Ticker

6/recent/ticker-posts

பட்டப்பகலில் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரியை மோதி தூக்கி வீசிய கார்! விபத்தில் எழும் தீவிர சந்தேகங்கள்


டெல்லியில் ஹரி நகர் பகுதியில் நவ்ஜோத் சிங் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 52 வயதான இவர், மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இவர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பாங்க்லா சாகிப் குருத்வாராவுக்கு சென்றுள்ளார். பின்னர், தனது மனைவி சந்தீப் கவுர் உடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கன்ட்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரிங் ரோடு பகுதியில் வந்த போது, அவ்வழியாக பி.எம்.டபிள்யூ. கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த கார் பைக் மீது பலமாக மோதியுள்ளது.

இதில், தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த நவ்ஜோத் சிங், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மனைவி சந்தீப் கவுருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண்ணும், அதில் இருந்த ஆணும் காயமடைந்துள்ளனர்.

இருந்த போதும், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நவ்ஜோத்தின் மனைவி சந்தீப் கவுரை காரிலேயே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கலாம் என சந்தீப் கவுர் கூறியுள்ளார்.

ஆனால், காரை ஓட்டி வந்த பெண், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த விபத்து குறித்து சந்தீப் கவுர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் 24 மணி நேரத்துக்குப் பின் விபத்து ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், குர்கிராமில் வசித்து வரும் 38 வயதான ககன்தீப் என்பது தெரியவந்தது. விபத்தின் போது காரில் இருந்த ஆண் அவரின் கணவர் பிரிக்-ஷித் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேவேளையில், விபத்து ஏற்படுத்திய இடத்தின் அருகே பல மருத்துவமனைகள் உள்ள போது, 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவர் விபத்து ஏற்படுத்திய பெண் ககன்தீப்பின் தந்தை என்பது அம்பலமாகியுள்ளது. இதனால், விபத்து ஏற்படுத்தியதில் இருந்து தப்பிப்பதற்காக அவர் ஏதேனும் சதித் திட்டம் தீட்டினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டெல்லியில் அண்மைக் காலமாக போக்குவரத்து விதிமீறல்களால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் மின்னல் வேகத்தில் சென்ற பி.எம்.டபிள்யூ. கார், பைக் மீது மோதிய விபத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நவ்ஜோத் சிங் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் தலைநகர் டெல்லியின் சாலை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

news18


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments