Ticker

6/recent/ticker-posts

Ad Code



உரிமையாளருக்கே தெரியாமல் 7 வருடம் வீட்டில் பதுங்கி இருந்த பலே கில்லாடி பெண்!


வீடுகள் வெறும் செங்கல், சிமெண்ட் மட்டுமல்ல, அவை பல மர்மங்களையும் ரகசியங்களையும் தன்னுள் புதைத்து வைத்திருப்பவை என்பதை உணர்த்தும் ஒரு வினோதமான சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. ஜாங் என்ற பெண்மணி, தான் வசித்து வந்த வீட்டை விற்பனை செய்த பின்னர், புதிய உரிமையாளருக்குத் தெரியாமல் சுமார் ஏழு வருடங்கள் அதே வீட்டில் ரகசியமாக வசித்து வந்த கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜிங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங், 2016 ஆம் ஆண்டு தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். பலரும் முன் வந்தாலும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விற்பனை தள்ளிப்போனது. ஒரு வழியாக 2019 ஆம் ஆண்டு லீ என்பவர் அந்த வீட்டை வாங்க முன்வந்தார். பங்களா போன்ற அமைப்பில், அழகான தோட்டம் மற்றும் இயற்கை சூழலுடன் அமைந்திருந்த அந்த வீடு லீயை வெகுவாக கவர்ந்தது. சுமார் 2.24 கோடி ரூபாய் கொடுத்து வீட்டை வாங்க லீ சம்மதித்தார். வீடு கைமாறியது.

லீ ஒரு பிஸியான தொழிலதிபர். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் வீட்டில் அவர் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. விடுமுறை நாட்களில் மட்டுமே அவர் வீட்டிற்கு வருவது வழக்கம். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக லீ குடியிருக்கும் வீட்டில் ஏதோ அமானுஷ்யம் நடப்பது போல் உணர்ந்தார்.

வினோதமான ஒலிகள், திடீர் வெளிச்சம் என பல வினோத சம்பவங்கள் அவருக்குள் பயத்தை ஏற்படுத்தியது. பேய் பிசாசாக இருக்குமோ என்று பயந்து சில பரிகாரங்களையும் செய்தார். ஆனாலும் அந்த தொல்லைகள் நின்றபாடில்லை. யாரோ வீட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வு அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.

எனவே, ஒருநாள் வீட்டை முழுமையாக சுத்தம் செய்ய முடிவு செய்தார் லீ. பெரிய வீடாக இருந்ததால் சுத்தம் செய்யும் பணி இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தது. அனைத்து அறைகளையும் சுத்தம் செய்த பின்னர் தோட்டத்திற்கு வந்தார். அங்கே ஒரு கழிவறை இருந்தது. இதுவரை அதை அவர் பயன்படுத்தியது இல்லை. நண்பர்கள் யாராவது வந்தால் உபயோகமாக இருக்குமே என்று நினைத்து அதை சுத்தம் செய்ய கதவைத் திறந்தார். அங்கேதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அது சாதாரண கழிவறை இல்லை. கதவுக்கு பின்னால் படிக்கட்டுகள் கீழே செல்வது போல இருந்தது. பயத்துடன் மனதை திடப்படுத்திக்கொண்டு கீழே இறங்கினார்.

அங்கே ஒரு ரகசியவிசாலமான அறை, காற்றோட்ட வசதியுடன், ஒருவர் வசிப்பதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. ஒரு மூலையில் மினி பார் மற்றும் விலையுயர்ந்த மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போதுதான் லீக்கு வீட்டில் பேய் இல்லை, யாரோ மனிதர் தான் இருக்கிறார் என்பதை உணர்ந்தார். மேலும் தேடியபோது அறையின் இன்னொரு மூலையில் பழைய உரிமையாளர் ஜாங் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். லீ ஜாங்கை உடனடியாக வெளியேறும்படி கூறினார். ஆனால் ஜாங்கோ, விற்பனை பத்திரத்தில் இந்த ரகசிய அறையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், எனவே அது தனக்கே சொந்தம் என்றும் கூறி வீட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. நீதிபதி லீக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார். ஜாங் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும், இத்தனை நாட்கள் சட்டவிரோதமாக தங்கியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

இதனால், பலே கில்லாடி ஜாங்கின் தந்திரம் பலிக்காமல் போனது.

kalkionline

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments