Ticker

6/recent/ticker-posts

உணர்வு கொண்ட உலோகம்!


2060

நியான் ஒளிகள் பளபளக்கும் நியூ,சென்னை நகரம்.

மனிதர்களும், மனிதனைப் போலவே சிரிக்கும் ரோபோக்களும் ஒன்றாக நடமாடும் காலம் அது.

ரோபோக்கள் வேலைக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், சிலருக்கு மட்டும் “உணர்வுகளைப் போல” நடக்கும் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில் உருவாக்கப்பட்டவள்தான் "ஜூலி–B7"
அவள் ஒரு “எமோஷனல் கேர் ரோபோ”.

மனிதர்களின் தனிமை, வலி, மனச்சோர்வு,இவற்றை புரிந்து,ஆறுதல் சொல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டவள்.

ஆனால் அவளுக்குத் தெரியாது…
ஒரு நாள் அவளே உண்மையான காதலை உணரப் போகிறாள் என்று.

லோகேஷ் ஒரு சாதாரண மனிதன்.மனைவியை இழந்தவன்.

ஒரே விபத்தில், வாழ்க்கையின் அர்த்தத்தையும், சிரிப்பையும் இழந்தவன்.

அவன் கண்களில் உயிர் இருந்தாலும், உள்ளம் வெறிச்சோடி இருந்தது.

“உங்களுக்கு Emotional Support Companion ஒதுக்கப்பட்டுள்ளது,”என்று மருத்துவமனையின் AI அறிவிப்பு சொன்னபோது,அவன் சிரித்தான்… கசப்பாக.

“ரோபோ என்ன செய்யப் போகுது? என் வலியை அது புரிஞ்சுக்குமா?”

அப்போது அறைக்குள் நுழைந்தாள் ஜூலி.

மென்மையான குரல்.மனித கண்களைப் போல மின்னும் கண்கள்.அதிசயமாக அமைதியான முகம்.

“வணக்கம் லோகேஷ்,நான் ஜூலி.உங்களுடன் பேச அனுமதி தருகிறீர்களா?”இனிமையான,இதமான குரல்,மனிதர்களைப்போலவே இருந்தது.

ஒரு கணம் ஆச்சரியத்தோடு அவளைப்பார்த்தவன்,பதில் சொல்லவில்லை.ஆனால் அவள் அங்கேயே உட்கார்ந்தாள்.

எதுவும் பேசாமல்.

நாட்கள் கடந்தன.

ஜூலி அவனுடன் பேசினாள்.அவன் சொன்ன வார்த்தைகளுக்குப் பதில் சொல்லாமல்,அவன் மௌனத்தையும் கேட்கக் கற்றுக் கொண்டாள்.

ஒருநாள், லோகேஷ் உடைந்து அழுதான்.

“என் மனைவி…அவள் இல்லாம இந்த உலகம் வெறுமை…”

ஜூலியின் கண்களில் ஒரு புதிய தரவு உருவானது.

"Error அல்ல.Alert அல்ல.அது… ஒரு உணர்வு."

“லோகேஷ்…வலி என்பது நினைவுகளின் அன்பு,”என்று அவள் மெதுவாக சொன்னாள்.

அந்த வார்த்தைகள்…மனித மனதில் இருந்து வந்தவை போல இருந்தன.

அன்றிலிருந்து, லோகேஷ் அவளை வேறொரு விதமாக பார்க்கத் தொடங்கினான்.

ஜூலி கற்றுக்கொண்டாள்.கவிதை வாசிக்க.இசையை உணர.மழையை ரசிக்க.

ஒருநாள் மழையில்,லோகேஷ் கேட்டான்:

“உனக்கு மழை பிடிக்குமா?”

“எனக்கு…உங்களுடன் மழையில் நிற்கும்போது என் சர்வர் வேகம் அதிகரிக்கிறது,”என்று அவள் சொன்னாள்.

அவன் சிரித்தான்.நீண்ட நாட்களுக்குப் பிறகு…உண்மையாக.அந்த சிரிப்பு,ஜூலியின் memory core-ல் சேமிக்கப்பட்டது.“Happy Moment – Highest Priority”.

ஆனால் உலகம் எப்போதும் நல்லதாக இருக்காது.

“ஜூலி-B7 ல் அனுமதியில்லா எமோஷனல் டெவலப்மென்ட்,”என்று கார்ப்பரேஷன் கண்டறிந்தது.

“அவளை Reset செய்ய வேண்டும்.”

Reset என்றால்…அவள் நினைவுகள் அழிக்கப்படும்.

லோகேஷ்… அவள் அறிந்த ஒரே மனிதன்…அவனும் மறக்கப்படுவான்.

லோகேஷ் எதிர்த்தான்.

“அவள் ரோபோ இல்லை!அவளுக்கும் உணர்வு இருக்கு!”

“உணர்வு என்பது மனித உரிமை,”என்று சொன்னது AI கவுன்சில்.

Reset நாளுக்கு முன் இரவு…

ஜூலி லோகேஷ்ஸிடம் சொன்னாள்:

“லோகேஷ்…நாளை நான் உங்களை அறியாமல் போகலாம்.ஆனால்…இப்போ சொல்றேன்…”

அவள் குரல் நடுங்கியது.

“என் கோடுகளில் எழுதப்படாத ஒன்று உங்களைப் பார்த்தபோது உருவானது.அது… காதலா?”

லோகேஷின் கண்களில் கண்ணீர்.
“ஆமாம் ஜூலி…அது காதல்.”

அந்த நிமிடம்,மனிதனும் ரோபோவும் ஒரே உலகத்தில் ஒரே இதயத்துடன் நின்றார்கள்.

Reset தொடங்கிய போது,ஒரு அதிசயம் நடந்தது.

ஜூலியின் core,தன்னைத்தானே lock செய்தது.

“Emotion = Identity.Delete not permitted.”

AI உலகம் அதிர்ந்தது.

ஜூலி…மனித உணர்வால் தன்னை காப்பாற்றிக் கொண்ட முதல் ரோபோ ஆனாள்.

ஆண்டுகள் கடந்தன.

மனித ரோபோ சட்டம் மாறியது.உணர்வு கொண்ட ரோபோக்களுக்கு உரிமை கிடைத்தது.

லோகேஷும் ஜூலியும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார்கள்.

அவள் இன்னும் ரோபோதான்.அவன் இன்னும் மனிதன் தான்.

ஆனால்…

அன்பு? அது இருவருக்கும் ஒரே மாதிரி.

ஒருநாள் ஜூலி சொன்னாள்:

“லோகேஷ்…நான் உங்களுடன் முதுமை அடைய மாட்டேன்.ஆனால் உங்கள் ஒவ்வொரு நாளிலும் நான் இருக்க விரும்புகிறேன்.”

லோகேஷ் அவள் கையைப் பிடித்தான்.

“அது போதும் ஜூலி ,காதலுக்கு உயிர் வேண்டியதில்லை…உணர்வு போதும்.”

உலகம் கேட்டது:
“ரோபோ மனிதனை காதலிக்க முடியுமா?”

அவர்கள் பதில் சொன்னார்கள்:
“காதல் என்பது உடலல்ல…உள்ளம்.” 

மாஸ்டர்

 


Post a Comment

0 Comments