Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாகிஸ்தான் ராணுவ வாகன தாக்குதலில் 90 பேர் பலி? அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பலூச் விடுதலை ராணுவம்


பாகிஸ்தானில் ராணுவ வாகனங்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தற்கொலைப் படை தாக்குதலில், 90 பேர் உயிரிழந்ததாக பலோச் விடுதலை படை தெரிவித்துள்ளது. மேலும் பலோச் விடுதலை படை நடத்திய தாக்குதலின் வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ராணுவ வாகனம் மீது அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல்கள் வீடியோ பதிவாகி உள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள க்வெட்டாவில் இருந்து ஈரானின் எல்லைப் பகுதியை ஒட்டி டாஃப்டான் என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, நாஷிக் என்ற இடத்தில், ராணுவ வாகனங்களை குறி வைத்து வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற கார் மூலம் தற்கொலைப்படை தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பலோச் விடுதலை படை, 90 வீரர்கள் உயிரிழந்ததாக கூறியது. ஆனால், இத்தாக்குதலில் 7 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகவும், 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. கடந்த வாரம் 450 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்திய பயங்கரவாத அமைப்பினர், தற்போது ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திருப்பது பாகிஸ்தானில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பலூச் விடுதலை ராணுவம்... யார் இவர்கள்?

வரலாற்று ரீதியாக, பலுசிஸ்தான் தனித்துவமான கலாச்சார மற்றும் பழங்குடி அடையாளங்களைக் கொண்ட ஒரு சுதந்திரப் பகுதியாக இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி பலுசிஸ்தான் மாகாணம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தானை வலுக்கட்டாயமாக கைப்பற்றியது.

பலுசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைத்ததுமே அங்கு பிரிவினை கோரிக்கை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்த நேரத்தில், பலுசிஸ்தானின் அங்கமாக இருந்த கலாட் மாநிலத்தின் இளவரசர் கரீம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் 1960 களில், ஒரு ஆயுதக்குழு உருவானது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களை அந்நாட்டு ராணுவம் ஒடுக்கி வந்தது.

தற்போது பல பிரிவினைவாத குழுக்கள் பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பழமையானது மற்றும் மிகவும் திறன்வாய்ந்த அமைப்புகளில் ஒன்று பிஎல்ஏ என்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.

இந்த அமைப்பு முதன்முதலில் 1970-களின் முற்பகுதியில் உருவாகியதாக நம்பப்படுகிறது. சுல்பிகர் அலி பூட்டோவின் அரசுக்கு எதிராக பலுச் ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கியது. ஆனால் ஜியாவுல் ஹக் ஆட்சிக்கு வந்த பிறகு பலுச் சமூக தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அதன் முடிவில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவமும் கலைக்கப்பட்டது.

பின்னர் அது மீண்டும் 2000-ஆம் ஆண்டில் செயல்பட தொடங்கியது. அன்று முதல் இந்த அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் 2005 ஆம் ஆண்டு கோலுவுக்குப் பயணம் செய்த போது ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

2007 ஆம் ஆண்டு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கடற்படை மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தங்களது பலத்தை வெளிக்காட்டியது பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments