Ticker

6/recent/ticker-posts

பாலஸ்தீனத்தின் புதிய உதயம்: சொந்த இடங்கள் நோக்கி பயணம் தொடங்கியுள்ள மக்கள்!


எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காஸா அமைதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இஸ்ரேல்-ஹமாஸின் இரண்டு வருடகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பும், வழிகாட்டலும் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா தெரிவித்தபோதிலும், கடந்த 2025 ஒக்டோபர் 10ம் திகதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் நடைமுறைக்கு வரவிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தினிடையே, இஸ்ரேல் தாக்குதல்களில் 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, 72 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும், அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தை சந்தேகிக்க வைக்கின்றது!

2023 அக்டோபர் 7 முதல் நடந்து முடிந்துள்ள தாக்குதல்களால் மொத்தமாக இதுவரை 67,682 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டு, 170,033 பேர்கள் காயமடைந்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பின்னரும் தாக்குதல்கள் இடம்பெறுவது, ஒப்பந்தத்தின் செயல்திறன் மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கலாம்.

நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அந்தவகையில், ஒப்பந்தத்தின் பின்னர் இரு திசைகளிலும் ரஃபா கடவை திறப்பதுவும், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதுவும் அடங்கும் எனவும் கலீல் அல்-ஹய்யா மேலும் குறிப்பிட்டுள்ளார். 
இஸ்ரேலால் காசாவின் தெற்குப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வடக்கு நோக்கிச் செல்கின்றனர். [மஹ்மூத் இசா/ராய்ட்டர்ஸ்]

காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் சிறைக்கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவில் போர் நிறுத்தத்தின்போது சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு மையம் (Civil-military coordination center) ஒன்றை அமைப்பதற்காக, சுமார் 200 அமெரிக்கக் கூட்டுப்படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.

​அவர்கள் காஸாவுக்குள் நுழைய மாட்டார்கள்; ஆனால் மனிதாபிமான உதவி, தளபாடங்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகள் ஆகியவற்றை நிர்வகிக்கவும், பொதுமக்கள் நிர்வாகத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உதவுவர்.

குறித்த விடயம் ஐ.நா.வின் அறிக்கையொன்றின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் எட்டப்பட்ட இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும், அதற்கான முயற்சியில் அமெரிக்கா, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி போன்ற நாடுகள் மேற்கொண்ட தூதரக முயற்சிகளையும் பாராட்டுகிறேன். ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் பங்கேற்பாளர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "அனைத்து சிறைக் கைதிகளும் மரியாதையுடன் விடுவிக்கப்பட வேண்டும்; நிரந்தரப் போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட வேண்டும், இப்போருக்கு இனிமேல் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்கள் காஸாவுக்குள் தடையின்றி, துரிதமாக நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

ஐ. நா. இந்த ஒப்பந்தத்தின் முழுமையான நடைமுறைக்கு ஆதரவளிப்பதுடன், நிலையான மற்றும் நெறிமுறையுடன் கூடிய மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க, காஸாவின் மீள்நிர்மாணத்தின் மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இந்த ஒப்பந்தம் இஸ்ரேலியரும், பாலஸ்தீனியரும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் இணைந்து வாழக்கூடிய "இரு நாடு" என்ற தீர்வுக்கான தொடக்கமாக அமையும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் என்பதால், பாலஸ்தீன மக்களின் சுயாட்சியுரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிப்புக்கு முடிவுகொடுக்கக் கூடிய நம்பகமான அரசியல் பாதையை உருவாக்க அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2,000 பாலஸ்தீனியர்களுக்கு 20 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட இருக்கின்றனர். முதல் கட்டத்தில் ஹமாஸ் 20 உயிருள்ள பணயக்கைதிகளை 2,000 பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக பரிமாறிக்கொள்ளும்.

இதன்படி, இஸ்ரேலில் அநியாயமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 பாலஸ்தீனியர்களையும், போர் தொடங்கியதிலிருந்து கைது செய்யப்பட்ட 1,750 பேரையும் 20 பணயக்கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படுவர்.

வியாழக்கிழமை நண்பகல் கையெழுத்திடும் வைபவம் எகிப்தில் நிகழ்ந்த நிலையில், ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பரிமாற்றங்கள் நடைபெறும். 

ஏற்கனவே தனது கைதிகள் பட்டியலை சமர்ப்பித்துள்ள ஹமாஸ், பாலஸ்தீன பொதுமக்களுக்கு பெயர்களை அறிவிப்பதற்கு முன் இஸ்ரேலிய அனுமதிக்காகக் காத்திருக்கின்றது.

கொத்துக்கொத்தாய் குண்டு போட்டு தன் தேசத்து மக்கள் இறந்து விட்டார்கள்; தூள்தூளாக அந்த தேசம் சிதறடிக்கபட்டு விட்டாலும், பணயக்கைதிகளின் உயிர்கள் ஓர் அமானிதம் என்பதால், எப்பாடுபட்டாவது அவற்றை மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளோம் என்பதை உலகுக்கு காட்டியிருக்கின்றார்கள் ஹமாஸ் போராளிகள்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுதலை செய்யப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள்,  ஹமாஸ் போராளிகளின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெறும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பார்க்கின்றபோது, பணயக்கைதிகளாகப் பிடிபட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் போராளிகள் எவ்வளவு சிறப்பாக நடத்தியுள்ளனர் என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஹமாஸை ஒரு வாரத்தில் அழிக்கப் புறப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கோலானிப் படைப்பிரிவு காஸாப் பகுதியிலிருந்து எஞ்சிய இராணுவ வாகனங்களுடன் வெளியேறியுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் காஸாவின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து கனரக வாகனங்கள் களத்தில் இறங்கி இடிபாடுகளை அகற்றும் தமது கடமையைத் தொடங்கின. 
இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் போரில் இடைநிறுத்தம் செய்து மீதமுள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, தெற்கு இஸ்ரேலில் இருந்து பார்க்கும்போது, ​​இஸ்ரேலிய வீரர்கள் இஸ்ரேல்-காசா எல்லைக்கு அருகில் நடந்து செல்கின்றனர். [எமிலியோ மொரேனாட்டி/ஏபி புகைப்படம்]

இதுவரை 81க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இடிபாடுகளுக்கள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரின் உடல்கள் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படலாம்.சஹீதாக்கப்பட்ட பலர் இன்னும் தங்கள் வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றனர்.

ஹமாஸுடனான சமாதான ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை  நிறுத்தி, காஸாவிலிருந்து விலகிவருவதால், ஆங்காங்கே தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தரைமட்டமாக்கப்பட்ட அல்லது பகுதியளவில் அழிந்துள்ள தமது காஸா வீடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டு இருக்கின்றனர்.

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடாத்திய போரில் இஸ்ரேல் படுதோல்வியடைந்து விட்டது என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஊடகமான சேனல் 12 செய்தித் தொகுப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 600 லாரிகள் ஒவ்வொரு நாளும் காஸாப் பகுதிக்குள் நுழையும் என்று இஸ்ரேலிய சேனல் 12 மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் ஹமாஸும்  முதல் கட்டபோர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டதை உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து, தினமும் 600 லாரிகளில் உணவு மற்றும் உதவிப் பெருட்கள் காஸாவுக்குள் செல்ல இருக்கின்றது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்!

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நிலை நெருக்கமாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் நன்றாக நடப்பதாலும், அனைத்து இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளும் யுத்த நிறுத்த விடயத்தில் ஈடுபாடு காட்டி வருவதாலும், வார இறுதிக்குள் தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்கக்கூடும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முதலில் அவர் எகிப்துக்குச் சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.

அதே வேளை, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முன்மொழிவை இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.  அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான மனுவிற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுகின்றார்.

இருந்தபோதிலும், இஸ்ரேலிய அமைச்சர்களான பின் காஃபிர் மற்றும் ஸ்மோட்ரிச் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்ததாக இஸ்ரேலிய ஒளிபரப்பு ஆணையம் குறிப்பிடுகின்றது!

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments