
சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அதன் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் அவர்களை நியமித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனது நியமனத்தின் பின்னர், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை திரு. ஆர். பாலகிருஷ்ணன் சந்தித்து உரையாடியுள்ளார்.
நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப்புதிர் பற்றிய ஆய்வில், உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து வருகின்றார்கள்.
அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழி வகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிப்படுத்தும் நபர் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அண்மையில் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
சென்னை ரோஜா முத்தையா நூலகத்திலுள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகரான திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள், தமிழ்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்கள் உள்ளங்களில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரியான இவர், ஓர் எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், கவிஞருமாவார். தமிழில் இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது முதலாவது நூல் 1991ல் 'அன்புள்ள அம்மா' என்ற மகுடத்தில் வெளியானது.
சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியில் நாட்டம் கொண்ட இவர், அதன் செழுமையையும் நுணுக்கங்களையும் ஆராய்வதில் மகிழ்ச்சி மிகக் கொண்டவராவார்.
தாய்மொழி மீதான அன்பை தீவிரமாகப் பின்பற்றிவரும் இவர், தமிழ்மொழி வரலாற்றை ஆய்பவருமாவார்.
தனது அறிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பணிவான ஒருவரான பல்துறை ஆளுமை கொண்ட திரு ஆர். பாலகிருஷ்ணன் 1958ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தத்தில் பிறந்தவர்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் பத்திரிகைத்துறையில் பட்டம் பெற்றார்.

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை சந்தித்து உரையாடினார்!
காமராஜரின் உரைகளில் உத்வேகம் கண்ட இவர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளைத் தமிழிலேயே முதன்முதலில் எழுதி,1984ம் ஆண்டு இந்திய நிர்வாக அதிகாரியானார்.
பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் வழிக் கல்வியுடன் இவ்வளவு உயரங்களை எட்டிய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் இவர் பெருமைப் படுத்தப்படலாம்.
ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலரும், இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளருமான இவர், ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றிய பின்னர், தனது ஓய்விற்குப் பிறகு, தற்போது அதே மாநில முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக பணியாற்றி வருகின்றார்.
இவரின், தமிழ் மொழி மீதான ஈடுபாட்டை வெறும் பாசம் அல்லது ஆர்வம் என்று முத்திரை குத்த முடியாது. அதை விடவும் அதிகமானது என்றுதான் கூற வேண்டும்.
இவர் தமிழ்மொழி மீது கொண்ட காதலோடு, இந்தியாவையும் அதன் அனைத்து கலாச்சாரங்களையும் பன்முகத் தன்மையையும் நேசிப்பவர் என்று கூடக் குறிப்பிடலாம்.
அவர் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை 'வேட்டை' வாழ்த்தி வரவேற்கின்றது!
ஐ. ஏ. ஸத்தார்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
1 Comments
நண்பர் பாலாவின் நியமனம் குறளுக்குப் பெருமைசேர்க்கும் நியமனம். ஐயா சத்தார் அவர்களின் தமிழ் ஈடுபாடு உள்ளங்கை நெல்லிக் கனிபோன்றது. வேட்டை இதழில் வெளியிட்டமைக்கு நன்றி. உயர்ந்த பதவிக்குத் தகுதியானவரை நியமித்ததற்கு நன்றி.
ReplyDelete