
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் கடைசி இன்னிங்சில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணி 170 ரன்களை மட்டுமே குவித்ததால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியின் ஐந்தாவது நாளில் ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சாளர்களை வைத்து மிகச் சிறப்பாக இலக்கினை துரத்திய வேளையில் இறுதி கட்டத்தில் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்தது. இருந்தாலும் இந்திய வீரர்கள் கடைசிவரை வெற்றிக்காக போராடியது பலரது மத்தியிலும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முக்கிய தருணமாக தான் எதைப் பார்க்கிறேன்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்த போட்டியின் கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் ஆட்டமிழந்து மைதானத்தில் வருத்தமுடன் இருந்த வேளையில் இங்கிலாந்து வீரர்களான ஜாக் கிராவ்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அவரிடம் வந்து அவரை சமாதானம் செய்தனர். அப்படி இங்கிலாந்து வீரர்கள் செய்தது உண்மையிலேயே இந்த போட்டியின் மிகச்சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவரை சீண்டுவது, நேரம் கடத்துவது என பல்வேறு விடயங்களை செய்வார்கள். இதெல்லாம் வெற்றிக்காக மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் களத்தில் நடந்தவற்றை மறந்து கை குலுக்கி நட்புடன் செல்ல வேண்டும்.
அந்த வகையில் பார்க்கையில் ஜாக் கிராவ்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் சிராஜை ஆசுவாசப்படுத்தியது என்னை மிகவும் நெகிழ வைத்தது. ஜோ ரூட் உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். அவருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணைந்து விளையாடும் போது நல்ல பிணைப்பு இருந்தது. இந்த போட்டியில் அவரது ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments