Ticker

Ad Code



சிங்கப்பூரில் 'முஸ்தபா சென்டர்' தோன்றியது எவ்வாறு?


'முஸ்தபா சென்டர்' என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான வணிக வளாகமாகும். இது லிட்டில் இந்தியாவில், செய்யத் அலவி வீதியில் அமைந்துள்ளது. 40000 சதுர அடிகள் கொண்ட  'முஸ்தபா சென்டர்'  இன்று சிங்கப்பூரின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிலையங்களுள் ஒன்றாக விளங்கி வருகின்றது.

ஜூன் 2003ல் 24 மணிநேரமும் திறந்திருக்கும்  முதல் உள்ளூர் பல்பொருள் அங்காடியாக, முஸ்தபா சென்டர் சிங்கப்பூர் வரலாற்றில் அறியப்பட்டது. காய்கறிகள் முதல், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், துணிவகைகள்,  நகைகள், மளிகைப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.

இன்று சிங்கப்பூர் மிரமிப்பூட்டும்விதத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு, அந்நாட்டவரின் உற்சாகமும்  விடாமுயற்சியும் மட்டுமன்றி, அண்டை நாடுகளிலிருந்து வந்து குடியேறிய, பல்லின மக்கள் வாழும் நாடாக இது  இருந்த போதிலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்,  நாட்டின் மீது அவர்கள்  கொண்டுள்ள பற்றும்,  பெருமிதமுமே முக்கிய முதற்காரணங்களாகும்.

புலமைப் பரிசுத் தேர்வில் சித்தியடைந்தால், சிங்கப்பூர் கூட்டிச் செல்வதாக மகளுக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில்,
கடந்த 2010ம் ஆண்டு டிஸம்பர் 16ம் திகதி குடும்பத்தாருடன் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தத, அங்குள்ள Aspinals Hotel இல் தங்கினேன். முஸ்தபா சென்டருக்கும், பிரசித்திபெற்ற  உணவகங்களுக்கும் பக்கத்தில் அமைந்திருந்த ஐந்து மாடிகள் கொண்ட  இந்த Aspinals, இப்போது வேறு பெயரில் இயங்கிவருகின்றது. 

இப்பகுதி இந்தியர்களும்  - தமிழ்பேசும் மக்களும் அதிகமாக வர்த்தகம் செய்கின்ற மற்றும் நடமாடுகின்ற இடமாக இருப்பதற்குக் காரணமாக அமைந்தது அங்கு இரவு-பகல் பாராது நாள் முழுவதும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்தபா சென்டர் என்ற  வணிக வளாகமாகும்.

மக்களுக்குத் தேவையான சகல பொருட்களையும் ஒரே குடையின் கீழ் வாங்கிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு, முஸ்தபா சென்டரில் கூட்டம் நிரம்பி வழிவதற்குக் காரணம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இளம் வயதில் பணிக்குச் சேர்த்த பலர், முதுமை அடைந்தபோதிலும், மிகவும் அர்ப்பணிப்புடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து கொண்டிருப்பதை நேரில் கண்டு வியந்தேன். அத்துடன் மக்கள் களைப்பின்றி பொருட்கள் வாங்கிக் கொண்டிருப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது. உணவகங்கள், சர்வதேசப் பணம் மாற்றுமிடம் என்பனவும் நல்லிரவு வரை திறந்திருப்பதானது -  வெளிநாட்டுப் பயணிகளுக்குமாத்திரமன்றி   உள்நாட்டவருக்கும் அதிக சௌகரியத்தைக் கொடுக்கின்றது.

இந்த வணிக வளாகம் நுழைவாயில்கள் பலதைக் கொண்டிருந்ததால், உள்ளே நுழைந்த வாயில் வழியைத் தேடி வெளியே வந்துகொள்ள முடியாமல் சிலர் தவிப்பதுமுண்டு; அந்த சிலரில் நானும் ஒருவனானேன்!

முஸ்தபா சென்டரின் பரந்துபட்ட வர்த்தகப் போக்கையும், அதன் பிரமிக்கத்தக்க தனித்துவத்தையும் நேரில் கண்ட என்னால், அதன் வரலாற்றையும், வளர்ச்சிப் போக்கையும் பற்றி எழுதாதிருக்க முடியவில்லை!

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில், 1916ல் பிறந்த ஹாஜி முஹம்மது முஸ்தபா என்பவர்,  1950ல் மலேஷியாவின் ஜோகூர் மாவட்டத்திலுள்ள  'மூவார்' என்ற இடத்துக்கு வந்து, கிராமங்கிராமங்களாகச் சென்று பாலாடை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்; 1952ல் அவர் சிங்கப்பூருக்கு வந்து, உணவகம் ஒன்றைத்  தொடங்கினார்.

ஆண்டுகள் கடந்து செல்ல, இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த தனது மனைவி இறந்ததும், ​​ ஐந்து வயது மகன் முஸ்தாக் அஹமதுவை  சிங்கப்பூருக்கு வரவழைத்துக் கொண்டார்.
உணவகத்தில் பணி செய்து கொண்டிருந்த  மகன் முஸ்தாக், சில ஆண்டுகளின் பின்னர் அயற்குப் பக்கத்தில் கைக்குட்டைகள்  விற்கும் கடை ஒன்றைத் திஸ்ரீந்தார், 

மகனின் வணிக வளர்ச்சிப் போக்கினால் ஈர்க்கப்பட்ட  ஹாஜி முகமது முஸ்தபா, தனது உணவகத்தை மூடிவிட்டு, 1960 முதல் ஆடைகள் விற்பனையகம் ஒன்றைத்  தனது உறவினர் சம்சுதீன் என்பவருடன் இணைந்து தொடங்கிய அவர், 1965ம் ஆண்டு மலிகைப் பொருட்கள் விற்கும் ஒரு கடை ஒன்றினையும் தொடங்கினார். 

பின்னர், 1971ம் ஆண்டில் கெம்பல் லேனில் 500 சதுர அடி கடை ஒன்றை வாங்கி, அதற்கு  'முகமது முஸ்தபா மற்றும் சம்சுதீன் கோ பிரைவேட் லிமிடெட்' என்று பெயரிட்டு, ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யலானார். 

1973ல், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஒரு பெரிய கடைக்குத் தனது வியாபாரத்தை மாற்றிக் கொண்ட அவர், வளர்ந்து வரும் வணிகத்திற்கு இடமளிக்க வசதியாக மேலும் கடைகளை வாங்கி, பல்பொருள் அங்காடியாக மாற்றினார்.

அதுவே மேலும் வளர்ந்து, 1995ல்,  'முஸ்தபா சென்டர்' என்ற பெயரில் உருவானபோது, அடுத்த ஆண்டு முடிவில், 'செராங்கூன் பிளாசா'வில் தனது வணிக விரிவாக்கத்திற்காகக் கூடுதல் இடத்தை வாங்கிய அவர், லிட்டில் இந்தியாவிலுள்ள சையத் அலவி சாலையிலுள்ள 130 அறைகள் கொண்ட ஹோட்டலுடன் 75,000-சதுர அடி கொண்ட பல்பொருள் அங்காடியை 'முஸ்தபா சென்டர்' என்ற அதே பெயரிலேயே விரிவாக்கம் செய்தார். 

1997ம் ஆண்டில், புதிய நான்கு மாடிக் கட்டிடத்தை கட்டுவதற்காக அண்டை நிலத்தை வாங்கிய அவர்,
இன்று 'முஸ்தபா ஷாப்பிங் சென்டர்' என்ற பெயரில், கத்தரிக்காயிலிருந்து வைரங்கள், வீட்டு உபகரணங்கள், கேமராக்கள், கடிகாரங்கள், பரிசுப் பொருட்கள், மலிகைப் பொருட்கள்  மற்றும் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தையும் விற்பனை செய்வதில் நற்பெயரைக் பெற்ற நிலையில் தனது வியாபாரத்தை நகர்த்தலானார்.

1916ல் பிறந்துள்ள ஹாஜி முஹம்மது முஸ்தபா 2001ல் காலமானதும்,1947ல் இந்தியாவில் பிறந்தவரான கடின உழைப்புக்குப் பெயர் பெற்ற மர்ஹூம் ஹாஜி முஹம்மது முஸ்தபா   அவர்களின் மகனான முஸ்தாக் அஹ்மத், மனவுறுதி மற்றும் விடாமுயற்சியுடன் தனது தந்தையின் தொழிலைக் கட்டியெழுப்பினார்.  இப்போது முஸ்தபா சென்டரில் 1,500 பேருக்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர்,
முஸ்தபா சென்டரின் வணிகத் தன்மையானது ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதில் தனித்துவத்தைக் காட்டி வருகின்றது.

நிறுவனம் தனது பெரும்பாலான விற்பனைப் பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதால்,  குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றது.

முஸ்தாக் அஹ்மத் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருப்பதுடன், ஒரு பரோபகாரருமாவார்.  இந்தியாவில் பள்ளிவாசல்கள் மற்றும் மருத்துவமனைகளைக் கட்டுவதுடன், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கு நன்கொடைகளையும் வழங்கி வருகின்றார்.

இப்போது சிங்கப்பூரின் வெற்றி மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளமாக முஸ்தபா சென்டர் மாறியுள்ளது. இதன் புகழ் தொடர்ந்தும் வளர்ந்து வருகிறது; உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகவும்  இது புகழ் பெற்றுள்ளது.

கடின உழைப்பு, நேர்மை, பணிவு மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கேட்பதன் முக்கியத்துவம் ஆகியவை இதன் மகத்தான வெற்றிக்கு வழிகாட்டிவரும் கொள்கைகளாகும்.

பொதுவாக “முஸ்தபாஸ்” என்று அழைக்கப்படும் இது 1996 முதல் 2000 வரை சிங்கப்பூரின் சிறந்த 50 நிறுவனங்களுள் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

ஐ. ஏ. ஸத்தார்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments