
சுதந்திர பாலஸ்தீனம் மலர்வதற்கும் மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்குமான சாத்தியங்கள் உருவாகி வருவதுபோல் தெரிகின்றது! போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு சுமுக நிலைக்கு வந்து, முதற்கட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளமை மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும்!
கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தைத் தளம் எகிப்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாத கத்தார் பிரதிநிதிகள், 2025 ஒக்டோபர் 8 அன்று மீண்டும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர்.
இதன்போது, துருக்கியின் உளவுத்துறை தலைவர் இப்ராஹீம் கலின் முக்கிய நபராகக் கலந்து கொண்டமை பாலஸ்தீனியர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. ஹமாஸின் பல தலைவர்களுக்கு புகலிடம் கொடுத்துள்ள துருக்கி, ஹமாஸ் இயக்கத்தை சுதந்திரப் போராட்ட இயக்கமாகக் கருதுகின்றது; இதனால் துருக்கியின் பங்களிப்பு, ஹமாஸ் தரப்பு வாதங்களைப் பலமடையச் செய்திருக்கலாம்.
அக்டோபர் 8 அன்று, இப்ராஹீம் கலின் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் ஆல் தானி, எகிப்து உளவு தலைவர் ஹசன் ரஷாத், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரட் குஷ்னர், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால், இது அமெரிக்கா, கத்தார், எகிப்து, துருக்கி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மத்தியஸ்தத்தின் வெற்றியாகும்!
இதன்போது- கைதிகள் விடுதலையும், ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற்றமும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என ஹமாஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளது; ஆக்கிரமிப்பு படைகள் குறிப்பிட்ட எல்லைகளில் இருந்து முழுமையாக வெளியேறும் அதே சமநேரத்தில் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.
இஸ்ரேலிடம் கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, மீண்டும் நெதன்யாஹு போரைத் தொடங்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக, ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் கலீல் அல் ஹய்யா குறிப்பட்டிருந்தார். காரணம் இஸ்ரேல் ஒரு நம்பகத்தன்மையற்ற நிர்வாகம்; எப்போதும் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்ல. அதனால், இவ்விடயத்தில் அமெரிக்காவும், மத்தியஸ்த நாடுகளும் உறுதியான வாக்குறுதியை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அமெரிக்கா ஐ.நா.வில் சமர்ப்பித்த 20 அம்சத் தீர்வுத் திட்டம், காசா மீதான போரை நிறுத்துதல், முழு பிரதேசத்திலிருந்தும் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பைத் திரும்பப் பெறுதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது போன்ற சில விடயங்கள் இப்போதைக்கு செயலாக்கம் பெறவுள்ளன.
இது போரைத் தற்காலிகமாக நிறுத்தி, ஹமாஸ் கைது செய்தவர்களையும், இஸ்ரேல் சிறைப்படுத்தியிருக்கும் பாலஸ்தீனக் கைதிகளையும் விடுவிப்பதையும் இலக்காகக் கொண்ட ஒப்பந்தமாகும்.
இதன்படி, இஸ்ரேல் படைகள் காஸாவின் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் பின்வாங்கி, போர் நடவடிக்கைகளை நிறுத்தும். 72 மணி நேரத்திற்குள் சில கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், இஸ்ரேல் முழு காஸாவிலிருந்து விலக வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு இதனை "இஸ்ரேலுக்கு சிறந்த நாள்" என்று கொண்டாடி, அரசை கூட்டி ஒப்பந்தத்தை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளதோடு, 2023 ஒக்டோபர் 7 தாக்குதலில் பிடிபட்ட அனைவரையும் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.
2023 அக்டோபர் 7 ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நடந்த போரில் காஸாவில் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது "முதற்கட்டம்" என்பதால் போரை முற்றிலும் நிறுத்துதல், காஸாவின் மீளமைப்பு என்பன இன்னும் சவால்களில்தான் உள்ளன. ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டுமா? இஸ்ரேல் காஸாவை முழுமையாக விட்டு வெளியேறுமா? என்பன போன்ற விடயங்கள் தொடர்ந்தும் கேள்வி நிலையில்தான் உள்ளன.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார்.
2025 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட அவரது "20 அம்ச காஸா அமைதி திட்டம்" இந்த முதற்கட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையாகும். இந்த அமைதித் திட்டமே, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தூண்டியது எனலாம்.
மேலும் ஆரம்பத்தில் கத்தார், எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா இதை முன்னெடுத்தது; பின்னர் பேச்சு வார்த்தைகளின் துருக்கியும் இணைந்து கொண்டது.
'ஹமாஸின் ஆயுத ஒழிப்பு மற்றும் காஸாவின் தற்காலிக ஆட்சி அமைப்பு' ஆகியவை அடுத்த கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ள ஹமாஸுக்கு 2025 அக்டோபர் 5 வரை ட்ரம்ப் காலவரை கொடுத்தார். இதுவே ஹமாஸை முதற்கட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள உதவியது.
ட்ரம்ப், இஸ்ரேலுக்கு "காஸாவுக்கான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துங்கள்" என்று அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாது, நெதன்யாஹுவை சந்தித்து ஒப்பந்தத்தை அமுல்படுத்த வைத்தார்.
ட்ரம்ப்பின் மறுமகனான குஷ்னர், நண்பரான ஸ்டீவ் விட்காஃப் போன்றவர்கள் எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

2025 அக்டோபர் 8 அன்று "முதல் கட்டம்" ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் டிரம்ப், "நாம் மிக அருகில் உள்ளோம்" என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டு தனது நோபல் பரிசை நோக்காகக் கொண்டு உலக ஆதரவைப் பெற முயன்றார். துருக்கி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா, ஐந்து ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டவை டிரம்பின் முயற்சிகளைப் பாராட்டின. ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் "இதனை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
டிரம்ப், இதனை "நிலைத்த போர் நிறுத்தம்" என்று விவரித்தபோதிலும், ஏற்கனவே 2025 ஜனவரி-மார்ச் ஒப்பந்தம் உடைந்ததுபோல் உடையலாம் என்ற சவால்களும் உள்ளன.
இது டிரம்பின் இரண்டாவது ஜனாதிபதி காலத்தின் பெரிய தூதரக வெற்றியாகக் கருதப்படுகிறது; அத்துடன் இந்த வெற்றி அவரது நோபல் பரிசுக்கான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகின்றது.
காஸாப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸின் முக்கிய பிரதிநிதியாக செயல்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கலீல் அல்-ஹய்யா 1960ல் காஸா தீரத்தில் பிறந்தவர். ஹமாஸ் இயக்கம் 1987ல் தொடங்கப்பட்டது முதல் அதன் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
இஸ்ரேல் தாக்குதல்களில் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் இறந்துள்ளனர். 2014 காஸா போரில் அவரது மகன், மருமகள் மற்றும் மகன் ஒருவர் கொல்லப்பட்டனர்; தற்போதைய போரில் மற்றொரு மகன் இறந்தார். 2025 செப்டம்பர் 9 அன்று கத்தாரில் நடந்த இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அவரது இன்னொரு மகன் ஹிமாம் அல்-ஹய்யா கொல்லப்பட்டார்; ஆனால் கலீல் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
2024 அக்டோபரில் யஹ்யா சின்வார் கொல்லப்பட்ட பிறகு, இவர் ஹமாஸின் ஐந்து நபர் கொண்ட தலைமைக் கவுன்சிலின் உறுப்பினரானார்; சில தகவல்கள் அவரை ஹமாஸின் சிறப்புப் பிரிவான இஸ் அல்-தின் அல்-காஸ்ஸாம் பிரிகேட்ஸின் தலைவராகவும் குறிப்பிடுகின்றன.
கத்தாரைத் தளமாகக் கொண்டு, இஸ்ரேலுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய இவர், 2024 அக்டோபரில் சின்வார் இறந்த பிறகு, "பாலஸ்தீன மண் முழுவதும் ஜெருசலமைத் தலைநகராகக் கொண்ட அரசை நிறுவும் வரை ஹமாஸ் முன்னேறும்" என்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments