
"கிருஷ்ணன் அண்ணே... போஸ்ட்."
வாசலில் சத்தம் கேட்க, வெளியே வந்தார், கிருஷ்ணன்.
டிவிஎஸ் சேம்ப் டூவிலரில் இருந்து இறங்கினார், தபால்காரர் பெருமாள் பிள்ளை.
"ஏடிஎம் கார்டுக்கு பேங்கில அப்ளை பண்ணிருந்தீங்களா..?"
"ஆமாம்... வந்திடிச்சா?"
"ஏடிஎம் கார்டுக்கு பதிலாக, உங்க செல்போனிலே ஜீபே டவுண்லோடு செய்திருக்கலாம். பணம் எடுக்கவோ பணத்தை பேங்கில போடுறதுக்கு, பேங்குக்கு அலைய வேண்டியதில்லை. இதில ஒரு கையெழுத்து போடுங்க..."
நீட்டிய ரெஜிஸ்தர் பேப்பரில் கையெழுத்திட்டார், கிருஷ்ணன்.
"கிருஷ்ணன் அண்ணே... எனக்கு ஒருஉதவி செய்யலாமா.?"
கிருஷ்ணனின் முகத்தில் ஆச்சரியரேகை ஓடியது.
"என்ன விஷயம்?"
"இன்னும் இரண்டு வாரத்தில நான் ரிட்டையாராக போறேன்." சொன்ன பெருமாள் பிள்ளையின் கண்கள் கலங்கியிருந்தது.
"உனக்கு அறுபது வயசாயிடிச்சா? என்னால நம்பவேமுடியலை. இன்னமும் பத்துவருஷமாவது உனக்கு வேலை இருக்கும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். காலம் எவ்வளவு வேகமா போவுது. என்கிட்ட என்னஉதவி எதிர்பார்க்கிறே பெருமாள்..?"
"ரிட்டையர் ஆனதும் வீட்டில சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஏதாவது வேலைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன். மாசம் ஏழாயிரம் ரூபா கிடைச்சாலே போதும். நானும் இரண்டு மூணுபேர்ட்ட வேலைக்குச் சொல்லி வெச்சிருக்கேன்."
"நீ... பேசுறது எனக்கு ஆச்சரியமா இருக்கு. உன்மகன் செலவுக்கு பணம் தருவதில்லையா? எதுக்காக வேலைக்கு போகணும்..?"
"மகன் பிருத்விக்கு குடும்பம்ன்னு ஆயிடிச்சு. அவனுக்கு இரண்டு வயசுல பெண்பிள்ளை இருக்கு. அவனுக்கும் செலவு காரியம்ன்னு நிறைய இருக்கும். எனக்கு கடன்னு ஒண்ணு அஸ்திவாரம் போட்டு பல வருஷமாகுது. அதாவது, பையனோட மேல் படிப்புக்கு வீட்டை அடமானம் வெச்சுதான் பணம் வாங்கி படிக்க வெச்சிருக்கேன். லோண்கூட கிடைக்கிற சம்பளத்தில தான் போகுது. மாசமா மாசம் பதினைந்தாயிரம் ரூபாதான் வரும். அதில பாதி ரூபா, என் மனைவியோட ஆஸ்பிட்டல் செலவுக்கு போயிடுது. ரிட்டையர் பணம் பிடித்தம்போக, ஐம்பதாயிரம் கூட எனக்கு கிடைக்காது. வீட்டுப்பேர்ல இன்னும் மூணுலட்சம் ரூபாய் கடன் இருக்கு. என்னச் செய்யுறதுன்னே தெரியலை. ஏதாவது வேலை கிடைச்சின்னா கைத்தாங்கலா இருக்கும்."
"உன்னோட பேர்லதான் பெருமாள் இருக்கு. ஆனா... வாழ்க்கையில இவ்வளவு பிரச்னையா? எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் வர்ற தைமாசம் முப்பதாம்தேதி பௌர்ணமி அன்றைக்கு, புதுசா சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்க இருக்கார். விசாரிச்சு சொல்றேன்."
புன்னகையை உதிர்த்துவிட்டு, கிளம்பினார், பெருமாள் பிள்ளை.
அந்தப் புன்னகையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உறைந்திருப்பதை உணர்ந்தார், கிருஷ்ணன்.
மூன்றுமாதங்களுக்கு பிறகு.
இரவுமணி எட்டு இருபது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் மட்டைவீச்சாளர், கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து கைத்தட்டி ரசித்தான், பிருத்வி.
"சிஎஸ்கே ஜெய்சிருவாங்கன்னு நினைக்கிறேன், ரம்யா."
ரம்யாவும், அவனுடன் சேர்ந்து ரசித்தாள்.
"இன்னும் பத்துபால் தான் இருக்கு. பனிரெண்டு ரன்தான் தேவை. இரண்டு சிக்ஸர் அடிச்சாலே நாம பைனலுக்கு போயிடலாம். இந்த முறையும் கோப்பை நம்ம சிஎஸ்கேவுக்கு தான், ரம்யா."
"சரி... இன்னிக்கு மேட்சை ஜெய்ச்சிடுவாங்க. நான் போன மாசமே உங்கிட்ட கேட்ட விஷயம் என்னாச்சுங்க...?"
"பணம் விஷயம்தானே? எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன். இரண்டுவாரம் அவகாசம் கேட்டிருக்கார். பெரிய தொகை. அதனாலதான் அவர் யோசிக்கிறார்ன்னு நான் நினைக்கிறேன்..."
"நான் ஒருவிஷயம் சொல்றேன். நீங்க பணத்து எங்கேயும் போய் கடனுக்காக அலையவேண்டாம். உங்கப்பா இருக்கிற வீடு எப்டியும் நமக்குதானே சொந்தம். பேசாம வித்திடலாம்ங்க."
ரம்யாவின் பேச்சில் அதிர்ந்துபோனான், பிருத்வி.
"என்னது வீட்டை விற்கிறதா? வீடு எங்கம்மா பேர்லதான், அப்பா உயில் எழுதி வெச்சிருக்கார். அவங்க இரண்டுபேரோட காலத்திற்கு பிறகு பேத்திக்குன்னு எழுதி வெச்சிருக்கார். இத்தனை விஷயங்களும் தெரிஞ்சுமா பேசுறே, ரம்யா."
"இங்கப்பாருங்க. என்னோட முப்பது சவரன் நகையை அடமானம் வெச்சுத்தான், டவுண்ல பத்துசென்ட் இடத்தை வாங்கியிருக்கோம். பெரிய வீடா கட்டணும்ன்னு ஆசைப்பட்டு வாங்கினது. உங்கப்பா இருக்கிற வீட்டை வித்திட்டா, என்னோட நகைகையும் திருப்பிடலாம். வீட்டையும் கட்டிடலாம். கடன் வாங்கவேண்டிய அவசியமே இருக்காது. உயில மாத்தி உங்கபேர்ல எழுதச்சொல்லுங்க. யோசியுங்க..."
அதேநேரத்தில்
செல்போன் அழைப்பு சிணுங்கியது.
அழைப்பில் ஆபிஸ் எம்.டி தொடர்பில் இருந்தார்.
"வணக்கம் சார்...!"
நாற்பது விநாடி கழிந்தது.
"ரம்யா... என்னோட எம்.டி பேசினார். நாளைக்கு காலைல நான் திருவனந்தபுரம் ஹெட் ஆபிஸூக்கு போகணும். இம்மீடியட்லியா ஒரு மீட்டிங்யை, ஈவனிங் அட்டெண்ட் பண்ணவேண்டியிருக்கு. எம்.டி அவருக்கு பதிலாக என்னைப் போகச் சொல்லியிருக்கார். டிரெஸ் எல்லாம் அயர்ன் செய்திட்டு, சீக்கிரமா தூங்கணும். டிபன் எடுத்துவை..."
சிலநாட்களுக்குப் பிறகு.
பெருமாள் பிள்ளை வீடு.
"அம்மா எங்கேப்பா...?" கேட்ட பிருத்வியின் கண்கள் சமையலறை பார்த்தது.
"இன்னிக்கு சனிப்பிரதோஷம் சிவன் கோவிலுக்கு போயிருக்கா. வர்றதுக்கு நேரமாயிடும். நீ வந்த விஷயத்தைச் சொல்லு..?"
"வயசான காலத்தில சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு எதுக்கு போறீங்க. வீட்டில உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.?"
"பரவாயில்லடா... வீட்டில உட்கார்ந்திருந்தாலும் இந்த கையும் காலும் சும்மா இருக்கவிடுறதில்லை. அதனாலதான் மனநிம்மதிக்காக வேலைக்குப் போறேன்."
"எதுக்காக வேலைக்கு போறீங்கன்னு எனக்குத் தெரியும்ப்பா. என் மேல்படிப்புக்காக பேங்கல வீட்டுப் பத்திரத்தை கொடுத்து, என்னை படிக்க வெச்சீங்க. அதை திருப்புறதுக்காக தான் வேலைக்குபோறீங்க? இனிமேல் வேலைக்கு போகவேணாம். இதை வாங்கிக்குங்க."
கனமான பார்சலை வாங்கி பிரித்தார், பெருமாள் பிள்ளை.
"இவ்வளவு பணம் எதுக்குடா, எனக்கு."
"நம்ம வீட்டுமேல கடன் இருக்குன்னு எனக்குத்தெரியும். இந்த மூணுலட்சம் ரூபாவை பேங்கில கட்டிட்டு வீட்டுப் பத்திரத்தை வாங்கிடுங்க..."
யோசனையில் ஆழ்ந்தார், பெருமாள் பிள்ளை.
"என்ன யோசிக்கிறீங்கன்னு நான் சொல்லட்டுமா? பேங்கில அடமானம் வெச்சிருக்க ரம்யாவோட நகையை திருப்பலாம்ன்னு நினைக்கிறீங்க. அடமானம் வெச்ச பத்துலெட்சம் ரூபாய் நகையை நேற்றுதான் திருப்பினேன். வீடு கட்டுறதுக்கு பேங்கில லோண் கேட்டிருந்தேன். வர்ற புதன்கிழமை கிடைக்கும். சித்திரைமாதம் பத்தாம்தேதி, தறி வெச்சு, வீட்டுவேலை ஆரம்பிக்கிறேன். அவசியம், நீங்களும் அம்மாவும் வந்திடணும். இன்னொரு முக்கியமான விஷயம்...?
"மூணுலெட்சம் பணம் விஷயம்தானே? நான் யார்ட்டயும் சொல்லமாட்டேன். உன்மனச பற்றி எனக்குத் தெரியாததா. நீ கவலைப்படாம கிளம்பு, பிருத்வி."
ஆச்சரியமுடன் பார்த்தவன்,"அம்மாகிட்ட வீடு கட்டப்போற விஷயத்தைச் சொல்லுங்க. நான் போன்ல பேசிக்கிறேன். கிளம்புறேன்ப்பா..."
வெளியேவந்த பிருத்வி, யோசிக்க ஆரம்பித்தான்.
அப்பாவிடம் முப்பதுலெட்சம் ரூபாய் கிடைத்த விபரத்தைச் சொல்லிருக்கலாமா? என்று தோன்றியது.
அன்றுமட்டும் எம்டி என்னை திருவனந்தபுரம் மீட்டிங்கிற்கு போகச் சொல்லாமல் இருந்திருந்தால்...
திருவனந்தபுரம் இரெயிவே ஸ்டேஷனில், பார்வையற்ற ஒருவர் கையில் வைத்திருந்த கேரளா பம்பர்பரிசு லாட்டரி சீட்டை நான் வாங்க மறுத்திருந்தால்...
இந்த முப்பதுலெட்சம் ரூபாய் பரிசுத்தொகை எனக்கு கிடைத்திருக்குமா? அப்பா இருக்கும் வீட்டையும் விற்காமல் காப்பாற்றிவிட்டேன்.
எனக்கு தெரிந்த ரகசியம் என்னோடு இருக்கட்டும். ஸாரி... அப்பா.!
நாகர்கோவில்-கோபால்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
2 Comments
மிக்க அன்பில்
ReplyDeleteஎன் அன்பு அண்ணா
நீண்ட நாட்களுக்கு பிறகு எனது சிறுகதை.
சிறப்பு இனிய அன்புத் தம்பி
ReplyDelete