Ticker

6/recent/ticker-posts

Ad Code



GovPay மூலம் மக்களின் அலைச்சலும் அழுத்தமும் குறையும்: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க


டிஜிட்டல் சமூகத்தை நோக்கி இலங்கையை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay),  ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச, தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

இந்நிகழ்வின் போது கருத்துரைத்த ஜனாதிபதி, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள் மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான, மேலும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூரப் பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையைச் செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம், அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிக்கொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்

nambikkai

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments