Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்காவில் திருடி மாட்டிய இந்தியப் பெண்! போலீஸிடம் என்ன சொன்னார் தெரியுமா?


அமெரிக்கா இல்லினாய்ஸ் மாகாணத்தில் டார்கெட் மார்க்கெட்டில் 1300 டாலர் மதிப்புள்ள 767 பொருள்களை திருட முயன்ற இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ‘டார்கெட்’ என்ற சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். 7 மணி நேரம் கடைக்குள் சுற்றித்திரிந்த அந்தப் பெண் சுமார் 767 பொருள்களை ட்ராலியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

7 மணி நேரமாக ஒரு பெண் கடைக்குள் இருந்தபோதே கடை ஊழியர்கள் அவரை கவனித்துவிட்டனர். அவர் என்னதான் செய்கிறார் எனக் கவனித்துக்கொண்ட நிலையில், வாங்கிய பொருள்களுக்குப் பணம் கொடுக்காமல் பொருள்களுடன் அந்தப் பெண் எஸ்கேப் ஆக முயன்றுள்ளார்.

அதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கைது செய்தனர். அவர் பர்ச்சேஸ் செய்து வைத்திருந்த பொருள்களின் மதிப்பு 1,300 டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 1,08,000 ரூபாய் மதிப்புடையதாகும்.  இது தொடர்பான போலீசாரின் 'பாடி கேம்' வீடியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ‘நான் இந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல; இங்கே இருக்கப் போவதும் இல்லை. நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன், எடுத்த பொருள்களுக்குப் பணத்தைக் கொடுத்து விடுகிறேன்’ என்று அப்பெண் போலீசாரிடம் கெஞ்சுகிறார். அதற்குப் பெண் அதிகாரி ஒருவர், ‘இந்தியாவில் திருடுவதற்கு அனுமதி உண்டா?’ எனக் கேட்டார். தொடர்ந்து அப்பெண்ணைக் கைது செய்த போலீசார், அவர் மீது கடுமையான குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ வெளியானதையடுத்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பலரும் அந்தப் பெண்ணின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விருந்தினராக ஒரு நாட்டிற்குச் சென்று அந்நாட்டுச் சட்டத்தை மீறுவது வெட்கக்கேடானது என்றும், அந்தப் பெண் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் கெடுத்துவிட்டார் என்றும் கடுமையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்தப் பெண் செய்த முட்டாள்தனமான செயலால் மற்ற அமெரிக்கவாழ் இந்தியர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் என்றும், நாங்கள் அவரைப் போன்று பிரதிநிதித்துவப்படுத்தப்பட விரும்பவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் இந்தியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு நாட்டின் நற்பெயரைக் காக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர். சமீப காலமாக, அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுபோன்ற திருட்டுக் குற்றச்சாட்டுகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் விசா நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, ஹெச்-1பி விசா புதுப்பித்தல், கிரீன் கார்டு விண்ணப்பங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுவதுடன், தவறு நிரூபிக்கப்பட்டால் நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது. இதனிடையே, அமெரிக்கத் தூதரகம், விசா குறித்த எச்சரிக்கையை அளித்திருக்கிறது.

கொள்ளை போன்ற செயல்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவிற்கு உங்களைத் தகுதியற்றதாக செய்யக்கூடும் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதைத் தடுக்கலாம் என்ற அறிவுரையை அமெரிக்கத் தூதரகம் அளித்துள்ளது. மேலும், வெளிநாட்டினர் அமெரிக்காவின் சட்டத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments