
மரணமடைந்த ஒருவரின் சவப் பெட்டிக்குள் மதுபானங்களை ஊற்றும் அசிங்கமான ஒரு கலாச்சாரம் நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாராரிடையே தற்போது தலைதூக்கியுள்ளது.
சகல சாங்கியங்களும் நிறைவடைந்த பிறகு, சவப் பெட்டிக்குள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் இறந்தவரின் வாயில் ‘பீர்,’ அல்லது ‘விஸ்கி,’ போன்ற மதுபானங்களை கொஞ்சம் ஊற்றுகிறார்கள். மீதமுள்ள மதுவை சவப் பெட்டிக்குள்ளேயே அவருடையத் தலைக்கு அருகில் ஊற்றுகின்றனர்.
நம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக இழிவுபடுத்துவதைப் போலான இச்செயல் எப்போது நம் கலாச்சாரமாக மாறியது என்று தெரியவில்லை.
இறந்தவரின் அணுக்கமான நண்பர்கள் மட்டுமின்றி, சில வேளைகளில் அவருடைய குடும்பத்தினரே இவ்வாறு செய்வது நமக்கு சற்று வேடிக்கையாக உள்ளது.
நம் சமூகத்தைச் சார்ந்த எல்லாருமே மது அருந்துவது கிடையாது. குறிப்பிட்ட ஒரு சாரார்தான் அந்தப் பழக்கத்தில் உள்ளனர். அதிலும் சிலர்தான் அதிகமாக மது அருந்திவிட்டு வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர்.
குறிப்பிட்ட அந்த சிலரின் போக்கினால் பல வேளைகளில் ஒட்டு மொத்த சமூகமும் ‘காக்கி மாபோக்,'(குடிகாரன்) எனும் அவப் பெயரை சுமந்து நிற்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகும்.
ஆனால் தற்பொழுது அதையும் தாண்டி, இறந்த பிறகும் ஒருவரை ‘குடிகாரராக’ அடையாளப்படுத்துவது மிகவும் மோசமான செயல்தான். உன்னதமான நமது கலாச்சாரம் சீரழிவை நோக்கிச் செல்கிறது என்றுதான் வகைபடுத்த வேண்டியுள்ளது.
வேறு எந்த இனத்தவரும் இப்படி இறந்தவரின் வாயிலோ சவப் பெட்டிக்குள்ளேயோ மதுபானத்தை ஊற்றி, இறந்தவர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்தையும் கேவலப்படுத்துவதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
பட்டாசுகளை வெடிப்பதிலும் நமக்கு இதே நிலைதான். கடந்த காலங்களில் தீபாவளியின் போது மட்டுமே பட்டாசுகள் கொளுத்தப்படும். வான வேடிக்கைகளும் மத்தாப்புகளும் கூட உடனிருக்கும். கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியானத் தருணங்களையும் பிரதிபலிப்பதாக அது அமையும்.
காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, தீபம் ஏற்றி, தான் மரணமடைந்த தினத்தை ‘தீபாவளி’ என்றழைத்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுமாறு நரகாசுரன் கேட்டுக் கொண்டார் என்பது ஐதீகம். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பட்டாசுகளையும் பிறகு நாம் சேர்த்துக் கொண்டோம்.
ஆனால் தற்பொழுது நம் சமூகத்தைச் சார்ந்த சிலர், குடும்ப உறுப்பினர்களின் இறப்புக்கும் பட்டாசுகளை வெடிப்பதுதான் நமக்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது. வீட்டிலும், சவ வாகனம் செல்லும் வழியில் சாலை முச்சந்திகளிலும் தகனம் செய்யும் இடங்களிலும் கூட பட்டாசுகளைக் கொளுத்துகின்றனர்.
குடும்ப உறுப்பினர் ஒருவரின் இறப்பு மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய விஷயமல்லவே! அப்படிப்பட்ட சோகமான ஒரு நிகழ்வில், யாருடைய சந்தோசத்திற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை.
ஆக, இறந்தவர்களின் வாயில் மதுபானம் ஊற்றுவதும் இறப்பு நிகழ்வுகளில் பட்டாசுகளைக் கொளுத்துவதும் நம் சமூகத்தின் ‘கலாச்சாரக் கொலை’ என்பதில் துளியளவும் ஐயமில்லை.
தற்போதைய நவீன காலத்தில் இத்தகைய சீர்கேடுகளுக்கு நாம் தொடர்ந்து உரமிட்டுக் கொண்டிருந்தால் நம் சமூகம் மேலும் பின்தங்கி, இலக்கை இழந்து தடுமாறிக் கொண்டுதான் இருக்கும்.
வழக்கம் போல, ‘பூனைக்கு யார் மணி கட்டுவது,’ எனும் நிலைக்குத்தான் மீண்டும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இராகவன் கருப்பையா
malaysiaindru

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments