
பயிரிடப்படாத சகல இடங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு கடந்த 2025.02.15ம் திகதி ஊடகச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தது.
நாடளாவிய ரீதியாக, பயிரிடப்படாத இடங்களை அடையாளம் காண்பதற்கு நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
பயிரிடப்படவில்லை என அடையாளம் காணப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு கடிதமொன்று கையளிக்கப்படுமென பிரதியமைச்சர் கூறியிருப்பதும், குறித்த நிலம் பயிரிடப்படாமல் கைவிடப்பட்டுள்ளமைக்கான காரணங்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீர்ப் பிரச்சினை, விலங்குகள் பயிர்களை அழிப்பது, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக மட்டுமன்றி வேறும் சில அரசியல், சமூகப் பிரச்சினைகள் மற்றும் அரச அதிகாரிகளின் கெடுபிடிகள் போன்ற இன்ன பல காரணங்கள் தரிசு நிலங்கள் பயிரிடப் படாமைக்கு முக்கிய காரணங்களாகக் காணப்படலாமெனவும், இவற்றை அறிந்து கொள்வதன் மூலமும் தரிசு நிலங்களை விவசாயத் துறைகளில் மட்டுமல்லாது, பண்ணைத் தொழில் போன்ற வேறும் பல துறைகளிலும் ஊக்குவிக்கப் படலாம் என்பது எமது அபிப்பிராயமாகும்.

அடையாளம் காணப்படும் காரணங்களுக்கு இயலுமான வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் குறிப்பிடப்பட்டிருப்பதும், காணி உரிமையாளரினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத பட்சத்தில், வேறு நபரினூடாக பயிர்ச்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் குறிப்பிடப் பட்டிருப்பதும் வரவேற்கத் தக்க விடயமாக இருந்தாலும், இதனைச் சாக்காகக் கொண்டு முறைகேடுகள் நடந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் அமைச்சின் பாரிய பொறுப்பாகும்.
இன்று ஆரோக்கியமான மாற்று உணவை நாடும் மனநிலையில் உலக மக்கள் உள்ளனர். உலகின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாறி முன்னேறிச் செல்ல வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கு மற்றும் தாமரைவிதை, அல்லிவிதை சார்ந்த உணவு வகைகள் உலகில் இன்று அதிக பிரபல்யம் மிக்க உணவாக மாறி வருகின்றன.
இலங்கையில் மரவள்ளிக் கிழங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத இடம் என்று எதுவும் இல்லை. ஆனால், இவை சார்ந்த உற்பத்தி பொருட்களிற்கு பெறுமதி சேர்ப்பு செய்து உலகிற்கு வழங்க முறையான கைத்தொழில் மயமாக்கப்பட்ட திட்டம் இலங்கையில் இல்லை.

தாமரை மலர்கள் மற்றும் விதைகள், பைன் விதைகள் என்பன அதிக இலாபத்தை தரக்கூடியன. இலங்கையில் வெவ்வேறு அளவிலான உள்நாட்டு நீர் நிலைகளில் தாமரை, அல்லி இனங்கள் இயற்கையாக வளருகின்றன. இவற்றை பயிர்ச்செய்கையாக மேற்கொள்வதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
அத்துடன் மலையகத்தில் அதிகமாக பைன் மரங்கள் உள்ளன. இதன் விதை இன்று உலகில் சிறப்பு உணவாக மாறிவருவதாகவும், ஒரு கிலோ பைன் விதை 700 டொலர்கள் வரை உலக சந்தையில் விலை போவதாகவும் அண்மைக்காலச் செய்திகளின் மூலமாக அறிய முடிகின்றது.
அதனால், இலங்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளாத நிலங்களில் இவற்றின் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிப்பது அமைச்சின் பொறுப்பாகும்!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments