உறவு இணைப்புப் பாலமாகத் திகழ்ந்த தபால் கார்டுகள்!

உறவு இணைப்புப் பாலமாகத் திகழ்ந்த தபால் கார்டுகள்!


பல வருடங்களுக்கு முன்னால், அதாவது எண்பதுகளில் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க தபால் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். எனக்குத் தெரிந்து ஒரு தபால்கார்டின் விலை ஐந்து காசுகள். ஒரு கையளவு கார்டு இருக்கும். அதில் ஒரு பக்கம் முழுவதும் காலியாக இருக்கும். அதில் நாம் எழுத வேண்டிய தகவல்களை எழுதலாம். மறுபக்கத்தில் நடுவில் ஒரு கோடு அச்சடிக்கப்பட்டிருக்கும். இடதுபக்கம் காலியாக இருக்கும். அந்த பகுதியில் தகவல்களை எழுதலாம். வலது பக்கத்தில் நாம் யாருக்குக் கடிதம் எழுதுகிறோமோ அவருடைய விலாசத்தை எழுத வேண்டும்.

தபால்கார்டில் எழுதுவது என்பது ஒரு பெரிய கலை. சிலர் இரண்டு பக்க அளவு தகவல்களை நுணுக்கி நுணுக்கி தபால் கார்டில் அழகாக எழுதுவார்கள். மேலும் சில தகவல்களை எழுத வேண்டி இருந்தால் அதை மற்றொரு தபால் கார்டில் எழுதி இரண்டையும் ஒன்றாக சேர்த்து தபால் பெட்டியில் போடுவார்கள்.

அக்கால மக்கள் அடிக்கடி தபால் கார்டில் நலம் விசாரித்து உறவினர்களுக்கு எழுதும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். இதனால் அக்காலத்தில் உறவுகள் மேம்பட்டன. உறவுகளை தபால்கார்டுகள் இணைத்தன என்றால் அது மிகையல்ல. பொதுவாக தபால் கார்ட்டில் ‘நலம். நலமறிய ஆவல்’ அல்லது ‘நலம். நலமறிய அவா’ என்ற வாசகத்துடன் எழுதத் தொடங்குவார்கள். தபால் கார்டை தபால்காரரிடமிருந்து வாங்கிப் படிக்கும்போது உறவினர் நம்மிடம் நேரிடையாக நலம் விசாரிப்பது போன்ற ஒரு உணர்வு இயற்கையாகவே ஏற்படும்.

தொலைபேசி அக்காலத்தில் மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. செல்போன் சுமார் இருபது ஆண்டு காலமாகவே பயன்பாட்டில் உள்ளது. அத்தகைய சூழலில் உறவினர்களை இணைத்து ஒரு மாபெரும் இணைப்புப் பாலமாகவே தபால் கார்டுகள் செயலாற்றின என்பதே உண்மை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எவ்வளவு தொலைவிற்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றாலும் ஐந்து காசிலேயே தகவல்களை தபால் கார்டு மூலமாக தெரிவிக்க முடிந்தது.

பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வு முடிவுகளை தபால் கார்டின் மூலமாகவே அறிவிப்பார்கள். ஆண்டுத் தேர்வின் கடைசி நாளன்று ஒவ்வொரு மாணவனும் ஒரு தபால் கார்டை வாங்கி அதில் தங்கள் விலாசத்தை எழுதி வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் மாணவர் தேர்வானால் PROMOTED என்று ரப்பர் ஸ்டாம்பில் பதிவு செய்து அனுப்பி வைப்பார்கள். பெயில் ஆனால் DETAINED என்ற வாசகத்தை பதிவு செய்து அனுப்பி வைப்பார்கள். தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று மாணவர்கள் ஒவ்வொருவரும் வீட்டு வாசலில் தபால்காரரை எதிர்நோக்கி பயத்துடனும் ஆவலுடனும் காத்திருப்பார்கள். தபால்காரர் தரும் தபால்கார்ட்டில் PROMOTED என்ற அச்சடித்த வாசகத்தை பார்த்ததும்தான் நிம்மதி அடைவார்கள்.

பல வருடங்களுக்கு முன்னால் தபால் அலுவலகங்களில் ரிப்ளை கார்டு என்றொரு தபால்கார்டு வழக்கத்தில் இருந்தது. அதாவது இரண்டு தபால் கார்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு கார்டில் தகவலை எழுதி தபால் பெட்டியில் சேர்க்க வேண்டும். அதைப் பெறுபவர் அதில் இணைக்கப்பட்டுள்ள REPLY CARDல் தேவையான பதிலை எழுதி நமக்கு அனுப்புவார். தமக்கு விரைவாக பதில் தேவை என்கிற பட்சத்தில் இந்த ரிப்ளை கார்டினை பயன்படுத்துவார்கள். மேலும், வயதானவர்களால் தபால் அலுவலகங்களுக்குச் சென்று தபால் கார்டை வாங்கி வர முடியாத சூழல் இருக்கும். அத்தகைய சூழலில் இணைக்கப்பட்டுள்ள ரிப்ளை கார்ட்டில் தகவல்களை எழுதி யாரிடமாவது கொடுத்து தபால் பெட்டியில் சேர்க்கச் சொன்னால் பதில் விரைவாக உரியவரிடம் சென்று சேரும். நமது முன்னோர்கள் எப்படி யோசித்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் தங்களுக்கு வரும் தபால் கார்டுகளை சேகரித்து வைக்க ஒரு வளைவான கம்பியை வைத்திருப்பார்கள். அதன் கீழ்புறத்தில் வட்டமாக வளைக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தை கேள்விக்குறி போல வளைத்து அதன் கூரான முனை வழியாக தபால்கார்டுகளைக் குத்தி சேகரித்து வைப்பார்கள். அதை ஒரு ஆணியில் மாட்டியும் வைப்பார்கள். அக்காலத்தில்  பெரும்பாலானவர்கள் வீட்டிலும் இதை நம்மால் காண முடியும்.

kalkionline



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post