
சீனாவில் 16 வயது சிறுவன் ஒருவன் உயரத்தை அதிகரிக்க சிகிச்சை பெற்ற நிலையில், இரண்டே வாரத்தில் அவர் தனது பழைய உயரத்துக்கு திரும்பியதால் அதிர்ச்சியடைந்தார், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
தென்கிழக்கு சீனாவில், 16 வயது சிறுவன் ஒருவன் விலையுயர்ந்த உயரம் அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சிகிச்சையின் மூலம் அவர் 1.4 செ.மீ. உயரம் வளர்ந்ததாக கூறப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் அவர் தனது அசல் உயரத்துக்கே திரும்பினார். இந்த சம்பவம் குறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபுஜியன் மாகாணம், சியாமெனில் வசிக்கும் ஹுவாங் என்கிற சிறுவன், பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை 16,700 யுவான் (சுமார் ரூ.2 லட்சம்) செலவில் தனது உயரத்தை அதிகப்படுத்த சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது அவரது உயரம் 165 செ.மீ. இல் இருந்து 166.4 செ.மீ. ஆக உயர்ந்தது. ஆனால், மருத்துவ அமர்வுகள் அனைத்தும் நிறைவடைந்ததும், மீண்டும் அவரது உயரம் 165 செ.மீ. ஆகக் குறைந்துவிட்டது.
சிகிச்சை வழங்கிய நிறுவனத்தில் அவரது தந்தை புகார் அளித்தபோது, “உங்கள் மகன் சரிசெய்ய முடியாத அளவுக்கு வயதானவர்” என்று ஊழியர்கள் கூறியதாகவும், பணத்தை திருப்பித் தருவதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை, இத்தகவலை முன்கூட்டியே தெரிவிக்காத அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட தகவல் படி, சிறுவன் ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிகிச்சைக்கு அழைக்கப்பட்டார். கால்களை நீட்டுதல், முழங்கால்களை செயல்படுத்துதல் போன்ற முறைகள் சிகிச்சையில் இடம்பெற்றன. சிறுவன் ஒரு அமர்வை தவறவிட்டால், உடனே உயரம் குறைந்துவிடும் என அவர்கள் தெரிவித்ததாக அந்த சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
மருத்துவ நிபுணர்கள் இந்த நடைமுறையை முற்றிலும் அறிவியல் பூர்வமானதல்ல என்று கண்டித்துள்ளனர். பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த எண்டோகிரினாலஜி நிபுணர் வு சூயன், இதுபோன்ற கட்டாய செயல்முறைகள் மூலம் உயரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறினார்.
“ஒரு நபர் காலை வேளையில், மாலை வேளையை விட அரை முதல் ஒரு செ.மீ. அதிக உயரமாக இருக்கலாம். அது முதுகெலும்பின் தினசரி சுருக்கம் மற்றும் தளர்வால் ஏற்படும் இயல்பான மாறுபாடு” என்றும் வு விளக்கினார். “மனிதர்கள் ஒன்றும் நூடுல்ஸ் அல்ல, ஒருவரை இழுத்து நீட்டுவது என்பது அறிவியல் பூர்வமாக சாத்தியமற்றது.” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
உடற்பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் இயற்கையான வளர்ச்சி காரணிகளே உயரத்தை அதிகரிக்க சரியான மற்றும் நம்பகமான வழிகள் எனவும், மரபியல் காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெற்றோரின் கவலையை வியாபாரமாக்குவதாக பலரும் சமூக வலைதளங்களில் அந்த நிறுவனத்தை சாடினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, அத்தகைய சிகிச்சைகளை வழங்குவதற்கு அது உரிமம் பெற்றதா என்பதும் தெளிவாக இல்லை.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments