
கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது நினைவு தினக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க ஆலோசனை முன் வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு, சகல கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது பற்றி உறைகளை நிகழ்த்தியிருந்தனர்.
இக்கூட்டத்தில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் கூட்டம் இறுதிவரை நடந்து முடிந்தது. அரசியலில் படுதோல்வி அடைந்து, முகவரியற்றிருக்கும் சிலர் இதற்காக ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், புதிய கூட்டணியை உருவாக்கி, புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பதவி வழங்குவது பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே ஒரு அதிருப்தி காணப்பட்டது.
இங்கு பேசப்பட்ட முக்கிய விடயம், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் சகல கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும்.
இந்த வகையில் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் ஸாகல காரிய வசம் அவர்கள் கலந்து கொண்ட போதிலும், அந்தத் தரப்பில் இருந்து இதற்காக இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை.
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்க நாமல் ராஜபக்ச கனவு காணும்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியமாகுமா ?
அடுத்த விடயம் சஜித் பிரேமதாஸா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நாட்டில் பலம் பொருந்திய ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், அதிலும் விஷேடமாக 2029 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவது சாத்தியப்படுமா ?
ஏற்கனவே 100 ஆசனங்களை வைத்திருக்கும் ஒரு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய சிறு கட்சிகள் ஒன்று படுவது என்பது ஒரு சாத்தியமான விடயம்.
எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமல், பாராளுமன்ற உறுப்பினரை கூட பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலையில், பல தசாப்தங்களாக தோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கீழ் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் ஏனைய கட்சிகள் ஒன்று படுமா என்பது ஒரு நிறைவேறாத காரியமாகும்.
கடந்த 70 வருடங்களாக அரசியலில் மாறி மாறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இரு கட்சிகள்

இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களாக அரசியலில் மாறி மாறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இரு கட்சிகளையும் மக்கள் வெறுத்ததே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணமாகும்.
இந்நிலையில் மக்களால் வெறுக்கப்பட்ட சகல தரப்பும் ஒன்றிணைவதால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்பதை எதிர்பார்க்க முடியாது.
மேலும், கடந்த காலங்களில் கோடி கோடியாக நடந்த ஊழல், மோசடிகள் மக்களின் முன் பகிரங்கப்படுத்தப்பட்டு, அவற்றுக்கான வழக்குகள் தொடரப்பட்டு, அவற்றிற்கு தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அரசாங்கத்துக்கு எதிராக எந்த கூட்டணி அமைப்பதிலும் பலனில்லை என்பதே உண்மை.
அடுத்தபடியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை பொறுத்தவரையில் எவர் அதிகாரத்தின் கீழும் அரசியலில் ஈடுபட அவர் விரும்புவதில்லை. இதுவே அவர் நிலைப்பாடாகும். எவர் எந்த கூட்டணி அமைத்த போதிலும் தான் தலைமை தாங்க வேண்டும் என்பதே அவரது கொள்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கும் பிளவுக்கும் காரணமாக அமைந்தது இவ்வாறான இவரது விடாப்பிடியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாசா அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியை அமைக்கும் முன்னர், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமை பதவியை சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு வழங்கி, கட்சியின் மூத்த ஆலோசகராக, கட்சியில் ஒரு கௌரவ உறுப்பினராக கட்சியில் இருக்கும்படி பல முக்கியஸ்தர்கள் வேண்டிக் கொண்ட போதிலும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதை நிராகரித்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ்வாறான ஒரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் கூட்டணி என்பது கலைந்து போகும் கனவில் காணும் மாயாஜாலங்களே தவிர வேறில்லை.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments