
துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தானின் தோல்விக்குப் பின்னர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசியபோது, விராட் கோலியின் உடற்தகுதியை வெகுவாகப் பாராட்டினார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய ரிஸ்வான், “முதலில் நான் விராட் கோலியைப் பற்றிப் பேசியாக வேண்டும். அவரது உழைப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் நிச்சயம் கடினமாக உழைத்திருப்பார். அவர் ஃபார்மில் இல்லை என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் உலகமே எதிர்ப்பார்த்திருக்கும் இதுபோன்ற முக்கியப் போட்டிகளில் அவர் வந்து எளிமையாக ரன் எடுத்து விடுகிறார். நாங்கள் அவரிடம் ரன் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அவர் எடுத்துவிடுகிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து தங்கள் அணி வெளியேறும் நிலையில் இருப்பதை ரிஸ்வான் ஒப்புக்கொண்டார். இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கதேசம் நியூசிலாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால், இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
ஆனால் பிற அணிகளைச் சார்ந்து இருக்கும் சூழலை ரிஸ்வான் விரும்பவில்லை என்றும், வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும், இல்லையேல் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதே தனது அணுகுமுறை என்றும் தெரிவித்தார். தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்வு செய்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரிஸ்வான், அந்த முடிவைத் தான் ஆதரிப்பதாகவும், இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் ஒருவர்தான் பிரதான சுழற்பந்து வீச்சாளர் என்றும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் சல்மான் அலி ஆகா மற்றும் குஷ்தில் ஷா ஆகியோரும் ஆல்ரவுண்டர்களாக விளையாடுகின்றனர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திட்டமிடல் சரியாக அமையவில்லை என்பதை ரிஸ்வான் தெரிவித்ததோடு, இந்த மைதானத்தில் 270 - 280 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானது என்று தாங்கள் கருதியதாகவும், ஆனால் அதற்குத் தகுந்தவாறு விளையாட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வி நிலவரங்கள், பாகிஸ்தான் அணி அரையிறுதியில் தகுதி பெறுவதைப் பாதிக்கும் நிலை உள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments