Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-81


தாம் நீருக்குள் இறங்கிய  இடம் வரை ஓடிய செரோக்கி,  மரக்குற்றிமேல் வைத்திருந்த ரெங்க்மாவின் அங்கவஸ்தியையும், அவள் நீரினுள் காணாமற்போனபோது தன்னை அறியாமலேயே வீசி எறிந்த தனது அங்கவஸ்தியையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தபோது... அங்கு அவன் கண்ட காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது! அங்கிருந்த ஒருவரின் மேலங்கியால் போர்த்தப்பட்டிருந்த  அவளுக்கு   தான் கொண்டுவந்த அங்கவஸ்தியை அணியக்கொடுத்தான் செரோக்கி!

செரோக்கியின் கரிசனை கண்டதும்... வனத்துக்குள் வாழும் சோடிப்புறா இவர்கள் என்பது ஆய்வுக் குழுவினருக்குப் புரிந்துவிட்டது!  நகரத்து நாகரிக மனிதர்களான அவர்கள், இனம்புரியாத கலக்கத்தினால் ஒடிந்துபோயிருந்த சோடிப்புறாக்களை ஒன்று சேர்த்து....  தடவிக்கொடுத்து ஆறுதலடையச் செய்தனர்!

அதன் பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்ட செரோக்கி,  “கம்... கம்” என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலச்  சொல்லை உச்சரித்தவனாக ...  தன் இரு கரங்களாலும் அவர்களை அழைத்த பரிபாசையைப் புரிந்துகொண்ட அந்தக் குள்ள மனிதர்கள்... தரையில் கிடந்த தத்தமது பொதிகளை எடுத்துத் தோள்களில் சுமந்தவர்களாக, செரோக்கியையும், ரெங்க்மாவையும் பின் தொடரலாயினர்!

நீருக்குள் சிக்கி உயிருக்காகப் போராடி மனதளவில் நொந்து போயிருந்த ரெங்க்மாவின் நடையில் தளர்வைக் கண்டு கொண்ட   செரோக்கி அவளைக் கைத்தாங்கலாக்கியவாறு   மெல்ல நடந்தான்!

வனத்தைத் தாண்டி வந்து  புரோகோனிஷ் கிராமத்துக்குள் நுழைந்ததும் அங்கு நடமாடிக் கொண்டிருந்தோர் நாகரிக உடையணிந்த மனிதர்களைக் கண்டதும் அவர்களை ஒருவித குரோத மனப்பான்மை யுடன் நோக்கலாயினர்! பாதையில் நடந்து வந்துகொண்டிருந்த சின்னஞ்சிறுசுகள் கூட புதிய மனிதர்களைக் கண்டதும் தூரவிலகி ஓடலாயினர்! மூத்த கிராமவாசிகள்  செரோக்கியை முறைத்துப் பார்த்துக்கொண்டே விலகி நடந்தனர்!

எப்போதும் அந்நியர்களைத் தமது வனப்பகுதிக்குள் அனுமதிக்காத  அவர்கள்   காலாகாலமாகத்   தாம் கடைபிடித்துவரும் மரபை, செரோக்கி மீறிச் செல்வதாக உணர்ந்தனர் போலும்!

செரோக்கி எதையுமே கண்டு கொள்ளாதவனாக ரெங்மாவைக் கைத்தாங்கலாக்கியவனாக நடந்து கொண்டிருந்தான்! ரெங்க்மாவை நீருக்குள்ளிருந்து காப்பாற்றிய அவர்களை உபசரிக்க வேண்டுமென்ற வெறி மாத்திரமே அவனிடம் குடிகொண்டிருந்தது!

பெரியகல்லோரமாக நடந்துவந்த அவர்கள், அலவத்தையை  ஊடறுத்து ரெங்க்மாவின் ஜாகையைத் தாண்டி நடந்து கொண்டிருந்த போது,  களைப்புத்தீர அங்கிருந்த மரவேர்களில் அமர்ந்து இளைப்பாறினர்!

(தொடரும்)

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments