குழந்தைகளை பார்சலில் அனுப்பிய அமெரிக்கர்கள்..! 1,100 கிலோ மீட்டர் பயணித்த குழந்தை

குழந்தைகளை பார்சலில் அனுப்பிய அமெரிக்கர்கள்..! 1,100 கிலோ மீட்டர் பயணித்த குழந்தை


இப்போதெல்லாம் கொரியர் மூலம் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சம் 24 மணி நேரத்துக்குள் எந்த பொருளையும் எங்கும் அனுப்பிவிட முடியும். வெளிநாடுகளுக்கு என்றால் கூட விமான சேவை இருக்கும் இடத்தில் இருந்து அனுப்பினால் அதிகபட்சம் 40 மணி நேரத்துக்குள் உலகின் எந்த மூளையில் இருப்பவருக்கும் பொருளை முறையாக கொண்டு சேர்த்துவிட முடியும். அந்தளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் கூட சில நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், 1900 ஆம் ஆண்டுகளில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பொருளை கொண்டு சேர்ப்பதில் இருக்கும் சிரமங்களை யோசித்து பாருங்கள். அப்படி இருந்தும் 1,100 கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு குழந்தைகளை தபால் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாம் உண்மையில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் தபால் மூலம் குழந்தைகளை ஓர்இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அந்த காலகட்டத்தில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா தபால் சேவை உலக நாடுகளுக்கு டெலிவரி கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் 1913 ஆம் ஆண்டு உள்ளுர் பகுதிகளுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது, கோழி, முட்டைகள் உட்பட குழந்தைகளைக் கூட அந்த தபால் சேவை மூலம் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பியுள்ளனர். ரயில் பயணம் அப்போது விலை உயர்ந்ததாக இருந்தால் பெற்றோர்கள் தபால் மூலம் குழந்தைகள், தாங்கள் விரும்பும் ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான செலவு ரயில் பயணத்தை விட மிக குறைவாக இருந்ததால் பெற்றோர்கள் இந்த வழியை தேர்ந்தெடுத்தனர்.  ஓஹியோவைச் சேர்ந்த வெர்னான் என்ற குழந்தையை பெற்றோர், 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்திருக்கின்றனர். இதற்காக 15 சென்ட் கட்டணத்தை கொடுத்திருக்கிறார்கள். 

ஓக்லஹோமா பெண் ஒருவர் தனது இரண்டு வயது பேரனை கன்சாஸின் வெலிங்டனில் உள்ள சிறுவனின் அத்தைக்கு பார்சலில் அனுப்பினார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தியே வெளியிட்டிருக்கிறது. 1914 ஆம் ஆண்டு பெண் ஒருவர் தன் மகனை கணவர் இருக்கும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப, அங்கிருந்த அப்பெண்ணின் மாமியார் சிறுவனை பெற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார். ஏனென்றால் அப்பெண், தன்னுடைய மகனை விவாகரத்து செய்துவிட்டதால் அந்த சிறுவனை பெற்றுக் கொள்ளமாட்டேன் என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இது குறித்து தகவலறிந்த சிறுவனின் தந்தை தபால் நிலையத்துக்கு சென்று மகனை அழைத்து வந்திருக்கிறார். 

இதேபோல் 1915ல் புளோரிடாவின் பென்சகோலாவைச் சேர்ந்த எட்னா நெஃப் என்பவர் தனது ஆறு வயதில், வர்ஜீனியாவின் கிறிஸ்டியன்ஸ்பர்க்கில் இருந்து சுமார் 1,100 கிமீ தொலைவில் வசிக்கும் அவரது தந்தைக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டார். அவரது பயணம் குறித்து அதிகம் தெரியவில்லை. இதுதான் அதிக தூரம் அஞ்சல் அனுப்பபட்ட குழந்தையாக அப்போது இருந்திருக்ககூடும் என யூகிக்கப்பட்டது. இதுபோன்ற பல சுவாரஸ்ய சம்பவங்கள் அமெரிக்கா தபால் சேவையில் பொதித்து கிடக்கின்றன. 

zeenews
 


 



Post a Comment

Previous Post Next Post