்றமடைய செய்ய அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டம் ஊடாக யோசனை முன்வைத்துள்ளது.
10) இலங்கை தினம் என்ற தினமொன்றை நடத்த இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் இந்த நிகழ்வை நடத்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
இந்த தினத்தை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
கட்டுரை தகவல்
எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை
bbctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments