
முதலில் ரெங்க்மாவின் தந்தை பெரியகல்லை நோக்கிச் சென்றார்!
பொதுவாகத் புதுமணத் தம்பதியினர் தேன்நிலவுக்காக பெரிய கல்லுக்குத்தான் போயிருப்பர் என்ற நினைப்பு கிராமத்தவர் அனைவரிடமும் இருந்தது.
ரங்கு கூட அவர்களைத் தேடி அங்குதான் வந்திருப்பான் என்ற நினைப்பு ரெங்க்மாவின் தந்தைக்கும் வந்ததில் வியப்பில்லை. ஓட்டமும் நடையுமாக அந்த வனத்தை ஊடறுத்து வந்து கல்லின்மேல் ஏறியபோது ரங்கு தூரத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதை அவர் கண்டு கொண்டார்.
ஒழிந்திருந்து பார்த்த அவர் - ரங்கு அங்குமிங்குமாக அலைந்தவாறு புதர்களுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தார்!
பிள்ளைகளை அவன் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றான் என்பதைப் புரிந்துகொண்ட அவர், செரோக்கியும் ரெங்க்மாவும் இங்கில்லை என்ற முடிவுக்கு வந்தார்!
அப்படியானால் அவர்கள் எங்கு சென்றிருப்பர் என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது! இருந்தபோதிலும் இதுவரை பிள்ளைகள் ரங்குவின் கண்களில் படாதது அவருக்கு மன ஆறுதலைத் தந்தது.
அவர்கள் எங்கு சென்றிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் - விடியும் வரை ரங்குவைக் கண்காணிப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தலானார்! சற்று நேரம் செல்ல கானகத்துக் காதல் ஜோடியைத் தேடியலைந்து பட்ட கஷ்டத்தின் களைப்பால் ரங்கு ஓரிடத்தில் அயர்ந்து தூங்கி விட்டதை அவர் கண்டார்!
பெரியகல்லிலிருந்து பார்க்கின்றபோது சூரியன் மெல்ல அடிவானத்திலிருந்து வெளிப்படுவது தெரிந்தது! கல்லின் அடிவாரத்தில் அலவத்தையின் பச்சைப்பசேலென்ற பயிர்கள் பாய்விரித்தாற்போல் காணப்பட்டதன!
‘ரியோனகோ’ வடிகாலிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீர்வீழ்ச்சிப்பகுதிக்குச் சென்று அவர்களைத் தேடலாம்
என்ற முடிவுக்கு வந்த அவர், அதனை நோக்கி நடக்கலானார்.
என்ன ஆச்சரியம் - அவர்கள் இருவரும் ஒருசேர, சந்தோசமாக நீரூற்றில் நீராடிக் கொண்டிருந்தனர். மணவாழ்க்கையின் வெற்றிகரமான முதற்படியைக் கடந்துவிட்ட மகிழ்ச்சிப் பிரவாகத்தை அவர்களது முகங்கள் காட்டின!
இப்பொழுதுதான் ரெங்க்மாவின் தந்தை நீண்டதொரு பெருமூச்சியை விட்டார்! பிள்ளைகள் பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கின்றார்கள் என்ற நினைப்பு அவருக்கு மனநிறைவைத் தந்திருக்க வேண்டும்!
புதுமணத் தம்பதியினரகிவிட்ட கானகத்துக் காதலர்கள், நீராடி முடித்து ஜாகை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்!
ஒழிந்திருந்த ரெங்க்மாவின் தந்தை, அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார்!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments