Ticker

6/recent/ticker-posts

ஒரு இளம் பெண், ஒரு இரவு, 9 உடல்கள்... சிறிது நேரத்தில் நடந்த 'ஷாக்' - கண் இமைக்கும் நேரத்தில் அழிந்த அரச குடும்பம்!


2008-ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, குடியரசாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஞானேந்திரா காத்மாண்டுவில் நிர்மல் நிவாஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

வன்முறை மற்றும் கலவரம் காரணமாக உலக ஊடக பார்வை தற்போது நேபாள நாட்டின் மீது விழுந்துள்ளது. இதேபோல் 2001-ஆம் ஆண்டும் நேபாளம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. அதுவும் எதிர்மறை காரணங்களுக்குத்தான். ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய அரச குடும்பப் படுகொலை குறித்த செய்திகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளன. இன்றளவும் மர்மம் நிறைந்த இந்தப் படுகொலை சம்பவத்தை ஏராளமானோர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

2001-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, நேபாள அரச குடும்பத்தினர் காத்மாண்டுவில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் வழக்கமான இரவு உணவுக்கு ஒன்றிணைந்தனர். அப்போது, மன்னரின் முதல் வாரிசான 29 வயதான இளவரசர் திபேந்திரா, (Dipendra) மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் காதலித்துக் கொண்டிருந்த தேவயானி ராணாவுடன் (Devyani Rana) தொலைபேசி வாயிலாக பேசிய திபேந்திரா, (Dipendra) மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவரைப் பணியாளர்கள் அவரது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து முழு ராணுவ உடையில் அங்கு வந்த திபேந்திரா, (Dipendra) கையில் M-16 rifle மற்றும் pistol இருந்துள்ளது. உணவு அருந்தும் அறைக்குள் நுழைந்த திபேந்திரா, (Dipendra) யாரிடமும் எதுவும் பேசாமல், முதலில் மன்னர் பிரேந்திரா-வை நோக்கி சுட்டார். கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மேலும் 8 பேரை சுட்டுத் தள்ளினார்.

இளவரசர் திபேந்திராவின் தாய் அரசி ஐஸ்வர்யா (Aishwarya), திபேந்திராவின் இளைய சகோதரர் நிரஞ்சன் (Prince Nirajan), திபேந்திராவின் தங்கை சுருதி (Princess Shruti Shah), மன்னர் பிரேந்திராவின் சகோதரர் தீரேந்திரா (Prince Dhirendra), திபேந்திராவின் மாமா காட்கா (Prince Khadga Shah), திபேந்திராவின் அத்தைகள் சாரதா, சாந்தி, ஜெயந்தி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். அந்த இரவு காத்மாண்டு அரண்மனையில், ரத்த வெள்ளம் ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சி அளித்திருந்தனர்.

9 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு திபேந்திரா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. அரண்மனையின் வாயிலில் இருந்த பூங்காவில், தலையில் குண்டுடன் கோமா நிலையில் திபேந்திரா கண்டெடுக்கப்பட்டார். கோமா நிலையில் இருந்த போதும், திபேந்திரா நேபாளத்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். நான்கு நாட்கள் கழித்து திபேந்திரா மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர், பிரேந்திராவின் இளைய சகோதரர் ஞானேந்திரா (Gyanendra) மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இந்தக் கொடூரமான படுகொலைக்குப் பிறகு, உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழுவிற்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஷவ் பிரசாத் உபாத்யாயாவும் (Keshav Prasad Upadhyaya) - அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் தாராநாத் ரன்பாத்தும் (Taranath Ranabhat) - தலைமை வகித்தனர். இந்தக் குழு, ஒரு வாரம் விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இளவரசர் திபேந்திராதான் 9 பேரையும் படுகொலை செய்ததாகக் கூறப்பட்டது.

திபேந்திரா தான் விரும்பிய தேவயானி ராணா-வை திருமணம் செய்ய அவரது பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்து, தனது குடும்பத்தினரைச் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது. எனினும், இந்த அறிக்கை பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது.

படுகொலை நடந்தபோது, திபேந்திராவின் மாமா ஞானேந்திரா, இரவு விருந்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும், ஞானேந்திரா குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. எனவே, அதிகாரத்தைக் கைப்பற்ற ஞானேந்திரா இந்தப் படுகொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது. திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர் வலதுகை பழக்கமுள்ளவராக இருந்தும், தலையின் இடது பக்கத்தில் காயம் ஏற்பட்டது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அரச குடும்பத்தின் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடந்தபோது ஏன் செயல்படவில்லை என்பது குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இந்தப் படுகொலை நேபாளத்தின் மன்னராட்சியை ஆட்டம் காண வைத்தது. அதுவரை மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மன்னர் பிரேந்திராவின் மறைவுக்குப் பிறகு, அவரது தம்பியும், மக்களிடையே செல்வாக்கு இல்லாதவருமான ஞானேந்திரா மன்னரானார். ஞானேந்திரா மன்னரான பிறகு, மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டதுடன், அரசியல் அதிகாரங்களையும் தன்வசம் வைத்துக் கொண்டார். உச்சக்கட்டமாக 2005-ஆம் ஆண்டு முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

அவரது இந்த சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக Loktantra Andolan என்ற பெயரில் மக்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். நேபாள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட ஏழு முக்கிய அரசியல் கட்சிகள், மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்தன. நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தமும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் காத்மாண்டுவில் கூடி, மன்னருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தொடர் போராட்டங்கள் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி தனது அதிகாரங்களை விட்டுக்கொடுத்து, நாடாளுமன்றத்தை மீண்டும் நிறுவுவதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 2008-ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, குடியரசாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஞானேந்திரா காத்மாண்டுவில் நிர்மல் நிவாஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

மன்னராக இல்லாவிட்டாலும், அவர் நேபாள அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே உள்ளார். சமீப காலமாக, நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் ஊழல் காரணமாக, மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி மன்னராட்சி மற்றும் இந்து ராஜ்யத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கோரும் ஒரு முக்கிய அரசியல் கட்சி.

மன்னர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கடந்த மே மாதம் தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த போராட்டங்களின்போது, "Come back, king, save the country" என்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதற்கு முன்பாக, பல்வேறு இடங்களிலுத் தருணங்களிலும் மன்னர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருந்தாலும், நேபாளத்தில் நடந்த படுகொலை தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஒரு நாட்டின் அரச குடும்பம் முழுவதுமாக ஒரு விருந்தில் வைத்து, குடும்ப உறுப்பினராலேயே கொல்லப்பட்டது, உலக வரலாற்றில் அரிதானது.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments