
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் நடிகர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் குறித்து முக்கிய வேண்டுகோள் மற்றும் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில், கரூர் சம்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாமல் நீண்டகால தீர்வை நோக்கி நகர்வோம் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், "கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்" என தெரிவித்துள்ளார்.
பாஜக மீது விமர்சனம்
இன்னொரு பதிவில் கரூர் சம்பவத்தில் பாஜக செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், " தவறு செய்தவர்கள் தவழ்ந்து சென்று தஞ்சமடையும் Washing Machine-தான் பா.ஜ.க. அங்கு சரணாகதி அடைந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத் துணைபோகும் கொள்கையற்ற கூட்டத்தைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, நாட்டுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரத் துணைநிற்கும் உங்கள் அனைவரின் உறுதியை, இராமநாதபுரம் மக்களிடம் கண்டேன்" என கூறியுள்ளார்.
ஒட்டுண்ணி பா.ஜ.க
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் இன்னொரு பதிவில், " மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?. நிச்சயமாக அக்கறை இல்லை, முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல். அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்" என்று கூறியுள்ளார்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments