
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 172 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு 2வது முறையாக பாகிஸ்தானை தோற்றுடித்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். முன்னதாக கடந்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் டக் அவுட்டான சாய்ம் ஆயுபை நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் 3வது இடத்தில் களமிறக்கியது. அவருக்கு பதில் அனுபவ அதிரடி வீரர் ஃபகார் ஜமானை மீண்டும் பாகிஸ்தான் ஓப்பனிங்கில் களமிறக்கியது.
அந்த வாய்ப்பில் 3 பவுண்டரிகளை பறக்க விட்ட ஜமான் 15 (9) ரன்கள் எடுத்திருந்த போது ஹர்திக் பாண்டியா வேகத்தில் எட்ஜ் கொடுத்தார். அதை விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நன்றாக பிடித்ததாக கருதிய கள நடுவர் அவுட் வழங்கினார். இருப்பினும் பந்து அவருடைய கைகளுக்கு முன் தரையில் பட்டதாக கருதிய ஜமான் மறுபரீசலனை செய்யுமாறு நடுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதை 3வது நடுவர் சோதித்த போது முதல் பார்வையில் பந்து தரையில் பவுன்ஸ் ஆவது போல் தெரிந்தது. ஆனால் 2வது பார்வையில் பந்து சஞ்சு சம்சானின் நுனி விரல்களில் பட்டு பவுன்ஸாகி கைக்குள் தஞ்சமடைந்தது தெளிவாக தெரிந்தது. அதை நேரலையில் தெளிவாக சொன்ன 3வது நடுவர் மீண்டும் அவுட் வழங்கினார்.
ஆனாலும் பந்து தரையில் பட்டதாகவே கருதிய ஜமான் ஏமாற்றத்துடன் தலையை அசைத்துக் கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் அந்த தீர்ப்பை அம்பயர் சரியாக வழங்கியிருந்தால் ஜமான் இன்னும் நிறைய ரன்கள் குவித்து இந்தியாவை தோற்கடித்திருப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி டப்மட் எனும் பாகிஸ்தான் ஒளிபரப்பு சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஃபகார் நாட் அவுட். மறுபரிசீலனையில் ஒரு பிளவு முடிவிருந்தால் சந்தேகத்தின் பலன் அவருக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் மிட்விக்கெட் திசையில் இருக்கும் கேமராவில் சோதிக்க என்ன வாய்ப்பிருந்தது? அங்கே 26 கேமராக்கள் இருந்தும் சரியான கோணம் கிடைக்கவில்லை. பின்னர் வெறும் 2 கோணங்களை பார்த்து விட்டு அவர்கள் அவுட் வழங்கினர். ஒருவேளை ஃபகார் தொடர்ந்து களத்தில் இருந்திருந்தால் இந்த போட்டி வித்தியாசமாக திரும்பியிருக்கும். அங்கே அம்பயரிங் தரம் ஜோக்காக இருந்தது. ஏனெனில் பந்து முதலில் தரையில் பட்டது. அதற்கு அடியில் கிளவுஸ் இல்லை” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments