
சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக எழும்பூர் தெற்கு பகுதியில் உள்ள டாக்டர் சந்தோஷ் நகர் ஹவுசிங் போர்டு மற்றும் புதுப்பேட்டை அருகே உள்ள திருவேங்கடம் தெருவில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது எழும்பூர் பகுதி செயலாளர் சுதாகர், சோ வேலு உட்பட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் ஒரு நாளுக்கு ஆயிரம் நபர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம். மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள்.” என்றார்.
தொடர்ந்து காவல்துறை முறையாக செயல்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்தான கேள்விக்கு, “கண்ட்ரோல் பண்ணுவது குறித்து அவர் பேசி நாங்கள் கத்துக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவரது கட்சியை அவரது கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவும் மகனும் மேடையில் சண்டை போட்டுக் கொள்ளும் சூழல் உள்ளது. அவர் எங்கே தமிழகத்தை கண்ட்ரோல் செய்யப் போகிறார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக 8 மாதத்தில் கூட்டணியிலிருந்து தனிமைப்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு, “அவரின் நப்பாசை அது. இந்தக் கூட்டணி ஏதோ அரசியல் லாபத்திற்காக ஏற்பட்ட கூட்டணி அல்ல; கொள்கை சார்ந்த கூட்டணி. இந்த கூட்டணி மேலும், மேலும் உறுதியாக இருக்கிறது என்பதற்குதான் எடுத்துக்காட்டு கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் பிறந்தநாள் நிகழ்ச்சி. இது உறுதிமிக்க கூட்டணி. யாரும் இடித்து தகர்த்து எறிய முடியாத இரும்புக்கோட்டைகளால் ஆன கூட்டணி. எந்நாளும் சிதற விடுவதற்கு முதலமைச்சர் விடமாட்டார்.” என்றார்.
பின்னர் சீமான் விவகாரத்தில் காவல்துறை குறித்து அண்ணாமலை கூறியது குறித்தான கேள்விக்கு,
“யாரெல்லாம் சமூக விரோத செயல்களை ஈடுபடுகிறார்களோ யாரெல்லாம் சட்டத்தை மீறுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஆதரவளிக்கின்ற கர்நாடகா டூப் போலீஸ்தான் அண்ணாமலை” என தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியது குறித்தான கேள்விக்கு,
அமைச்சர் சிரித்தபடியே “ஐயோ, அய்யய்யோ, அப்படியா.. யாருங்க பிரசாந்த் கிஷோர்? அவர் தனியாக நடந்து செல்ல சொல்லுங்கள், அவரை எத்தனை பேருக்கு தெரியும் என்று பார்ப்போம். அவர் ஒரு விற்பனையர். அவர் கூற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு பதில் சொல்லக் கூடிய காலம் இது இல்லை. மக்கள் பணியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.” என்றார்.
கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்தான கேள்விக்கு,
“கோயில் திருவிழா அழைப்பிதழ்களில் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்ற உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு நாங்கள் உடன்படுகிறோம். ஏனெனில் எங்கள் கொள்கையும் அதுதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது திராவிட மாடல் ஆட்சி. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என்றார்.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments