
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிசம்பர் ஆறாம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 106 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து விளையாடிய இந்தியா அதிரடியாக பேட்டிங் செய்து 39.5 ஓவரில் 271/1 ரன்களை குவித்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக விராட் கோலி 65*, ரோஹித் சர்மா 75, ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 116* ரன்கள் குவித்தனர். அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா கடந்த வாரம் டெஸ்ட் தொடரில் தோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய போதிலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடிக்க விராட், ரோஹித் ஆகியோர் உதவியதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்தது பெரிய பாரத்தைக் குறைத்தது போல் இருக்கிறது”
“அதற்காக நான் நன்றியுடையவனாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். எப்படி விளையாட வேண்டும், இலக்கை நிர்ணயிக்க வேண்டும், எந்த வேகத்தில் விளையாட வேண்டும் என்பது போன்ற நிறைய விஷயங்களை நானும் ரோஹித் பாயும் பேசினோம். முதல் 2 போட்டிகளில் நல்ல துவக்கத்தைப் பெற்ற போதிலும் என்னால் அதைப் பெரிதாக மாற்ற முடியவில்லை”
“எனவே இன்று எப்படி சமநிலையுடன் விளையாடி அதைப் பெரிதாக மாற்ற வேண்டும் என்பது பற்றியும் நாங்கள் பேசினோம். என்னுடைய ஆட்டத்தை எப்படி சமநிலைப்படுத்துவது என்று நான் சிந்தித்தேன். சில சமயங்களில் அட்டாக் செய்ய நினைத்த நான் சில நேரங்களில் சிங்கிள் எடுத்தேன். அந்த வகையில் என்னுடைய ஆட்டமும் திட்டமும் நன்றாக இருந்தது”
“இன்று என்னுடைய அதிரடி கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு எப்படி முடிந்தளவு ஆழமாக விளையாடலாம் என்று சிந்தித்தேன். தேவைப்பட்டால் குறிப்பிட்ட பவுலர்களை அடிக்கலாம் என்று நினைத்தேன். விராட் பாஜி களத்திற்கு வந்ததும் நிறைய ஷாட்டுகளை அடித்தார். அவரும் நானும் நிறைய பேசினோம். அவர் எனக்குத் தொடர்ந்து சிறிய இலக்கைக் கொடுத்தார். அதில் நான் கவனத்தைச் செலுத்தினேன். அது என்னுடைய இலக்கைத் தொடுவதற்கு உதவியது” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments