Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-72


பாக்கு மரங்கள் பிளந்து வரிச்சிகட்டி, களிமண் பிசைந்து சுவரெழுப்பிய குளுகுளு வென்றிருந்த அந்தப் புதிய வீட்டுக்குள் ஜமுக்காள விரிப்பில் நடுச்சாமம் வரை கும்மாளமிட்டுக்கொண்டிருந்த செரோக்கியும் ரெங்க்மாவும் நல்லிரவு கழிந்து தூங்கத் தொடங்கி,விடியும்வரை  அயர்ந்து தூங்கினர். 

தன் சிறு பிராயத்தில் மூங்கிற்சுவர் கொண்ட பண்ணோலை வேய்ந்த ஜாகைக்குள் பெற்றோருடன் வாழ்ந்து வந்த செரோக்கி, வாலிப வயதை அடைந்தும், இர்வினின் தொடர்பால்  ‘மனாஸ்’ நகரில் தொழில்புரிகின்ற வாய்ப்புக் கிட்டியபோது, ‘மூத்தவர்’ வாழ்ந்து வந்த குகையைத் தன் வாழ்விடமாக மாற்றிக்கொண்டு, அங்கேயே பிரத்தி யேகமாக பண்பாயில் உறங்கலானான்.

இப்போது லகவாபாவும், மகலாராவும்  சேர்ந்து வடிவமைத்த வீட்டுக்குள் ரெங்க்மாவுடன் இணைந்து அயர்ந்து தூங்கிய செரோக்கி, யன்னலினூடாக சூரியவொளி வீட்டினுள் நுழைந்ததும்  எழுந்து கொண்டான்!

ஒருகணம் ரெங்க்மாவை நோக்கியவன், அவளது அயர்ந்த தூக்கத்தைக் கெடுக்க விரும்பாதவனாக, எதுவித அரவமுமின்றி எழுந்துநின்று தன் அங்கவஸ்தியை இறுக்கி அணிந்து கொண்டவனாக, வாசற்படியைக் கடந்து  குகைப்பக்கமாக நடந்தான்!

குகைக்குப் பக்கத்தில் வீழ்ந்துகொண்டிருந்த நீரருவியில் முகத்தை அலம்பிக் கொண்டவன், குகைக்குள்  நுழைய முற்பட்டபோது,  திடுக்கிட்டு நின்றான்!

அங்கே அவனது பண்பாயில்  இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர்! சற்று முன்நோக்கி நகர்ந்த 
செரோக்கி - தன் கண்களை விரித்துப் பார்த்தபோது, அது மங்குவும் அவனது மனைவியுமாக இருந்ததைக் கண்டான்!

நேற்று  வந்த அவர்கள் இதுவரை திரும்பிச் செல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அவன், ‘நாஸிகொரா’ வாசனை தன் மூக்கைத் துளைப்பதை உணர்ந்தான்! 

அவர்களுக்கருகில் பண்தட்டொன்றினால் மூடி வைக்கப்பட்டிருந்ததைத் திறந்து பார்த்தபோது, அங்கே ஆற்றிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன், இறால், நண்டு போன்றவற்றை நெருப்பில் சூடாக்கி, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, அவித்தெடுத்த மரவள்ளிக் கிழங்குடன் தேங்காய் கலந்திடித்தெடுத்து – இவற்றை யெல்லாம் கலந்து  பிசைந்து, அதன் மேல் ‘சுடாச்சி’ தேசிக்காய் பிழிந்துவிட்டு, புளித்துளசி தூவிவிட்டு சமைத்தெடுக்கும், புரோகோனிஷ் கிராமத்தவரின் விசேட உணவான  ‘நாசிகொரா’வைக் கண்டான்! செரோக்கியின் நாவில் ஜலம் ஊரத் தொடங்கியது! அவனது தாய் இன்றைக்கு இந்த விசேட உணவைச் சமைத்திருப்பாள், அதனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற நினைப்பில், குகையை விட்டும் நகர்ந்த செரோக்கி, தன் பெற்றோரின்  ஜாகைப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தான்! 

(தொடரும்)

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments