
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48). இவருக்கு மனைவி, ஒரு மகன் ஷாருக்கான் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அப்துல் ஷா வேலைக்குச் செல்லாமல், மதுக்கு அடிமையாக இருந்துள்ளார். அவரது மனைவி உடல்நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது .இதனால், அவரது மகன் ஷாருக்கான் மற்றும் மகள் ஆகியோர் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வந்தனர். அப்துல் ஷாவும் அவரது மனைவியும் காந்தி நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பெற்றோரை பார்த்து சென்றனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஷாருக்கானுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்தனர். உடனே, ஷாருக்கான் தனது பெற்றோர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அப்போது, படுக்கையறையில் அப்துல் ஷா படுத்த நிலையில் கிடந்தார். தாயிடம், “ஏதோ நாற்றம் வருகிறதே, என்னவென்று?” எனக் கேட்டபோது, அவரது தாயார், “எலி எங்காவது இறந்து கிடக்கலாம், அதனால்தான் துர்நாற்றம் வருகிறது,” என்று கூறினார். அதன்பிறகு, தந்தை தூங்குவதாக நினைத்த ஷாருக்கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மறுநாள், துர்நாற்றம் மேலும் அதிகமானதால், பக்கத்து வீட்டார் அதைத் தாங்க முடியாமல், மீண்டும் ஷாருக்கானுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். “வீட்டிற்குள் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது, யாராலும் இருக்க முடியவில்லை,” என்று கூறினர். உடனே, நேற்று (ஜூலை 6, 2025) ஷாருக்கான் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போதுதான், படுக்கையறையில் தந்தை அப்துல் ஷா எழுந்து வராததையும், அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதையும் கவனித்துள்ளார்.
அருகில் சென்று பார்த்தபோது, அப்துல் ஷா இறந்து கிடந்தார். அவர் இறந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்ததால், கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அப்துல் ஷாவின் மனைவி, கணவர் இறந்ததை அறியாமல், அதே வீட்டில் ஐந்து நாட்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். இதுகுறித்து, பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், அப்துல் ஷாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்து கிடந்ததை அறியாமல், மனைவி ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம், காந்தி நகர் பகுதி மக்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
nakkheeran

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments