Ticker

6/recent/ticker-posts

Ad Code



60 ரன்ஸ்.. அமர்க்களமாக துவங்கிய நியூஸிலாந்து.. 4க்கு 0.. 25வது வருடமாக பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்


பாகிஸ்தானில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. உலகின் டாப் 8 அணிகள் விளையாடும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 50 ஓவரில் அபாரமாக விளையாடி 320-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் வில் எங் சதத்தை அடித்து 107 ரன்கள் குவித்தார். அவருடன் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய டாம் லாதம் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து அவுட்டே ஆகாமல் 118* ரன்கள் விளாசினார்.

அவர்களை விட அதிரடியாக விளையாடிய கிளின் பிலிப்ஸ் 61 (39) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 321 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே சவுத் சாக்கில் 6, கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

அதனால் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஜமான் 24 (41) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தடவலாக விளையாடிய பாபர் அசாம் அரை சதத்தை கடந்தாலும் 64 ரன்கள் முக்கிய நேரத்தில் பெவிலியன் திரும்பினார். மிடில் ஆடரில் சல்மான் ஆகா 42 ரன்களும் குஷ்டில் ஷா அதிரடியாக 69 (49) ரன்களும் அடித்து வெற்றிக்கு போராடினாலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள்.

அதனால் 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பவுலிங் செய்த நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 3, வில்லியம் ஓ’ரோர்க்கே 3, மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து குரூப் ஏ பிரிவில் 2 புள்ளிகளைப் பெற்று இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடந்த முத்தரப்பு தொடரையும் வென்ற அந்த அணி கோப்பையை வெல்லாமல் நிற்க மாட்டோம் என்ற வகையில் அசத்த துவங்கியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிராக 4 போட்டிகளில் நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது. 2000 முதல் இதையும் சேர்த்து 25 வருடங்களில் நியூசிலாந்துக்கு எதிராக சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் பரிதாபமாக திண்டாடி வருகிறது.

crictamil

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments