
குற்றப் புலனாய்வுத் துறையில் தனக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலமளிக்க அழைக்கப்பட்டதன் பேரில், 2025.08.22ம் திகதி காலை ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்றார்.
குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
சட்டமா அதிபர் துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் அரசாங்கத்தின் சார்பாக நீதிமன்றில் ஆஜராயினர்; ரணில் விக்ரமசிங்க சார்பாக வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகிய நிலையில் விசாரணைகள மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
நீதிமன்றத்தில் ஆஜரான ரணில் விக்ரமசிங்கவின் வழக்கறிஞர்கள், முன்னாள் ஜனாதிபதி இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நல உபாதைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவரையே சார்ந்துள்ளதாகவும், தங்கள் கட்சிக்காரரின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்போது இவ்வாறான சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
இதனிடையில் நீதிமன்ற அறையில் 5.30க்கு ஏற்பட்ட மின்சாரத் தடங்கல் ஏற்பட்டு, அது 7.30 வரை நீடித்தது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடி நின்றிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், மாலை 9.41 மணியளவில் நீதிமன்றம் அவரை 2025 ஆகஸ்ட் 26ம் திகதி வரை விலக்கமறியலில் வைக்க முடிவு செய்ததாக அறிவித்தது.
இலங்கை வரலாற்றில் முன்னாள் ஐனாதிபதி ஒருவருக்கு கைவிலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் தடவை; யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களல்லர்; சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதற்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளப்படுகின்றது.
அத்துடன், ரணிலை உள்ளே போட்டது ராஜபக்சாக்களை உள்ளே போட ஒத்திகையா என்று கூட சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன.
அத்துடன், இது ஒரு முன்னாள் ஜனாதிபதி மீது நடந்த முதல் கைது என்பதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகின்றது!
மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான தனிப்பட்ட பயணமாக லண்டனுக்குச் சென்றுவர அரசாங்க நிதி 16.9 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தியது குறித்தே குற்றப் புலனாய்வுத் துறை இந்த விசாரணையைத் தொடங்கியது.
கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட B அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி, 2023 செப்டம்பர் 22,23ம் திகதிகளில் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பயணம், எந்தவொரு உத்தியோகபூர்வ அரசாங்க நோக்கமும் இல்லாத நிலையில், விக்கிரமசிங்கவின் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கான அரச பயணத்துடன் இணைக்கப்பட்டது என்றும், தனிப்பட்ட நிகழ்விற்காக ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு விமானத்தில் ஒரு தூதுக் குழுவுடன் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப் படுகின்றது.
2025 ஜூன் 24 அன்று குற்றப் புலனாய்வுத் துறை இது தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்தது மட்டுமல்லாது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய திருமதி சாண்ட்ரா பெரேராவிடமிருந்தும், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவிடமிருந்தும் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களையும் பதிவு செய்தது.
இத்தகைய சூழ்நிலையில்தான், மேலதிக விசாரணை தொடர்பாக வாக்கு மூலங்களைப் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் 22ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில்,அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படும் யூடியுபர் ஒருவரின் எதிர்வு கூறல் ஒன்று சமூக வலைத் தளத்தில் சஞ்சரித்தது.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பதனை முன்கூட்டியே எவ்வாறு ஒருவர் எதிர்வு கூறமுடியும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவார் என்பதை முன்னமே எதிர்வு கூறுவது, வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எந்தவொரு அரசியல்வாதியும் தகுதி தராதரமின்றிக் கைது செய்யப்படுவர் என்ற பிரசாரத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல்வாதிகளை விசாரணை செய்தும், கைது செய்தும் வருகின்றது. இவற்றுள், மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோரின் சிறைத் தண்டனைகளைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
இந்த அடிப்படையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட இந்த சம்பவமும் வரலாற்றில் சுட்டிக்காட்டப்படும் தனித்துவமிக்க விடயம் என்பதுடன், இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது!
வரலாற்றில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்படா நிலையிலிருந்த இலங்கையில், முதன்முறையாக ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்தினூடாக வரலாறு திருத்தி எழுதப்படுவதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாததும், ஆளுமை மிக்கதுமான தலைவராக அடையாளப் படுத்தப்படும் ரணில் விக்ரமசிங்க, இலங்கை வரலாற்றில் அதிக தடவைகள் பிரதமராகப் பதவி வகித்த ஒருவராக விளங்குகின்றார்; அரசியற் பரப்பில் இவர் "மிஸ்டர் க்ளீன்” என்ற சிறப்புப் பெயரையும் கொண்டுள்ளார். இவர் ஊழலில் இறங்கவும் மாட்டார்; ஊழல் செய்வோரையும் கண்டுகொள்ளவும் மாட்டார் என்ற ஒரு வர்ணிப்பும் கூட இவருக்குண்டு!

ரணிலின் 40 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றில் எட்டாக்கனியாக இருந்த 'ஜனாதிபதி' பதவியையும், பொருளாதார நெருக்கடியின் பின்னர், நாட்டின் அரச தலைவர்கள் புற முதுகிட்டு ஓடிய தருணத்தில் சுவைத்து மகிழ்ந்தார்; அதுவும், தன்னுடைய அரசியல் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து, கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்து!
இதனையடுத்து நாட்டின் பொருளாதார நிலைமைகளை ஓரளவு ஸ்தீரநிலைக்குக் கொண்டு வந்த இவர், பிந்நாட்களில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கியபோதிலும், மக்கள் கடந்த ஆட்சியாளர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பினால் மாற்றத்தை ஏற்படுத்தவென்று புதிய தரப்புக்கு ஆதரவு வழங்கியதால், அநுர குமார திசாநாயக்கா ஜனாதிபதியானார்.
சர்வதேச ரீதியில் நன்மதிப்பை வென்றவரும், உலகத் தலைவர்களுடன் ஆளுமைமிக்க தொடர்புகளைப் பேணிவருபவருமான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, சிறை சென்றுமை சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கலாம்!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments