Ticker

6/recent/ticker-posts

உடல் எடையை குறைக்க டயட் இருக்கிறீர்களா? தவறுதலாக கூட இதை செய்யாதீர்கள்!


உடல் எடையை குறைப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. இதற்கு கடுமையான உடல் கட்டுப்பாடுகள் மற்றும் பயிற்சி தேவைப்படுகிறது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கும், உடலை பராமரிப்பதற்கும் உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை உள்ளடக்கிய ஒரு சீரான மற்றும் முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது. இது ஒரே இரவில் முடியும் பயணம் அல்ல. இதற்கு உறுதிப்பாடு, பொறுமை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்களில் பலரும் ஹெல்த் டிப்ஸ் சொல்ல தொடங்கி உள்ளனர். பலரும் கண்ணை மூடிக்கொண்டு இதனை பாலோ செய்கின்றனர்.

டயட்டால் ஏற்படும் பாதிப்பு!

உடல் எடையை குறைக்க பலரும் பரிந்துரைக்கும் ஒரு வழி டயட். இதில் உணவு எதுவும் எடுத்து கொள்ளாமல் வெறும் பழச்சாறுகள் மட்டும் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முறை குறிப்பிடத்தக்க உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய கட்டுப்பாடான உணவு முறைகளால் குடல் அதிக அளவு பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. உடல் எடையை குறைக்க வெறும் சாறுகளை மட்டும் குடிப்பவர்களுக்கு குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக பாதிப்பு ஏற்படலாம்!

இதற்கு முக்கிய காரணம் சாறுகளில் நார்சத்து இல்லாதது. குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது; இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. போதுமான நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல், உடல் எடையை குறைக்க சாறுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது குடல் நுண்ணுயிரிகளின் மென்மையான சமநிலையை சீர்குலைக்கும். இந்த மாற்றம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைத் தடுப்பது மட்டுமல்லாமல், இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கும் பங்களிக்கும்.

மேலும், இத்தகைய உணவுக் கட்டுப்பாடுகளின் விளைவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்துகின்றன. இது போன்ற டயட்டை மேற்கொள்வது குடல் மட்டும் இன்றி, மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கலாம், அறிவாற்றல் திறன்களை பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாறுகளை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் வாய்வழி மற்றும் குடல் நுண்ணுயிரிகளை மட்டுமல்ல, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதனால் தனிநபர்கள் நோய்க்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

உடல் எடையை குறைக்க இத்தகைய குறுக்குவழி உணவுகள் ஆரோக்கியத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அதே வேளையில் குறைந்த பட்ச பலன்களை மட்டுமே அளிக்கின்றன. இந்த டயட் முறைகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், உடலுக்கு நல்லது இல்லை. உடல் எடையை குறைக்க விரும்புவோர் நல்ல நார்ச்சத்துள்ள உணவு, வழக்கமான உடல் செயல்பாடு மற்றும் பயனுள்ள மன அழுத்த மேலாண்மை மேற்கொள்வது அதிக பயனளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

zeenews


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments