
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்க பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு உயிராபத்து உள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் இருதயத்தின் நான்கு வால்வுகளில் அடைப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றுள் ஒரு வால்வில் 100% அடைப்பு இருக்கும் நிலையில், சிறுநீர்க் கோளாறு, சோடியம் குறைபாடு,
அதிக இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகள் மட்டுமன்றி,
நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாகவே உள்ளதால் சத்திர சிகிச்சை செய்ய முடியாதென்பதால், ரணிலுக்கு பாரிய உயிராபத்து உள்ளதாகத் தெரிவித்து, ரணிலின் உடல் நிலையை கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறு வாதாடியமையால் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
ரணில் விக்கிரமசிங்க பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
செப்டம்பர் 22ல், ரணில் விக்கிரமசிங்க தனது மருத்துவ நிலையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கப் படாததால், நீதிமன்றம் அவரது 'பிணை' கோரிக்கையை நிராகரித்தது.
இன்று போதுமான மருத்துவ சான்றுகளை சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் சிறப்பு சூழ்நிலை ஏற்பட்டதாகக் கருதியே பிணை வழங்கியது; பிணை என்பது தற்காலிக விடுவிப்பு மட்டுமே, முற்றிலுமான விடுதலையல்ல!
பிணையில் விடுவிக்கப்பட்ட நபர், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு தவணையிலும் நீதிமன்றத்திற்குக் கட்டாயம் வருகை தர வேண்டும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை உறுதியாகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, அவருக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரளுமாறு எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்ததால், ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் திரண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் தொடங்கிய நிலையில், ரணில் விக்கிரமசிங்க இன்றியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜெயசூரியா, அலி சப்ரி ஆகியோர் விக்ரமசிங்கவுக்காக வழக்கில் ஆஜராயினர். இவர்களைத் தவிர, மேலும் சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.
அதனால், கொழும்பு கோட்டை மெஜிஸ்ட்ரேட் நீதிமன்ற வளாகம் காலை முதல் பரபரப்பாகி இருந்தது.
நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் போலீசார், படையினர் குவிந்திருந்தனர்; ஊடகங்கள் நேரலைகள் செய்த வண்ணமாக இருந்தன.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வாக்களித்த மக்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ், நீதித்துறை அதிகாரிகள் தங்களது கடைமைகளைச் செய்யும்போது மௌனம் காப்பது உசிதமானது என்றும், நாட்டு மக்களின் வரிப் பணத்தை வழித்துத் துடைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தும்போது, ஊழலை ஒழிக்கவென்று வாக்களித்த நோக்கத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது என்று சமூக ஊடகங்கள் ஆங்காங்கே வலியுறுத்தி வந்தன.
ஊழல்வாதிகளை சட்டத்துறை கைது செய்கிறது; நீதித்துறை தீரப்பளிக்கிறது; இரண்டு துறைகளும் சுயாதீனமாக இயங்க நிறைவேற்றுத்துறை அனுமதிக்கிறது. சட்டவாட்சி என்பது சட்டத்தின் முன்னாள் சகலரும் சமம் என்பதே!
"அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் கடந்த காலத்தில் சேர்ந்தும் இருந்தார்கள், பிரிந்தும் இருந்தார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு எந்த சவாலும் ஏற்படவில்லை; சவால்கள் அவர்களுக்கே இருக்கிறது.
இப்போது ஒன்றிணைந்துள்ள 90 வீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது. குற்றங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவே அவர்கள் கூடியுள்ளனர்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது; சாதாரண மக்களுக்கு ஒருவிதமாகவும், பதவியில் இருப்பவர்களுக்கு இன்னொரு விதமாகவும் சட்டத்தை நடைமுறைப் படுத்த முடியாது.
எவர் தவறிழைத்திருப்பினும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்தோர் தண்டிக்கப்படாவிட்டால், அவர்கள் மேலும் தவறுகள் செய்வதை தடுக்க முடியாது.
எது எவ்வாறாயினும் நீதிமன்றம் எடுக்கும் முடிவே இறுதித் தீர்வாகும்" என்று JVP யின் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது சட்டத்திற்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும், இது இலங்கை அரசியல் வரலாற்றின் முதல் அத்தியாயம் எனக் குறிப்பிட்டுள்ள சிவஞானம் சிறீதரன் எம்.பி., முன்னால் ஜனாதிபதி ஒருவரைக் கைது செய்ய முடியுமான சட்டத்திருத்தத்தை ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்திலேயே கொண்டு வந்தார்
என்றும் தெரிவித்துள்ளார்.
துணை பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க தெரிவிக்கையில், 2023 செப்டெம்பர் 22 மற்றும் 23ம் திகதிகளில் விக்கிரமசிங்க லண்டனுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணம், அரச நிதியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் தனிப்பட்ட விஜயம் எனப் பதிவு செய்யப் பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த விஜயத்தில் விக்கிரமசிங்க, அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்ட்ரா பெரேரா, வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகள், விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வைத்தியர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் நான்கு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை இந்த விஜயத்திற்கு வசதி செய்து கொடுப்பதற்காக லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகருடன் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும், கியூபா மற்றும் அமெரிக்காவில் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் இருந்தபோதிலும், ஐக்கிய இராச்சியப்பயண திட்டத்தில் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பொலிஸாரின் தகவல்படி, ஐக்கிய இராஜியத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகம் விக்கிரமசிங்க, முதல் பெண்மணி மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கான பயணம், தங்குமிடம், வாகன வாடகை மற்றும் பிற செலவுகளுக்காக இலங்கை £40,445 (சுமார் ரூ. 16,207,573) பில் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அரச கடமைகளில் இருந்தபோது இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதால், விமானக் கட்டணம் இதில் உள்ளடங்கவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயசிங்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் பதிவுகளின்படி, வைத்தியர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்காக மேலதிகமாக 3.2 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து, 2025 மே 23ம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments