
அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், இந்த தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது இந்தியா.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியால் 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், விராட் கோலி 52 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 என்கிற சவாலான ரன்னை குவித்தது.
இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 357 ரன்கள் என்ற கடினமான டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியபோது தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட், பென் டக்கெட் அதிரடியாக ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.
ரன்ரேட் ஓவருக்கு 10 என்று சென்றுகொண்டிருந்தபோது தொடக்க வீரர்கள் சால்ட் 23 ரன்னிலும் டக்கெட் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டாம் பேன்டன் 38 ரன்களும், ஜோரூட் 24 ரன்களும் சேர்த்தனர். கஸ் அட்கின்சன் அதிரடியாக 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34.2 ஓவர்கள் தாக்கு பிடித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments