Ticker

6/recent/ticker-posts

இனிமேல் இந்தியாவிடம் அதுக்காக பாகிஸ்தான் பிச்சை எடுக்காது.. காலம் மாறிடுச்சு.. தலைவர் நக்வி பேட்டி


ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. சமீபத்தில் இந்திய சுற்றுலாப்பயணிகள் மீது பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 2025 லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடாமல் விலகியது. அதே போல ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் பதில் கொடுத்தது.

அதன் படி இந்திய அணி பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடாது என்று விளையாட்டு துறை அறிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதற்கான அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பொதுவான மண்ணில் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட எந்த தடையும் இல்லை என்று விளையாட்டுத்துறை அறிவித்தது.

இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடுங்கள் என்று இந்தியாவிடம் பிச்சை எடுக்கப் போவதில்லை என்று அந்நாட்டு வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எந்த வகையிலும் குறையாத பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சிய காலம் முடிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி லாகூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

“இரு நாடுகளுக்கிடையே எப்போது பேச்சு வார்த்தை நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சமமாக இருப்போம். இனிமேல் பேச்சுவார்த்தைக்கு பிச்சை எடுக்க மாட்டோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அந்தக் காலம் கடந்து விட்டது. இனிமேல் எது நடந்தாலும் அது சமத்துவத்தின் அடிப்படையிலேயே நடக்கும்” என்று கூறினார்.

அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் விளையாடுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய விளையாட்டு துறை அறிவித்துள்ளது. ஆனால் இனிமேல் இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு விளையாட விரும்புகிறோம் என்று பிசிசிஐயிடம் கெஞ்சப் போவதில்லை என்று பாகிஸ்தான் வாரியத் தலைவர் நக்வி அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தாங்களும் சமமாக செயல்படுவோம் என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments