
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதிக்க டிரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது.
இலங்கையின் ராஜதந்திர ரீதியான மோசமான பின்னடைவையே இது காட்டுகிறது.
இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு இலங்கையின் ஏற்றுமதித் துறைக்குக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகின்றது.
இந்த வரி உயர்வின் விளைவாக இலங்கையில் ஏற்றுமதி வருமானம் குறையும், டாலர் பற்றாக்குறை உண்டாவதோடு, இலங்கை நாடு சீனா, இந்தியா நாடுகளை நம்பியிருக்கும் நிலை ஏற்படும்.
அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்து அதிகளவில் ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமையினால், இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு கடுமையான தாக்கமும், ஆடை உற்பத்தி துறையின் மீது விழுந்த மரண அடியுமாகும் இந்த வரி விதிப்பு உயர்வினால், நிச்சயமாக பாரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்திக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
பிரிட்டன், சிங்கப்பூர், பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துருக்கி, கொலம்பியா, அர்ஜென்டினா, எல் சால்வடார் ஆகிய நாடுகளுக்கு 10 சதவீத வரியை விதிக்கவுள்ள அதே வேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீத வரியும், இந்தியாவிற்கு 26 சதவீத வரியும், சீனாவிற்கு 34 சதவீத வரியும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், பங்களாதேஷூக்கு 37 சதவீத வரியும், மியன்மார் மற்றும் இலங்கைக்கும் 44 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும், கம்போடியா மீது 49 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய வரி அறிவிப்புகளில் கனடாவும் மெக்சிகோவும் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை.
நேற்றைய தினம் பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை ட்ரம்ப் நேரலையில் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு இம்மாதம் 05ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.
அமெரிக்காவின் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அங்கு தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ம் திகதியன்று அவரது புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்பின் வரி விதிப்பை 'பெரும் அடி' என்று உலகத் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments