Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு! (PDF Fill Attached)


ஜம்மியத்துல் உலமா சபையின் கனிவான கவனத்துக்கு...
16.02.2025

இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது, மிக நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பாகும். அத்துடன் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் மிகப் பழைமையானதும் ஜம்மியத்துல் உலமா சபை தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடந்த 1922ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, தற்பொழுது 100 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வழிகாட்டல்களின் முன்னோடி அமைப்பாக செயற்பட்டு வருகின்றது.

ஜம்மிய்யா தோற்றுவிக்கப்பட்ட காலம், முதலாவது உலக மகா யுத்தத்துக்குப் பின்னர், உலகம் மிகப் பெரிய மாற்றங்களுக்கு முகம் கொடுத்து வந்த காலகட்டமாகும். அக்காலப்பகுதியில் இஸ்லாமிய உலகின் தலைமைத்துவமாக இஸ்லாமியர்களுக்கான ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபத் ஆட்சி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிலாபத் ஆட்சி முறையை இல்லாதொழிப்பதற்கு நமது அண்டை நாடான இந்தியா மிகப் பெரிய இயக்கமொன்றைக் கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையில் அதே காலப்பகுதியில் தான் முஸ்லிம்களின் எண்ணங்களதும், சித்தாந்தத்தினதும் மையமாகச் செயற்படும் வகையில் உலமா சபை எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

ஜம்மியத்துல் உலமா சபை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியை விட, நாம் இப்போது வித்தியாசமானதொரு உலகத்தில் வசிக்கின்றோம். நாம் இப்போது புதியதொரு நூற்றாண்டில் வாழ்கின்றோம். புதிய தொழில்நுட்பங்கள், புதிய துறைகள் என்பன வளர்ச்சியடைந்து உலகம் மிக வேகமாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. அதற்கேற்ப இஸ்லாமிய உலகிலும் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றங்களை ஜம்மியத்துல் உலமா சபை உள்வாங்கியுள்ளதா என்பதை ஆராய்வதும், அது தொடர்பான சில ஆலோசனைகளை முன்வைப்பதுமே இந்த கடிதத்தின் நோக்கமாகும்.

விஞ்ஞான, தொழில்நுட்ப அபிவிருத்தி, அரசியல் உரிமைகளின் முன்னேற்றம் போன்ற துறைகளின் ஊடாகவே இன்று நாம் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைக் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாமிய சமயத்தின் அடிப்படைகளை எவ்வாறு நவீன உலகத்துடன் இணைப்பது? சமயத்தின் அடிப்படைகளை கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து நாம் தெளிவு பெற்றிருக்க வேண்டும். அதற்கான சரியான வழிகாட்டுதல்களை ஜம்மியத்துல் உலமா சபை இந்த சமூகத்துக்கு வழங்க வேண்டும்.

அதன் ஆரம்ப கட்டமாக, இலங்கை சிறுபான்மை முஸ்லிம்களின் அதிகூடிய ஆதரவைப் பெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபடுவதற்கான பொருத்தமான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அதிகரித்து வரும் சவால்களுக்கு ஒன்று பட்டு முகம் கொடுக்கக் கூடிய வகையிலான சிவில் மற்றும் அரசியல் குழுக்கள் நம் மத்தியில் இல்லை. அதனைக் கருத்திற் கொண்டு, சகல தரப்புக்களையும் உள்வாங்கி, தேசிய விவகாரங்களைக் கையாள்வதற்கான குழுவொன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் உருவாக்கினால், அது அனைவராலும் வரவேற்கப்படுகின்ற மிக முக்கிய முன்னோக்கிய நகர்வாக அமையும்.

இலங்கையில் உள்ள சகல இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்கள், பல் துறை சார் நிபுணர்கள், அரசியல் மற்றும் சிவில் தலைமைகளை வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சகலருக்கும் பொதுவான நிகழ்ச்சி நிரலொன்றின் மூலம் ஒருங்கிணைப்பதற்கான ஆரோக்கியமான, சாணக்கியமான நகர்வாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். மார்க்க அறிஞர்களை மாத்திரம் முழுமையாகக் கொண்டுள்ள ஜம்மியத்துல் உலமா, பல்துறை சார்ந்த நிபுணர்களையும், புத்திஜீவிகளையும். சமூக ஆர்வலர்களையும் கொண்ட குழு ஒன்றை தோற்றுவித்து முஸ்லிம் சமூகத்திற்கென மூலோபாய செயற்திட்டம் ஒன்றை வகுத்து, சகல தரப்புக்களும் பொதுவான இலக்குகளில் ஒன்றிணைந்து செயற்படுகின்ற பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

கிராமிய மட்டங்களில் இருந்து, தேசிய மட்டம் வரையிலான இஸ்லாமிய சமூக கட்டமைப்பு பொறிமுறை ஒன்று அதற்காக உருவாக்கப்பட வேண்டும். நாடுதழுவிய கிளையமைப்புக்களைக் கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிளைகளின் மூலம் அவற்றை ஒருங்கிணைத்து, வழிகாட்டல்களை வழங்கலாம். காலத்துக்குக் காலம் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு பொதுமைப் படுத்தப் பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட தெளிவான உடனடி,இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குகின்ற முழுமையான சிவில் சமூக கட்டமைப்பொன்றாக அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் செயற்படுத்தலாம்.

இஸ்லாமிய அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புகள், கல்விமான்கள், துறை சார்நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என சகலரையும் ஒன்றிணைக்கும் ஒரு மத்திய குழுவாக அதனை நடைமுறைப்படுத்தலாம். அதன் மூலம் அந்தந்த துறைகளில் ஜம்மிய்யாவின் வ்ழிகாட்டலின் கீழ் ஒரு தலைமைத்துவ அலகை உருவாக்கிக் கொள்ள முடியும், அவ்வாறான அமைப்புகள் தொகுதி வாரியாகவும் மாவட்ட ரீதியிலும், மாகாண மட்டத்திலும் உருவாக்கிக் கொள்ளப்படுவதன் மூலம், மிகச் சிறந்த சிவில் சமூக தலைமைத்துவக் கட்டமைப்பை இந்த சமூகம் பெற்றுக்கொள்ளும்.

அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும், எதிர்வினைச் செயற்பாடுகளின் மூலம் நாம் தீர்வுகளைக் காண முற்படுகின்றோம், உணர்ச்சிவயப்பட்டு நாம் மேற்கொள்கின்ற எதிர்வினை நடவடிக்கைகள், சில சந்தர்ப்பங்களில் உடனடியாக மேற்கொள்ள விளைகின்ற அரசியல் நகர்வுகள், அல்லது அறிவுசார்ந்த பிரதிபலிப்புக்கள் கூட நிலைமைகளை மேலும் சிக்கலாக்குகின்ற முன்னுதாரணங்களை நாம் கண்டுமிருக்கின்றோம். அதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு கொள்கையளவிலும், கட்டமைப்பு ரீதியிலும் பொருத்தமான தலைமைத்துவக் கட்டமைப்பொன்று எமக்கு அவசியமாகின்றது.

தேசிய வாழ்வு, அரசியல், பொருளாதாரம், கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி, தொழில்வாய்ப்பு, தொழில் நுட்ப பிரயோகம், ஊடகம், கலை, கலாச்சாரம், சுகாதாரம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, சமாதான சகவாழ்வு, சிறுவர், இளைஞர் மற்றும் மகளிர் விவகாரங்கள், சமூக சேவைகள், அனர்த்த முகாமைத்துவம் என இன்னோரன்ன துறைகளில் முஸ்லிம்களாகிய நாம் நன்கு ஆராயப்பட்ட, மூலோபாய நிகழ்ச்சி நிரல்களை இனம் கண்டு, எல்லாத் தரப்புக்களும் அனுசரித்து நடக்கின்ற தெளிவான வேலைத்திட்டமொன்றை சமூகத்தின் முன் வைக்க வேண்டும். எங்கள் மத்தியில் இருக்கின்ற சகல சிவில் மற்றும் அரசியல் தலைமைகளை தெளிவான நிகழ்ச்சி நிரல்களுக்குள் கொண்டு வருகின்ற பொழுது அவை மேலும் பலப்படுகின்ற நிலைமை உருவாகும்.

அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சகல தரப்புக்களையும் உள்வாங்கத் தக்கதான இத்தகைய சிவில் சமூக தலைமைத்துவக் கட்டமைப்பு நன்கு ஆராயப்பட்ட, முன்னுரிமை அடிப்படையில் வரிசையிடப்பட்ட, நிகழ்ச்சித்திட்டங்களை தயார் செய்து அமுல் படுத்துகின்ற பொழுது, எத்தகைய சவால்களுக்கும் ஒருமைப்பாட்டுடன் சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும் முகம் கொடுக்கின்ற வலிமையை இலங்கை முஸ்லிம்கள் அடைந்து கொள்ள முடியும்.

இவ்வாறான ஒரு முயற்சி, எந்தவொரு அமைப்பையும் பலவீனப் படுத்தி, மேலும் ஒரு புதிய அமைப்பை உருவாக்குகின்ற முயற்சியாக மேற்கொள்ளப்படவும் கூடாது. அவ்வாறு அடையாளப்படுத்தப்படவும் கூடாது. மாறாக நாம் தனித்தனியாக மேற்கொள்கின்ற, தெளிவான அடையாளம் காணப்பட்ட இலக்குகளுடன் கூடிய நிகழ்ச்சி நிரல்களினூடாக ஒருமைப் படுத்துகின்ற பொழுது, எமது காலம், சிரமம், வளங்கள் மீதப் படுத்தப் படுவதோடு, எமது சமூக ஐக்கியம் எனும் விலை மதிக்க முடியாத, பலமான, உறுதியான பாதுகாப்பு அரணும் கட்டி எழுப்பப்படுகிறது.

எந்த ஒரு சமூக நிறுவனமும், விமர்சனங்களுக்கு அப்பால் சகலரையும் திருப்திப்படுத்துகின்ற நிலைப்பாடுகளை எடுக்கவும் முடியாது, அதே நேரம் பலவீனங்கள், குறை நிறைகளில் இருந்து விடுபடவும் முடியாது, எனினும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அந்த நிறுவனங்கள் தமது முன்னோக்கிய நகர்வை, தெளிவான பாதையில் மேகொள்ள உதவுகின்றன, அந்த வகையில் ஜம்மியாவும் பல்வேறு காலத்துக்குத் தேவையான நிறுவனமயப்படுத்தப்பட்ட மாற்றங்களோடு, தனது தொழிற்பாடுகளை நெறிப்படுத்தி, மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

அண்மைக்காலத்தில் ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகள் தொடர்பில், சிற்சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

கூட்டுச் செயற்பாடு

ஜம்மியத்துல் உலமா சபையின் செயற்பாடுகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூட்டுச் செயற்பாடுகளைக் காணக்கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக குறுகிய, குழுநிலை செயற்பாடுகளையே காணக்கிடைக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் முக்கியஸ்தர்களான ரூஹுல் ஹக் மௌலவி, எம்.ஏ.எம்.முபாரக் மௌலவி, ஏ.ஜே.எம். றியாழ் மௌலவி பற்றியும் ஓரிரு வார்த்தைகள் குறிப்பிட வேண்டும்.

ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகத்தின் அனைத்துச் செயற்பாடுகள் குறித்தும், கரிசனை கொள்ளும் நகர்வு அவர்களின் காலப்பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் ஒருகட்டமாக 1980 களின் ஆரம்பப் பகுதியில் முஸ்லிம் சமூக ஐக்கியத்தை கட்டி எழுப்பும் நோக்கில், அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும், முஸ்லிம் அமைப்புக்களையும், முஸ்லிம் அறிஞர்கள், புத்தி ஜீவிகளையும் ஒருங்கிணைக்கின்ற பொறிமுறை ஒன்றை இத்திஹாதுல் முஸ்லிமூன் என்ற பெயரில் ஸ்தாபிப்பதில் பிரதான பங்காற்றியிருந்தார்கள். அத்துடன் அல்-ஹாஜ் ஷாஃபி மரைக்காருடன் இணைந்து, அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டை ஸ்தாபிப்பதிலும் முன்னோடிகளாக இவர்கள் செயற்பட்டமை வரலாறாகும்.

தற்காலம் போன்று மொபைல், வட்சப் போன்ற தொடர்பாடல் வசதிகள் இல்லாத நிலையில், முடிந்த மட்டிலும் ஜம்மியாவின் அனைத்து செயற்பாடுகளையும் கூட்டுச் செயற்பாடுகளாக முன்னெடுப்பதில் அவர்கள் தீவிர கரிசனை காட்டினார்கள். கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை தயார் செய்து, ரோனியோ அச்சில் பிரதி எடுத்து நேரிலும், தபாலிலும் விநியோகித்து அனைவரையும் ஒன்றுகூட்டுவது என்பது அக்காலத்தில் மிகச் சிரமமான விடயமாகும்.

ஆனாலும் எல்லா சிரமங்களின் மத்தியிலும், பல்வேறு முக்கியஸ்தர்களின் அயராத தியாகங்கள் ஊடாக ஜம்மியத்துல் உலமா படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. பின்னைய காலகட்டங்களில் வந்தவர்களும், உரிய பங்களிப்பை வழங்கி, ஜம்மியதுல் உலமா இன்றைக்கு இலங்கை முஸ்லிம்களின் தவிர்க்க இயலாத அமைப்புகளில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இனி வரும் காலங்களில் ஜம்மியத்துல் உலமா சபையின் அனைத்துச் செயற்பாடுகளும், குழுக்கள் மட்ட செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசியல் வழிகாட்டல்

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தற்போது 10 பிரதான பிரிவுகளூடாக தனது சேவைகளை வழங்கி வருகிறது, மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் பத்வாப் பிரிவு, இஸ்லாமிய பிரச்சார தஃவா பிரிவு, ஹலால் ஆய்வு மற்றும் சான்றிதழ் பிரிவு, பிறைக் குழு, கல்விப் பிரிவு, சமூக சேவைகள் பிரிவு, தகவல் பிரிவு, வெளியீட்டுப் பணியகம், சமூக விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான கவுன்சில், இஸ்லாமிய நிதிப் பிரிவு ஆகிய பிரதான பிரிவுகளே அவையாகும்.

இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் அங்கீகரிக்கின்ற, ஒரு சன்மார்க்கத் தலைமைத்துவமாக ஆரவாரமின்றி, தனது பணிகளை மேற்கொண்டு வரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, அண்மைக்காலமாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை கையாள்வதிலும், அவற்றிற்கு முகம் கொடுப்பதிலும், உரிய தரப்புக்களை உள்வாங்கி, காத்திரமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமக்குள் பிளவு பட்டு, தேசிய அரங்கில் வலுவிழந்து தவிக்கின்ற அரசியல் தலைமைகளைக் கூட ஒன்று கூட்டி, சமயோசிதமான சில அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகளையும் தமது சக்திக்கும், வரைமுறைகளுக்கும் உற்பட்ட வகையில் மேற்கொண்டு வருவது சமூகத்திற்கு பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பலம் ஒரு சமுதாயத்தின் இருப்புக்கும், பலத்திற்கும் ஆதாரமாகும். அதற்காக நமது தற்போதைய முஸ்லிம் என்ற பெயரிலுள்ள அரசியல்வாதிகளில் பலர் புரியும் தவறான நடத்தைளை கண்டும் காணாமல் இருந்து விட முடியாது. அதற்குத் துணை போகவும் கூடாது.

அதே நேரம் இஸ்லாம், மனித வாழ்வுக்கான அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கம் என்று போதனை செய்வதோடு மட்டும் விட்டு விடாமல் அதைச் செயலிலும் நிரூபிக்க உலமாக்கள் முன்வர வேண்டும். மனித குலத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இறைவனதும் அவனது தூதரினதும் போதனைகளில் தீர்வு இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம்.

எனவே, உலமாக்களை இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம், முஸ்லிம் சிறுபான்மைச் சூழலுக்குப் பொருத்தமான அரசியல் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு அரசியல் ஞானம் கொண்டவர்களாக, அரசியலில் வழிகாட்டக்கூடியவர்களாக மாற்ற வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளை, உலமாக்கள் தலைமைப்பீடத்தின் கீழ் கொண்டு வந்து. அவர்களை இஸ்லாமிய போதனைகளின்படி சூரா முறையில் வழி நடத்த வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கி எப்போதும் உலமா சபையின் ஆதிக்கத்தின் கீழேயே வைத்திருக்கப்படல் வேண்டும்.

இது விடயத்தில் உலமா சபைக்கு மாபெரும் பொறுப்பு உள்ளதைத் தட்டிக் கழித்து விட முடியாது.

விமர்சனங்கள்

அதே நேரம் ஜனாசா எரிப்பு, ஹலால் சான்றிதழ் விடயங்களில் அநாவசிய சரணாகதி குறித்து ஜம்மியத்துல் உலமா சபை தொடர்பில், சமூக மட்டத்தில் விமர்சனங்கள் இருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

எதிர்வரும் காலங்களில், அவ்வாறான சரணாகதி நிலைப்பாடுகளுக்குப் பதில், சமூகத்தின் சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி, பொருத்தமான மாற்றுத் தீர்வுகளை நோக்கி நகரும் வகையில், ஜம்மியத்துல் உலமா, தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

துறைசார் நிபுணர்கள் குழு

மேற்குறித்தவாறான தவறுகள் நடைபெறுவதற்கான காரணம், துறைசார் விடயங்களில் ஜம்மிய்யாவுடன் ஒத்துழைக்கக்கூடிய நிபுணர்கள் குழுவொன்று இல்லாமையாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், கலகொட அத்தே ஞானசார தேரர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு தொடர்பில், பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதன் போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ஜாவிட் யூசுப், ஞானசார தேரரின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்து, அவரை வாயடைக்கச் செய்வதில் வெற்றி கண்டிருந்தார்.

அத்துடன் சட்டத்தரணி ஜாவித் யூசுப், ஹலால் உற்பத்திகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஞானசார தேரரின் நிலைப்பாடு குறித்தும், கிடுக்கிப்பிடி கேள்வியொன்றை முன்வைத்திருந்தார்.

ஹலால் என்பது, முஸ்லிம் மக்களது உரிமை என்பதோடு அதற்கு தான் எவ்வித எதிர்ப்பினையும் வெளியிடாது இருப்பினும், பல்துலக்கும் பிரஷ், குடிதண்ணீர் போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு கூட, ஹலால் இலட்சினையினை பாவிப்பதில் எவ்வித தேவையும் இல்லை என தான் நம்புவதாக ஞானசார தேரர், கடைசியில் தன் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர நேர்ந்தது.

இவ்வாறாக ஜம்மியத்துல் உலமாவை குறை சொல்ல முயன்ற ஞானசார தேரரை, வாயடைத்துப் போகச் செய்வதில் சட்டத்தரணி ஜாவித் யூசுப் வெற்றி கண்டிருந்தார். இது அவரின் சட்டத்திறமையாகும். அந்த இடத்தில் வேறொரு துறை நிபுணர் இருந்திருப்பின், அதனைச் செய்திருக்க முடியாது.

அண்மையில் கூட ஜம்மியத்துல் உலமாவின் முக்கியஸ்தர்கள் நீதி அமைச்சர், மகளிர் விவகார அமைச்சர், கல்வி அமைச்சர் போன்றோரை சந்திக்கச் சென்றிருந்தார்கள். குறித்த சந்திப்புகளுக்கு அந்தந்தத் துறைசார்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளை அழைத்துச் சென்றிருந்தால், குறித்த அமைச்சர்கள் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டிருக்காது, சட்டத்தின் பிரகாரம், அரசியல் யாப்பு மற்றும் நடைமுறையின் பிரகாரம், நமது உரிமைகளை அந்த இடங்களில் வலியுறுத்தியிருக்க முடியும். அதன் ஊடாக நம் சமூகத்தின் அபிலாசைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கடந்த காலங்களிலும், இவ்வாறு தான் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணையின்போது, அமைப்பின் முக்கியஸ்தர்கள் ஜெனீவா வரைசென்று, அரசாங்கத்துக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

ஆனால் உள்நாட்டில் அதற்கான பிரதிபலனை பெற்றுக்கொள்ளவில்லை. காரணம், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதிபலனைப்பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் வழங்கக்கூடிய, துறைசார் நிபுணர்கள் ஜம்மியத்துல் உலமாவுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

எனவே ஜம்இய்யத்துல் உலமாவின் சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, தொண்டர் அடிப்படையிலேனும் துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும். இவர்களுடன் சேர்ந்து முஸ்லிம் சமூக

விவகாரங்கள், பிரஜைகள் விவகாரங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடனும், அதிகாரிகளுடனும் தொடர்புகளை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் ஈடுபடுவதன் மூலம், முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை இலகுவாக அடைந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இரண்டாம் கட்ட தலைமைத்துவம்

அதே போன்று ஜம்மியத்துல் உலமா சபைக்குள் இரண்டாம் கட்ட தலைமைத்துவம் இன்மை, பெரும் குறைபாடாக நோக்கப்படுகின்றது. திடீரென்று தலைமைத்துவத்துக்கு வரும் நபர்கள், தலைமைத்துவத்தின் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கும். அதற்குப் பதிலாக அவர்கள் படிப்படியாக தயார்செய்யப்பட்டு, தலைமைத்துவத்துக்கு வரும் போது அவர்களின் தலைமைத்துவம் பெரும் வினைத்திறன் மிக்கதாக அமையும்.

தற்போதைய நிலையில் ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் மௌலவி அவர்கள், சகல தரப்பினரதும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார்., ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த தலைமைத்துவத்துக்கு அவரைப் போன்றவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். உண்மையில் அவர் ஆங்கிலம், சிங்களம், தமிழ், அரபி, மலாய், உள்ளிட்ட பல்வேறு மொழியாற்றல்களைக் கொண்டுள்ளார். அவ்வாறானவர்களுக்கு ஜம்மிய்யாவில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்கான

வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அவர் மட்டுமன்றி இன்னும் பலருக்கும் அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சிங்கள மொழி அறிவு

அதே போன்று சிங்கள மொழியில் போதிய தெளிவூட்டல் இன்மையும், ஜம்மியத்துல் உலமாவுக்குள் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும். சிங்கள மொழி அறிவாற்றல் இல்லாத காரணத்தினால் எமது சமூகத்தின் பிரச்சினைகளை, அவற்றுக்கான தெளிவுகளை, சிங்கள சமூகத்திடம் முன்வைப்பதில் நாம் சற்றுப் பின்தங்கியுள்ளோம் என்பதை மறுக்க முடியாது.

அவ்வாறான சிங்கள மொழி அறிவு தொடர்பான சிக்கல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நியமித்த "ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணி முன்பாக ஆக்கபூர்வமான முறையில், எமது உலமாக்களுக்கு கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டது.

குறித்த செயலணி, ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான செயலணி என்பதால், அதில் முஸ்லிம்கள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் என்று, ஜம்மியத்துல் உலமா சபை கூட ஒருதடவை குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதற்கான தெளிவான மொழி அறிவு கொண்ட உலமாக்கள், எம் மத்தியில் குறைவாகவே இருந்தார்கள்.

ஜம்மியத்துல் உலமாவில் ஒருசிலர் மட்டுமே ஓரளவுக்கு சிங்களத்தில் தொடர்பாடல் திறமைகளைக் கொண்டுள்ளார்கள். அந்த நிலைமை இன்னும் விரிவடைய வேண்டும்.

மகளிர் விவகாரக் குழு

பெண்களுக்குத் தேவையான மார்க்க விளக்கங்களை வழங்குவதற்கும், பொருத்தமான வழிகளில் சமூகத்திற்கு சேவை செய்வது பற்றிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும், ஜம்மியத்துல் உலமாவின் கீழ் செயற்திறன் மிக்க, மகளிர் விவகாரக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் இஸ்லாமியப் பெண்கள் பேராசிரியர்களாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, சட்டத்தரணிகளாக பல்வேறு தொழில் சார் நிபுணர்களாக உயர் பதவிகளை வகிக்கின்றனர். புத்திஜீவிகளாக உருவெடுத்துள்ளனர். அவ்வாறான நிலையில் சிற்சில விடயங்களில் பெண்களின் வகிபாகத்தை நாங்கள் மறுக்க முடியாது. பெண்கள் தொடர்பான விடயங்களில், அவர்களின் ஆலோசனைகளைப் புறம் தள்ளவும் முடியாது.

பெண்கள் தொடர்பான சகல விடயங்களையும் அவர்களின் பொறுப்பில் விடப்பட்டு, ஜம்மியத்துல் உலமா அதனை மேற்பார்வை செய்யும் வகையில் மகளிர் விவகாரக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும்

அதேபோன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களில் ஜம்மியத்துல் உலமா சபை போதுமான கவனம் செலுத்துவதுடன், பொருத்தமான தருணங்களில் அவற்றை வெளிக்கொணர வேண்டும். அதன் மூலம் ஏனைய சமூகத்தவர் மத்தியில் எமது சமூகம் வசதியாக, சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருப்பதான தப்பபிப்பிராயம் நிலவுவதை மாற்றிக் கொள்ள வழி செய்யும். இது நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இவ்வாறான தற்கால கட்டத்துக்குப் பொருத்தமான முறையில் ஜம்மியத்துல் உலமா தன்னை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நம் சமூகத்தின் அரசியல், மார்க்க வழிகாட்டல் தலைமைத்துவமாக ஜம்மியத்துல் உலமா செயற்படும். அவ்வாறு செயற்பட வேண்டும் என்பதே இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் எதிர்பார்ப்புமாகும்.

எம்.எச்.எம்.நியாஸ் JP (All Island)
தலைவர்-மீடியா லிங்க்
0777814108

CLICK TO READ PDF👇

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments