
இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றால் மாரடைப்பு அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. வயது வித்தியாசங்கள் இன்றி, மாரடைப்புகளால் உயிரிழக்கும் பலர் குறித்து செய்திகளில் பார்த்திருப்போம், படித்திருப்போம். தொடக்கத்திலேயே இதயப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல், அதைச் சரி செய்யாமல் விடுவதுதான் மாரடைப்பில் கொண்டு நிறுத்துகிறது. நமக்கு இதயம் படபடத்தாலோ, ஒரு சிறிய அசௌகரியம் ஏற்பட்டால்கூட, பெரும்பாலும் அதை வாய்வு என்று சொல்லிக் கடந்துவிடுகிறோம். இதுதான் மாரடைப்பின் தீவிரம் உச்சம் பெறக் காரணம்.
இரண்டும் நமக்கு மார்புப் பகுதியில் வலியை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், வலியின் தன்மை, காரணம் — அனைத்தும் வெவ்வேறு. வாய்வு, பொதுவாக உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய செரிமானக் கோளாறுகளால் வருகிறது. ஆனால் மாரடைப்பு, இதயத்திற்குப் போகவேண்டிய இரத்த ஓட்டம் தடைபட்டுவிடும் நேரத்தில் ஏற்படுகிறது.
வாய்வு, மாரடைப்பு எப்படி கண்டறிவது, இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பது குறித்துத் தெளிவாக விளக்குகிறார் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் ஜெஸ்லி மேரி மெஜிலா. "சின்ன குழந்தைகள் நெஞ்சு வலியெடுக்கிறது என்று சொன்னால்கூட, 'ஒன்றும் இல்லை, இது வாய்வு' என்று சொல்லிக் கடந்துபோய்விடுகிறார்கள். மிகவும் தவறான புரிதல். 15, 16 வயதில் உள்ளவர்கள் கூட இன்று மாரடைப்பினால் உயிரிழக்கிறார்கள். அதனால், அதை அலட்சியமாகக் கடக்கக்கூடாது.
தொப்புளுக்குக் கீழேயுள்ள வலி, இதய வலி இல்லை. அதுவே தொப்புளுக்கு மேலேயுள்ள வலி, கட்டாயமாக இதய வலிதான். இடது தோள்பட்டை மட்டுமல்லாமல் தாடையில் உருவாகும் வலி கூட இதய வலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதை ஒரு எளிய முறையில் ECG எடுத்துப் பார்த்தாலே நாம் கண்டுபிடித்துவிடலாம். இதய வலியைப் பொறுத்தவரை, நடந்தால், ஓடினால் வலி கூடும். ஆனால் வாய்வு அப்படி இல்லை. நடந்தால், ஓடினால் வலிக்காது. வாய்வு வலி என்பது குத்துவது போலிருக்கும்; இதய வலி என்பதுதான் அழுத்துவது போலிருக்கும். இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ECG உள்ளிட்ட இதய சிகிச்சைகள் உள்ளன. அதைச் செய்துகொண்டால் நாம் நமக்குள்ளிருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வு காண முடியும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments