
செரோக்கி குகையிலிருந்து தன் பெற்றோரின் ஜாகை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, அவனின் தாய் புதுமனையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தாள்.
“ஏம்மா... அமர்க்களமா ‘நாசிகொரா’ வெல்லாம் சமச்சி வச்சிருக்கியே?”
“ஆமாண்டா... அந்தப் புள்ள மங்குவின் பொண்டாட்டி உண்டாயிருக்கால்ல? அவளுக்கு வாய்க்கு ருஷிய்யா ஏதாச்சும் சமச்சிக்குடுக்க வேண்டாமா? அதான் ‘நாசிகொரா’ செஞ்சேன்!”
“இது எனக்குத் தெரியாமப் போச்சே?”
“எதுடா...?”
“மங்கு பொண்டாட்டி உண்டாயிருக்கிற விஷயம்!”
“ஆமாடா.... அவளுக்குப் பொட்டப்புள்ள வேற கெடைக்கப் போவுதாம்!”
“அதெப்படி...? வயித்துக்குள்ள இருக்கிற கொழந்தய பொட்டப்புள்ளன்கிறது?”
“அதெல்லாம் இனிமேலதான் நீ அறிவாய்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நகர முற்பட்ட தாயை அவன் விடவில்லை!
“இல்ல... இப்பவே நான் அறியணும்...சொல்லும்மா...” என்று பிடிவாதமானான்!
“மங்குவின் பொண்டாட்டி உண்டாயிருக்கிற விஷயத்த ‘தாயம்மா’ மூலமாக அறிந்து கொண்ட பொறகு, மங்கு பொண்டாட்டிய கூட்டி ‘தபுயா’ போயிருக்கான்”
என்று கதையை ஆரம்பித்த செரோக்கியின் தாய்,
அவர்கள் அங்குள்ள குறிபார்ப்பவரிடத்தில் சென்று பண்ணோலை கிழித்து வயிற்றிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்ட விடயத்தை விலாவரியாகக் கூறினாள்.
குறிபார்ப்பவர் ஒரு பண்ணோலையை இரண்டு சிறு பிள்ளைகளிடம் கொடுத்து, ஆளுக்கொரு முனையைப் பிடித்துக்கொள்ளச் செய்வார்கள். அவர் மந்திரம் ஓதி முடித்ததும் பிள்ளைகள் தத்தமது முனைகளிலிருந்து ஓலையைக் கிளிப்பார்கள். ஓலை இரண்டு துண்டாகக் கிழிந்தால் பிறக்கப்போவது பெண் குழந்தை என்றும், மூன்றாகக் கிழிந்தால் ஆண் குழந்தை என்றும் தீர்மானித்துவிடுவது வனப்பிரதேச பழங்குடிகளின் மரபுவழியாக வந்த கணிப்பு முறையாகும்!
“அப்படியானால் மங்குவுக்குப் பொட்டப்புள்ளதான் கெடைக்கப்போவுதா?”
“ஏன்டா... பொட்டப்புள்ள எண்டா எளக்காரமாப் போச்சா?”
“இல்ல...!”
“என்னடா இல்ல நொல்ல..? ஒரு காலத்துல பாலப்பிரதேசத்துல பொட்டப்புள்ள பொறந்தா உயிருடனே புதைத்திடுவாங்கலாம்! அது ஒனக்குத் தெரியுமா?” தாய் கூறி முடிக்க முன்னர் கோபத்துடன் இடை மறித்த செரோக்கி,
“யாரந்த முட்டாப்பயளுக... அப்படிச் செஞ்சது?” என்றான்!
“பாலப்பிரதேசம் இஞ்சேந்து கன தூரத்துல இருக்காம்.
அது பயிர் பச்ச வளராத தூசிப்பிரதேசமெண்டு சொல்வாங்க. ஒரு காலத்துல அங்குள்ளவங்க பொட்டப்புள்ள பொறந்தா அதிர்ஷ்டமில்லண்டு நிலத்துலயே குளியத்தோண்டிப் பொதச்சிடுவாங்கலாம்!”
“அவ்வளவு பெரிய மடையங்களா அவங்க?”
“ஆமாடா... அந்த மடயன்களத் திருத்தி, நல்லவங்களாக்க அங்கேயே ஒரு வல்லவரு பொறந்திருக்காரு! அதுக்குப் பொறவுதான் பெட்டைக்கொழந்தைங்கள பொதைக்கிறத நிறுத்தியிருக்காங்க! நம்ம மூத்தவங்க சொல்லிச் சென்ற இந்த செய்தி வழிவழியாக நமக்கும் வந்தீக்கீது!” என்று கூறிமுடித்து விட்டு அவனது தாய் அங்கிருந்து அகல முற்பட்டபோதுதான் அந்த நினைவு அவனுக்கு வந்தது!
“அது சரி நமக்கும் ‘நாசிகொரா’ வச்சிருக்கேதானே?” என்று ஆவலோடு அவன் கேட்டான்.
“உனக்கிள்ளாமாலா? இப்பத்தான் உன் வீட்டுக்குள்ள வச்சிட்டுவறேன்! மருமகப்புள்ள நல்லாத் தூங்குறாப்போல?”
“உன் 'நாசிகொரா’ வாசன தூக்குதுள்ள.... அவ எந்திரிச்சுருவா” என்று கூறிவிட்டு, அவசரமாகத் தன் தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்ட செரோக்கி, விர்ரென்று தன் மனைக்குள் நுழைந்தான்! அங்கே தன்னிரு கைகளையும் தோளுக்குமேல் நீட்டி நிமிர்த்தி கொட்டாவி ஒன்றை விட்டவாறே ரெங்கமா தூக்கம் கலைந்து கொண்டிருந்தாள்!
அவளை அசட்டை செய்தவனாக, பண்தட்டால் மூடி
வைத்திருந்ததை ஆவலாகத் திறந்தான் செரோக்கி!
அதன் வாசனை ரெங்க்மாவின் மூக்குகளையும் துளைத்திருக்க வேண்டும்!
“ஆ... ‘நாசிகொரா’...? “ என்று அவளை அறியாமலேயே அதிசயித்து வாய் திறந்தாள்!
“போ... போய்.... மூஞ்சை அலம்பிட்டு வா....” என்று ரெங்க்மாவைத் துரிதப்படுத்திவிட்டு, அவள் வரும்வரைக்கும் ‘நாசிகொரா’ வைத் தன் முன் வைத்து, வாயில் ஜலம் ஊறியபடி காத்து நின்றான் செரோக்கி!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments