
வானில் கார்மேகம், மழைபெய்வதற்கான ஆராய்ச்சியை துவங்கிய சில நிமிடங்களில், துளித்துளியாக சாரல்மழை பொழிந்தது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்த சங்கவி, மழையிலிருந்து தப்பிக்க, ஆக்ஸிலேட்டரின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.
கூடவே, மழையின் வேகமும் அதிகமானது.
அடுத்த சில நிமிடங்களில், பாரதி நகர் புதுதெருவின் வலதுபக்கத்தில் உள்ள வீட்டின் வாசலருகே, மழையில் நனைந்தவாறே ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய சங்கவி, தலையிலிருந்த ஹெல்மெட்டை கழற்றாமலே வீட்டிற்குள் நுழைந்தாள்.
"அம்மா..."
பூஜையறையில் இருந்து வெளியே வந்தாள், பிரமிளா.
"சங்கவி... மழைன்னு தெரியுமில்லே. ஓரமா ஒதுங்கி நின்னு, மழைவிட்டதும் வந்திருக்கலாமே. எதுக்காக இப்டி நனைஞ்சிட்டு வரணும்."
"இந்தமழை, இப்பவிடுறதா இல்லை.  ஹீட்டர் சுவிட்சை போடு. நான் குளிக்கணும்."
"உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன். சிதம்பரத்தில் இருக்கிற வேணுமாமா போன் பண்ணியிருந்தார். அவரோட இளையமகள் வர்த்தினிக்கு அடுத்தவாரம் கல்யாணம் வெச்சிருக்காராம். கல்யாணம் முடிஞ்சதும் பேமிலியோட ஜெர்மனிக்கு போறார். வர்றதுக்கு ஆறுமாசம் ஆகுமாம். உன்னோட கல்யாணத்துக்கு வரமுடியாதாம். இதை உன்கிட்ட சொல்லச்சொன்னார்."
"என்னோட கல்யாணம் நடந்தாதானே...?"
"என்னடிச் சொல்றே...?'' 
சொன்னாள், சங்கவி.
கேட்ட பிரமிளாவுக்கு மயக்கமே வருவதுபோல் இருந்தது.
"என்னோட முடிவுல இருந்து நான் பின் வாங்குறாதா இல்லை."
அந்தநேரத்தில் அங்குவந்தார், சந்திரமூர்த்தி.
"என்ன பிரமிளா, அழுதிட்டே இருக்கே? ஏய்... சங்கவி என்ன பிரச்னை உங்க இரண்டு பேர்க்கும்..?"
"அவளட்ட ஒண்ணும் கேட்காதீங்க. நானே சொல்றேன். நம்ம தலைல மண்ணை வாரிப்போட்டுட்டா."
"விஷயத்தை முதல்ல சொல்லு."
கண்ணீர்துளியை முந்தானையால் ஒற்றிக்கொண்டே பேசினாள், பிரமிளா.
"சங்கவியோட கல்யாணத்துக்கு நாலுமாசம் இருக்கு. இந்த கல்யாணம் நடக்காதாம். அவ விரும்புறவனையே கட்டிக்கப்போறாளாம்."
"என்ன சங்கவி, அம்மா சொல்றது நிசமா?"
அமைதியா நின்றிருந்தாள், சங்கவி.
"உன்கிட்டதானே கேட்கிறேன். நிச்சயம் பண்ணுறதுக்கு முன்னாடியாவது, உன்னோட பிரச்னையை சொல்ல வேண்டியதுதானே. கடைசி நேரத்தில இப்படி சொல்லுறே? யார் அவன். அவனோட பெயரென்ன?"
"அப்பா... நான் அவர டார்லிங்ன்னுதான் கூப்பிடுவேன். பெயரை மட்டும் சொல்லமாட்டேன்."
"உன்னோட டார்லிங்கோட போட்டோவை காண்பி. அவனோட செல்நம்பரை தா. நான் பேசிப்பார்க்கிறேன்."
"சாரியப்பா... நாங்க இரண்டுபேரும் ஒருதடவை கூட செல்பியோ போட்டோவோ எடுத்ததில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன். அந்தமானில் ஒரு ஜாப் கிடைச்சிருக்கு. போன மாசம்தான் புறப்பட்டுப் போனார். பத்துநாள்ல வந்திடுவார். வந்ததும் நானே உங்கிட்டச் சொல்றேன்."
அவசரமாக இடைமறித்துப் பேசினாள், பரிமளா.
"நீங்க இரண்டுபேரும் பேசுறத பார்த்தா, இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரியுது."
"பரிமளம்... இது நம்ம பொண்ணோட வாழ்க்கைப் பிரச்னை. கல்யாணத்துக்கு  முழுசா நாலுமாசம் இருக்குது. தலையெழுத்துன்னு ஒண்ணு நல்லதா இருந்தா, எல்லாமே நல்லதா தான் நடக்கும். கொஞ்சம் பொறுமையா இரு. இந்த விஷயம் வெளியே தெரியகூடாது. அதுவும் மாப்பிள்ளை வீட்டார்க்கு தெரியவே கூடாது. புரிஞ்சிதா."
அந்த நேரத்தில் சந்திரமூர்த்தியின் செல்போன் தன் வாயை திறந்தது.
அழைப்பில்
மாப்பிள்ளையின் தகப்பனார் இணைப்பில்  இருந்தார்.
"சம்பந்தி தான் பேசுறார். சங்கவி நீ ரூமுக்குப் போ."
செல்போன் இணைப்பை ஆன் செய்தார், சந்திரமூர்த்தி.
"சொல்லுங்க, சம்பந்தி..."
"சங்கவி எப்டி இருக்கா. வீட்ல எல்லோரும் சுகம்தானே.?"
"பெருமாள் புண்ணியத்தில சௌக்கியமா இருக்கோம். திடீர்ன்னு போன் பண்ணியிருக்கீங்க. ஏதாவது விசேஷமா...?"
"என்ன சம்பந்தி... வர்ற வெள்ளிக்கிழமை முகூர்த்தப்பட்டு எடுக்க, நல்லநாள்ன்னு சொன்னீங்க. மறந்திட்டீங்களா...?"
ஒருகணம் தடுமாறி, சுதாரித்துப் பேச ஆரம்பித்தார்.
"நல்ல விஷயத்தை யாராவது மறக்கமுடியுமா...? வெள்ளிக்கிழமை காலைல கிளம்பிடலாம்."
"வர்ற வெள்ளிக்கிழமை ஆடிப்பெருக்கு. அன்னைக்கு நாம பேசினபடியே முகூர்த்தப்பட்டு எடுத்திடலாம். மருமக சங்கவிகிட்ட கேட்டதாச் சொல்லுங்க. அவளுக்கு பிடிச்ச கலர்லே முகூர்த்தப்பட்டு செலக்ட் செய்யட்டும்ன்னு என் மகன் ஆசைப்படுறான்."
இருபதுநாள்களுக்கு பிறகு.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நேரம்.
சந்திரமூர்த்தியின் யமஹா பைக் நாற்பதுகிலோ மீட்டர் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. பைக்கின் பின்னாடி சங்கவி அமர்ந்திருந்தாள். சிலநிமிடங்கள் கழிந்ததும், திடீரென்று  பைக்கின்வேகம் குறைந்தது.
"சங்கவி... கீழே இறங்கும்மா."
"என்னப்பா...?"
"எனக்கு தெரிஞ்ச ஒருபையன் நிற்கிறான். விசாரிச்சிட்டு வர்றேன்." சொன்னவர் அருகில் இருந்த இளநி கடைப்பக்கத்தில் பைக்கை நிறுத்தினார்.
"தம்பி... ஒரு இளநி சீவி, என்மகளுக்கு கொடுப்பா. சங்கவி, நான் இப்ப வந்திடுறேன்..."
சந்திரமூர்த்தியின் நடையில் ஒரு அவசரம் தெரிந்தது.
இளநியை குடித்துவிட்டு திரும்பியவள், ரோட்டின் மறுபக்கம் சற்றுத்தொலைவில் இருந்த பெட்டிக்கடைப் பக்கத்தில் முதுகைக்காட்டி கொண்டு் தலையில் தொப்பி வைத்து நின்றிருந்தவனிடம், சந்திரமூர்த்தி கடுமையாக கைநீட்டிப் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாள்.
யார் அவன்? பார்ப்பதற்கு அவராக இருக்குமோ? யோசிக்க ஆரம்பித்தாள். அடுத்த நொடியே, அவனோட அருகில் சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருத்தி தெரிந்தாள். முகத்தில் கருப்பு கண்ணாடி போட்டிருந்தாள்.
அந்த பெண்ணைப் பார்த்ததும், பக்கத்தில் நிற்பது அவராக இருக்காது. அவர் தொப்பி அணிவது இல்லையே. என்றாலும் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.
தனது செல்போனை எடுத்து நம்பரை தட்டினாள். டிஸ்பிளேயில் A♥S என்று ஆங்கிலத்தில் தெரிந்தது. ரிங் போய்க் கொண்டிருந்தது. 
மறுமுனையில் மௌனம்.
மீண்டும்,
அதே நம்பரை தட்ட, மறுமுனையில் இருந்து அழைப்பு கேட்டது.
"ஹலோ... யார் பேசுறது.?"
ஒரு இளம்பெண்ணின் குரல்.
சுதாரித்த சங்கவி,"ஆனந்த சாரோட வீடுதானே.?"
"ஆமாம்... நீங்க யார்பேசுறது.?"
"நான் அவரோட பிரெண்ட் லதா பேசுறேன். நாங்க இரண்டுபேரும் அந்தமானில் உள்ள கம்பெனியில் வேலைக்கு புதுசா சேர்ந்திருக்கோம். ஊருக்கு வந்தா போன் பண்ணச் சொல்லி, சார்தான் நம்பர் தந்திருந்தாங்க." அவசரமா ஒரு பொய்யைச் சொன்னாள், சங்கவி.
"அவர் வீட்டில இல்லையே...?"
"எ... எங்கே போயிருக்காங்க?"
"பக்கத்துவீட்டு தாத்தாவுக்கு திடீர்ன்னு வலிப்பு வந்திடிச்சு. அவர ஆட்டோவில கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டாரு. அந்த அவசரத்தில செல்போனை எடுக்க மறந்திட்டார்."
"நீங்க ஆனந்துக்கு...!"
"நான் ஆனந்த்தோட தங்கச்சி, பிரதீபா."
"ஓகே..! சார் வந்ததும் போன் பண்ணச் சொல்லுங்க. தேங்க்யூ பிரதீபா."
செல்போனை அணைத்துவிட்டு பெருமூச்சு விட்டாள், சங்கவி.
இது ஆனந்த் இல்லை.
அந்தநேரத்தில்
அங்கு வந்துக்கொண்டிருந்தார், சந்திரமூர்த்தி.
அவர் முகத்தில் கோபம் எண்பது சதவீதத்தை எட்டியிருந்தது.
"என்னப்பா... ஏதாவது பிரச்னையா? உங்க முகத்தில தெரியுது."
"ஆமாம் சங்கவி. சின்னப்பிரச்னை இல்லை. பெரிய பிரச்னை. ராஸ்கல், என்கிட்டேயே சவால் விடுறான்."
சங்கவியின் முகத்தில் கலவரம் தொற்றிக் கொண்டது.
"என் பிரெண்ட் தர்மசீலனோட வீட்ல சின்னப்பிரச்னை. அதாவது, அவளோட மகள் கலைச்செல்வி, ஒரு பையனை விரும்பியிருக்கா. அவனும் அவளை நேசிக்கிறதா, நினைச்சு ஏமாந்துட்டா. அவளோட மனச விரும்பாதவன், அவளோட உடம்பைதான் விரும்பியிருக்கான். ஒருதடவை, அவள்ட்ட தப்பா நடக்க முயற்சி செய்திருக்கான். இதை அழுதிட்டே தர்மசீலன்ட்ட சொல்லியிருக்கா. போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையண்ட் கொடுக்கலாம்ன்னு என்கிட்ட கேட்டிருந்தான். நானும் வேணாம்டா, பொண்ணோட வாழ்க்கைப் பிரச்னை. சொந்தத்திலேயே ஒரு பையனை பார்த்து பேசிமுடிக்கச் சொன்னேன். இன்னிக்கு அந்தப்பொண்ணு நல்லா இருக்கா. அந்த ராஸ்கலை ஒரு பொண்ணோட பேசிட்டிருக்கிறதைப் பார்த்துதான் பைக்கை நிறுத்தினேன்."
"யாருப்பா அவங்க, இரண்டுபேரும்?"
"கலைச்செல்வியை ஏமாத்தினவன் தான் அவன். இன்னொரு பொண்ணையும் தன்னோட வலையில வீழ்த்தியிருக்கான். என்னைக் கண்டதும் மிரண்டவன், என்னை மிரட்ட ஆரம்பிச்சிட்டான். நானும் அந்தப்பொண்ணுட்ட நடந்த விபரத்தைச் சொன்னேன். அவ, அவனைதான் கல்யாணம் பண்ணிக்குவாளாம்."
"ஏம்ப்பா..."
"ஏன்னா... அந்தப்பொண்ணு மூணுமாசம் கர்ப்பம்."
"சே... இவனெல்லாம் மனுசனா."
"என்னச் செய்றதுன்னே தெரியலைம்மா. என் பிரெண்டோட மகன் திருநெல்வேலியில இன்ஸ்பெக்டரா இருக்கான். அவனோட போட்டோவை அனுப்பி விபரத்தைச் சொல்ல  நினைக்கிறேன். ஆனா... நாளைக்கு அவனால நமக்கு ஏதாவது பிரச்னை வருமான்னு யோசிக்கிறேன்."
"அவனோட போட்டோ உங்ககிட்ட இருக்கா?"
தன் செல்போன் கேலரியில் இருந்த போட்டோவை சங்கவிடம் காட்டினார், சந்திரமூர்த்தி.
போட்டோவைப் பார்த்ததும், உள்ளுக்குள் உறைந்துப்போனாள், சங்கவி.
நான்கு வருடங்களுக்குப் பிறகு.
சென்னை ஏர்போர்ட்.
இரவு மணி 8:15
பார்வையாளர் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரமூர்த்தியின் தோளில் அந்த மெருதுவான கை தட்டியது.
நிமிர்ந்தவர், பரவசமானார்.
"வணக்கம், சந்திரமூர்த்தி சார்."
"ஆனந்த்... எப்படி இருக்கீங்க? நான் எதிர்பார்க்கவே இல்லை, உங்களை இங்கே சந்திப்பேன்னு."
"அந்தமானிலிருந்து இப்பதான் வர்றேன். இருபதுநாள் லீவு. பேமிலியோட வந்திட்டேன். நித்யா, இங்கே வா."
நித்யா தன் இரு குழந்தைகளுடன் வந்தாள்.
"வணக்கம் ஐயா." சொல்லிக்கொண்டே,  சந்திரமூர்த்தியின் காலில் விழுந்து வணங்கிய நித்யாவின் கண்கள் கலங்கியிருந்தது.
"என்னம்மா... கண்ணெல்லாம் கலங்கியிருக்கு."
"சார்... நீங்க மட்டும் அன்னிக்கு சம்மதிக்கலைன்னா, நாங்க..." அழ ஆரம்பித்த நித்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போனான், ஆனந்த்.
"நான் வேலைப்பார்க்கிற அதே கம்பெனியில்தான், ஆனந்தும் புதுசா வேலைக்கு சேர்ந்திருந்தார். வேலைக்கு சேர்ந்த அன்றைக்கே என்கிட்ட நட்பாக பழக ஆரம்பிச்சார். தான் ஊரில சங்கவியை காதலிக்கிறதாகவும், அவளையே கல்யாணம் செய்ய போறதாகவும் சொல்வார். என் நண்பரோட பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக, ஆனந்தை அழைச்சிருந்தேன். அவரும் என்கூட வரச் சம்மதிச்சார். அன்னிக்கு நிகழ்ச்சிக்கு காரில் போகாமல் பஸ்ஸில் புறப்பட்டு போனோம். அந்தமானில் நடந்த பஸ் விபத்தில், பஸ் கண்ணாடி குத்தியதில், ஆனந்த் தன்னோட பார்வையை மொத்தமாக இழந்திட்டார். அவரோட பக்கத்தில் இருந்த பயணித்த எனக்கு லேசான காயம்தான். புதுசா வேலைக்கு சேர்ந்து பத்துநாள் கூட ஆகலை. இவர்க்கு நேர்ந்த நிலமையை நினைச்சு நான் ரொம்பவும் வேதனைப்பட்டேன். கண்பார்வை போன விஷயம் அவரோட வீட்டுக்கு தெரியக்கூடாதுன்னு என்கிட்ட சொன்னார்..."
"என்ன நித்யா... சினிமாவில வர்ற டயலாக் மாதிரி பேசுறே. சங்கவியோட அப்பாவுக்குதான் விஷயம் தெரியுமே.!"
அதுவரை பேசாமல் இருந்த சந்திரமூர்த்தி, ஆனந்தின் கையைப் பிடித்துக்கொண்டே, பேச ஆரம்பித்தார்.
"தன்னோட ஒரு கண்ணை உனக்கு தானமா கொடுத்த நித்யாவை கல்யாணம் செய்து வாழ்க்கை கொடுக்கலாம்ன்னு நினைச்சு, என்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லிட்டே. உன்னோட மனச நான் புரிஞ்சிக்கிட்டேன். சங்கவிகிட்ட இந்த விஷயத்தை சொன்னா  ஏற்கமாட்டா. என்னச் செய்யலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அவளோட மனசுல நீ ஒரு தப்பானவன்னு நிரூபிச்சிட்டா போதும். அதற்காகதான் உங்க இரண்டுபேரையும், இளநி கடைப்பக்கம் இருந்த சின்னக்கடைக்கு வரச்சொன்னேன். அடையாளம் தெரியாம இருக்க, நீயும் தலையில தொப்பியும் மாட்டிட்டு வந்திட்டே. பிறகுதான் எல்லாமே நல்லபடியா முடிஞ்சிடிச்சு..."
"இதில உங்க பங்களிப்புதான் பெரிசு..."
"நானும் பொண்ணை பெத்தவனாச்சே. எனக்கும் மனசு இருக்காதா? ஆனந்த்."
"ஸார்... சங்கவிக்கு எத்தனை குழந்தைங்க.?"
"சங்கவியோட முதல் குழந்தை வயிற்றிலே அபார்ஷன் ஆயிடிச்சு. இப்போது கன்சீவா இருக்கா. அவளும் மாப்பிள்ளையும் விமானத்தில வந்திட்டு இருக்காங்க. லண்டனிலிருந்து வரும் விமானத்துக்காக காத்திருக்கேன். இன்னிக்கு விமானம் மூணுமணி நேரம் லேட். அதனாலதான் உங்களையும் சந்திக்க முடிஞ்சுது. மனசுக்கும் நிறைவா இருக்கு , ஆனந்த்."
சொன்ன சந்திரமூர்த்தி, நித்யாவின் தோளில் சாய்ந்து தூங்கும் குழந்தையைப் பார்த்தார்.
"ஆனந்த்... உனக்கு இரண்டும் ஆண் குழந்தைங்களா?"
"இரண்டுபேரும் ட்டுவின்ஸ். ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் ஸார்."
"என்ன பேர் வெச்சிருக்கீங்க.?"
"பையனுக்கு மூர்த்திபாலா. பெண்ணுக்கு சந்திரான்னு பேர் வெச்சிருக்கோம்."
அதிர்ந்துப்போனவராய் ஆனந்தையும், நித்யாவையும் பார்த்தார், சந்திரமூர்த்தி.
"நாங்க கிளம்புறோம். கார் வெயிட்டிங்கில் நிற்குது. மீண்டும் நாம சந்திக்கிறதுக்கு கடவுள் ஒரு வாய்ப்பு தருவாருன்னு நம்புறேன், சார்."
அதே நேரத்தில்
வானில்...
சின்னதாய் ஒரு வெளிச்சப்புள்ளி தெரிய ஆரம்பித்தது.
லண்டனில் இருந்து சென்னைவரும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மெல்ல மெல்ல தரை இறங்க ஆரம்பித்தது.
கோபால்
நாகர்கோவில்

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com


1 Comments
பேரானந்தம்.
ReplyDeleteஎனது சிறுகதை -பூக்களின் சிறகுகள்- வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.