
அமெரிக்காவுக்கு செல்ல விசா கிடைக்காதா? என நீண்ட வரிசையில் மற்ற நாடுகளின் மக்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் அந்நாட்டு மக்களோ அங்கிருந்து குடிபெயர்ந்து விட வேண்டும் என நினைப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த Talker என்ற ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்க மக்களின் விருப்பம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் 44 சதவிகித மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 17 சதவிகிதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளியேறி விட வேண்டும் என்றும் 2 சதவிகிதம் பேர், இதற்கான நடைமுறைகளை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். ஐந்தில் இருவர் அமெரிக்காவில் வாழ்வது, மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.
அதிலும் மில்லினியல்கள் என அழைக்கப்படும் 1980 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் 25 சதவிகிதம் பேர், வேறு நாடுகளுக்கு குடிபெயர வேண்டும் என கூறியுள்ளனர். பொருளாதார சீர்குலைவுகள், அதிகரிக்கும் கடன், கட்டுப்படியாகாத வீட்டு வாடகை ஆகியவற்றை மில்லினியல்கள் காரணமாக கூறியுள்ளனர். கனடாவை 51 ஆவது மாகாணமாக அமெரிக்காவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், அந்நாட்டிற்கு குடிபெயரவே அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கனடாவின் சுகாதாரத் திட்டம், பணி மற்றும் வாழக்கைக்கு இடையேயான சம நிலை ஆகியவவை சிறப்பாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது இத்தாலி, அந்நாட்டின் சுவையான உணவு மற்றும் இயற்கை அழகு தங்களை கவர்வதாக அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். அமெரிக்கர்களின் 3 வது விருப்ப தேர்வாக இங்கிலாந்து உள்ளது. ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா ஸ்காட்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகள் விருப்ப பட்டியலில் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளன. பத்தில் 7 பேர், அமெரிக்கா தற்போது செல்லும் திசை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழ்வது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பதாகவும், சுகாதாரம் மற்றும் வீட்டு வாடகை எட்டா கனியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் அதிக அளவிலான மக்கள் குடிபெயரும் பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம், மற்றும் தொழில்துறை பாதிக்கப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், கலாசாரம் மற்றும் அரசியல் இயக்கமே ஒட்டு மொத்தமாக மாற வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments