Ticker

6/recent/ticker-posts

Ad Code



"300 பவுனோடு வந்தால் நீ மருமகள், இல்லைனா வீட்டு வேலைக்காரி" - மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமை!


300 பவுனோடு வந்தால் நீ மருமகள், இல்லை என்றால் நீ வீட்டு வேலைக்காரி.." இப்படி நாள்தோறும், டார்ச்சர் செய்து அந்த இளம் பெண்ணை சம்பளம் வாங்காத வேலைக்காரியாகவே மாற்றி விட்டனர். மாமியார் வீட்டில் நாய்க் கழிவு முதல், செத்த எலி வரை சுத்தம் செய்து சோர்ந்து போன அந்த இளம் பெண், கடைசியில் தனது உயிரையே மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் தான் பெற்றோரை கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளது. 300 சவரன் நகை இளம் பெண்ணின் மூச்சை பறித்துச் சென்ற சோக சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?

மதுரை உசிலம்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வி-அக்னி தம்பதி, இவர்களது இளைய மகள் பிரியதர்ஷினி. பிரியதர்ஷினிக்கும், மதுரை செல்லூரைச் சேர்ந்த இலங்கேஸ்வரன், தனபாக்கியம் தம்பதியின் மூத்த மகன் ரூபான் ராஜுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இலங்கேஸ்வரன் அதிமுகவில் பொறுப்பில் உள்ளார்.

திருமணத்தின் போது 300 பவுன் நகை போட வேண்டும் என மணமகன் வீட்டார் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. "எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்தோம். அதே போல் எங்கள் வீட்டுக்கு வரும் மருமகளும் 300 பவுன் நகையோடு தான் வரவேண்டும்" என பெண் வீட்டாரை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் பிரியதர்ஷினி வீட்டில் 125 சவரன் நகைகள் போட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிறப்பாக சீர் செய்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்காலக் கனவுகளோடு கணவன் வீட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார் பிரியதர்ஷினி. ஆனால், கணவன் வீட்டாரோ மருமகள் அணிந்து வந்த நகைகளை மட்டும் தான் உற்று பார்த்திருக்கிறார்கள். குறைவான நகை போட்டு வந்ததாகக் கூறி மருமகளை படாத பாடு படுத்தியதாகக் கூறப்படுகிறது. வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பிரியதர்ஷினிதான் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிரியதர்ஷினியை வேலை வாங்குவதற்காக வீட்டில் உள்ள வாஷிங் மெஷினிற்கு ஓய்வு கொடுத்து விட்டனர் மாமியார் வீட்டினர். அனைவரின் துணிகளையும் அவரே தனது கைகளால் துவைக்க வேண்டும் என வற்புறுத்தி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மணமகன் வீட்டில் உள்ள நாய் கழிவுகள் முதற்கொண்டு பிரியதர்ஷினியே சுத்தம் செய்திருக்கிறார். வீட்டில் எலி செத்துக் கிடந்தால் கூட அதை பிரியதர்ஷினி தான் எடுத்து போட்டு சுத்தம் செய்ய வேண்டுமாம்.

இப்படியாக டார்ச்சர் தொடர மேலும் 125 சவரன் நகைகளை வாங்கி வந்தால் தான் மருமகளாக ஏற்றுக் கொள்வோம் என நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத பிரியதர்ஷினியின் பெற்றோர் காவல்நிலையம் வரை சென்று புகார் கொடுத்துள்ளனர். பிரியதர்ஷினியின் உடலில் காயம் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை கூட எடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், உசிலம்பட்டியில் தனது பெற்றோர் வீட்டில் இருந்த பிரியதர்ஷினி செல்லூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்காகவே தயாராக காத்திருந்த மாமியார் குடும்பத்தினர் அவருடன் மீண்டும் சண்டையிட்டுள்ளனர். எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது என்ற மனநிலைக்கு வந்த பிரியதர்ஷினி இதற்குமேல் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் மன உளைச்சல் உந்தித் தள்ள, தூக்க மாத்திரையை எடுத்து அளவுக்கு அதிகமாக விழுங்கி விட்டார்.

மயங்கி விழுந்து கிடந்தவரை உடனே தூக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இந்த உலகத்தை விட்டே விடைபெற்று சென்று விட்டார் பிரியதர்ஷினி. அவரது கையில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் தங்கள் வீட்டுப் பெண் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தனது மகள் வரதட்சணை கொடுமை பொறுக்க முடியாமல் தான் உயிரை மாய்த்துக் கொண்டதாக பிரியதர்ஷினியின் தாய் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் வரதட்சணை கொடுமை என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் தனது மகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரியதர்ஷினியின் பெற்றோர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தனது மகளின் சாவுக்கு காரணமாக இருந்த தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மதுரை அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு கட்டடம் அருகே கோரிப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலை கை விட்டனர். பெண்ணுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதால் உடனடியாக கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட உள்ளது. வரதட்சணை கொடுமையால் இளம் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments