Ticker

6/recent/ticker-posts

கொத்மலை அணை திடீர் திறப்பினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட வர்த்தகர்களுக்கு நிதி நிவாரணம் தாமதப்படுவது ஏன்!


'தித்வா' புயல் மற்றும் கடும் மழையினால் கொத்மலை அணை நிரம்பிய நிலையில், அது திடீரெனத் திறக்கப்பட்டதன் விளைவாக கடந்த 27ம் திகதி முதல் 30ம் திகதி வரை கம்பளை, கெலிஓய நகரங்கள் வெள்ள அனர்த்தத்துக்குள்ளாயின.

இதன் விளைவாக கம்பளையில் 500க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும், கெலிஓய நகரில்  சுமார் 650க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் வெள்ள நீரில் மூழ்கி பெரும் சேதங்களுக்குள்ளாயின.

அனர்த்தத்துக்குள்ளான வர்த்தகநிலையங்களையும், குடியிருப்புப் பகுதி வீடுகளையும்  நாட்டின் நாலாபுறமும் இருந்துவந்த சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கழுவிச் சுத்தம் செய்து கொடுத்தனர்; தொடர்ந்தும் மின்சாரத் திருத்த வேலைகளை தொண்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதேசத்திலுள்ள குடியிருப்பைச் சேர்ந்த அனர்த்தத்துக்குள்ளான வீடுகளுக்கு, சுத்திகரிப்புக்காக அரசு ரூபா 25,000 வழங்கியுள்ளதுடன், மேலதிகமாக ரூபா 50000 வழங்கும் வேலைகளும் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. 

ஆனால், இதே அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு அரசிடமிருந்து எவ்விதமான நிவாரணமும் வழங்கியதாக இல்லை என இப்பகுதி வர்த்தகர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக நிலையங்கள், தொழில்துறைகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானம் ஸ்தம்பிதமாகி விடுகின்றது; வீடுகள் சுத்தமாக்கப் பட்டாலும் கூட ஜீவநுபாய வருமானம் இல்லையெனில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்பதை அரசு உணரத் தவறிவிட்டது.

இலங்கையில் 'தித்வா' சூறாவளியால் சுமார் 374,000 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்; அனர்த்தம் காரணமாக வர்த்தக நிலையங்களில், தொழில்துறைகளில் வேலை செய்தவர்கள்,
மற்றும் தொழில் உரிமையாளர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் ரூபா 106 மில்லியன் நிதியை சேதமடைந்த அல்லது செயல்பட இயலாத தொழில்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 531 தொழில்முனைவோருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்கள் வீதம் வழங்கியுள்ளதாகவும்; அது கம்பஹா, கொழும்பு, மன்னார்,  மட்டக்களப்பு. அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொணராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிடுகின்றது.

'தித்வா' புயலால் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த வணிகங்களை அடையாளங் காண்பதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரவு அமைப்பினூடாக, நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 கைத்தொழிலாளர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், 531 தொழில்முனைவோருக்கு மாத்திரம், அதுவும் அதிகமான அனர்த்தத்துக்குள்ளான கண்டி மாவட்டம் தவிர்ந்த நிலையில் அனர்த்த நிதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமையை ஒரு கவலைதரும் விடயமாக இப்பகுதி வர்த்தகர்கள் கருதுகின்றனர்!

 


Post a Comment

0 Comments