
கேரள ராபரி சினிமாக்களை எல்லாம் 2 அடி தள்ளி நிறுத்தி விட்டது நிஜத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது இந்த வங்கிக் கொள்ளை சம்பவம். இரண்டே நிமிடத்தில் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர் இரண்டே நாட்களில் சிக்கியது எப்படி?.
கேரளாவில் மனைவி அனுப்பிய பணத்தை ஆடம்பரமாக செலவழித்துவிட்டு வங்கிக்குள் புகுந்து 15 லட்ச ரூபாய் கொள்ளையடித்துச் சென்றவர் 2 நாட்களில் வசமாக சிக்கியுள்ளார். கொள்ளையன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் அவரை சிக்க வைத்தது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
திருச்சூர் மாவட்டம் போத்தா பகுதியில் பெடரல் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் ஸ்கூட்டரில் நோட்டம் விட்டபடி வங்கிக்கு வந்துள்ளார். தலைக்கவசம், ஜாக்கெட், கையுறை மற்றும் முதுகில் ஒரு பை என தயாராக வந்திருந்த அந்த நபர் வங்கிக்குள் அதிரடியாக நுழைந்தார். அப்போது உணவு இடைவேளை என்பதால் பலரும் சாப்பிடுவதற்காக சென்றிருந்தனர். அதனால் வங்கிக்குள் கூட்டம் குறைவாக இருந்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த மர்மநபர் பணியிலிருந்த 2 ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்களை கழிப்பறைக்குள் தள்ளி பூட்டியிருக்கிறார். பின் அங்கிருந்த நாற்காலியைப் பயன்படுத்தி பணம் இருந்த கவுண்டரின் கண்ணாடி அறையை உடைத்து, அங்கிருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த முழு சம்பவத்தையும் இரண்டரை நிமிடங்களில் அவர் நடத்தி முடித்திருக்கிறார்.
சில நிமிடங்களில் அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ந்துபோன வங்கி ஊழியர்கள் உடனே இதுகுறித்து சாலக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, மர்மநபர் கண்ணாடிகளை உடைத்து கொள்ளையடிக்கும் காட்சிகளும், பணத்துடன் ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது தெரியவந்தது. ஆனால் மர்மநபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் யார் அவர்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.
பணத்துடன் வெளியேறிய அந்த நபர் தனது ஸ்கூட்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த இருசக்கரவாகனத்தின் பதிவெண்ணும் போலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அந்த ஸ்கூட்டரின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர். குறிப்பாக வங்கிக்கிளைக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்கு யாரெல்லாம் இந்த வகை ஸ்கூட்டரில் ஏற்கெனவே வந்து சென்றிருக்கிறார்கள் என்பதை போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்போது தான் ரிஜோ ஆண்டனி என்பவர் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு அதே ஸ்கூட்டரில் வந்து சென்றது தெரியவந்தது. ரிஜோ ஆண்டனியை குறி வைத்த போலீசார் அவரைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
பிடிபட்ட ரிஜோ கொள்ளையை எப்படி நடத்தினார்? கொள்ளைக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். வங்கிக்கு எதிரே உள்ள தேவாலயத்திற்குச் செல்வதைப் போல, வங்கியின் நடவடிக்கைகளைக் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் ரிஜோ. வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அந்த சமயத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காகப் போலி வாகன எண்ணை உருவாக்கி தன் ஸ்கூட்டருக்கு பொருத்தியிருக்கிறார்.
ஆனால், ஸ்கூட்டரின் அடையாளம் ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால் சிக்கிக் கொண்டார். வேலையில்லாமல் சுற்றி வந்த ரிஜோ ஆண்டனி, வெளிநாட்டில் பணிபுரியும் அவரது மனைவி அனுப்பிய பணத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார். மனைவி அனுப்பிய பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்து வந்ததால், சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடனாகியிருக்கிறது. அடுத்த மாதம் அவரது மனைவி வீடு திரும்பவிருந்த நிலையில், மனைவிக்கு தெரிந்து விடக் கூடாது என்ற பயத்தில், அனைத்து கடனையும் அடைத்து விட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்.
அதற்காகக் கடந்த இரண்டு வாரங்களாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார் ரிஜோ ஆண்டனி. மேலும் வங்கி கேஷ் கவுண்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், தனக்குத் தேவை 15 லட்சம் தான் என்பதால் அதை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் அப்பாவியாக கூறியிருக்கிறார் ரிஜோ. அதற்காக தங்கக் கம்பி கூண்டிலா அடைக்க முடியும் என அவரை கைது செய்த போலீசார் இரும்புக் கம்பிகள் பொறுத்தப்பட்ட சிறையில் அடைத்தனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments