
வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் கோடை வெயில் சுட்டெரிக்கும் சமயத்தில், தவறான நேரத்தில் வெயிலில் செல்வது நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும்.
வைட்டமின் டி நம் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, நோய்களைத் தடுக்கிறது. தவிர மனநிலையையும் மேம்படுத்துகிறது மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தவிர தசை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் முக்கியமான ஒன்றாக வைட்டமின் டி உள்ளது. இதன் வளமான இயற்கை மூலமாக சூரிய ஒளி இருக்கிறது என்றாலும், வெயிலில் அதிகம் நேரம் செலவிடுவது அல்லது தவறான நேரத்தில் சூரிய ஒளிக்கு வெளிப்படுவது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதோடு எந்த பலனையும் பெற முடியாது. எனவே வெயிலில் சென்று வைட்டமின் டி-யை பெறுவது உங்கள் நோக்கமாக இருந்தால் சரியான நேரம் மற்றும் எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கலாம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் கோடை காலத்தில் சருமத்தை பாதிக்காமல், அதிகபட்ச வைட்டமின் டி-யை பெற சரியான நேரம் எது..?
சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி-யை பெற இதுவே பொன்னான நேரம்..
நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கோடை சீசனில் வைட்டமின் டி-க்காக சூரிய ஒளியை பெற சிறந்த நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆகும்.
காரணம் என்ன?
மேற்கண்ட 2 மணி நேரத்தில் பொதுவாக வைட்டமின் டி உற்பத்திக்கு காரணமான UVB கதிர்கள் நல்ல அளவில் இருக்கும். அதே போல ஒரு நாளின் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெயில் கடுமையாக இருக்காது, இது சன்பர்ன் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. உங்களுக்கு லேசான சருமமாக இருந்தால் 15-30 நிமிடங்களிலும், டார்க்கான சருமமாக இருந்தால் 30-45 நிமிடங்களில் போதுமான வைட்டமின் டி-யை ஒருங்கிணைத்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூரியனின் கதிர்கள் அதிகமாக இருக்கும், அதாவது UVB வெளிப்பாடு அதிகம் இருக்கும். ஆனால் கோடை சீசனில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வெயிலில் செல்வது கடுமையான வெப்பம், சன்பர்ன் அபாயம் மற்றும் டிஹைட்ரேஷன் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே நீங்கள் வியர்த்து விறுவிறுப்பதை மற்றும், சோர்ந்து போவதை விரும்பாவிட்டால் அவசியமில்லாமல் இந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
வெயில் உச்சத்தில் இருக்கும் போது சன்பர்ன், டிஹைட்ரேஷன்மற்றும் நீண்ட கால தோல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். கோடை சீசனில் ஒருவேளை வைட்டமின் டி-யை பெற காலை 8 மணிக்கு முன் அல்லது மாலை 4 மணிக்குப் பிறகு வெயிலில் செல்வது பாதுகாப்பானது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் வைட்டமின் டி தயாரிக்க உதவும் UVB கதிர்கள் இந்த நேரங்களில் மிகவும் பலவீனமாக இருக்கும். காலை நடைப்பயிற்சி அல்லது மாலை ஜாகிங் செய்வதற்கு இது சிறந்தது என்றாலும், உங்களுக்கு வேண்டிய வைட்டமின் டி கிடைக்காது.
சருமப் பாதுகாப்பிற்கு சன்ஸ்கிரீன் அவசியம் என்றாலும் அது UVB கதிர்களை தடுக்கிறது. எனவே வைட்டமின் டி பெறுவதில் இடையூறு ஏற்படாமல் தவிர்க்க, சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கு முன்பே 10-15 நிமிடங்கள் வெயிலில் நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். முக்கியமாக உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகம் வெயிலில்படுமாறு பார்த்து கொள்ளுங்கள். சருமம் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுவதால், உங்கள் உடல் UVB கதிர்களை சிறப்பாக உறிஞ்சும். வைட்டமின் டி-யை பெற நீங்கள் வெயிலில் செலவிடும் அதே நேரம் சில உடல் செயல்பாடுகளை செய்வதையும் கருத்தில் கொள்ளுங்கள். காலை நடைப்பயிற்சி, யோகா பயிற்சி அல்லது வெயிலில் லேசான ஸ்ட்ரெச் ஆகியவை வைட்டமின் டி உற்பத்தியை மேம்படுத்தி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments