Ticker

6/recent/ticker-posts

உன்னாவ் வழக்கு: குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் தடை


உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது. சிபிஐ (CBI) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு இந்த அதிரடி முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது.

மூன்று நீதிபதிகள் அமர்வு

இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.ஜி. மாசிஹ் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, "நாங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம். இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது," என்று தெரிவித்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு

சிபிஐ மட்டுமின்றி, அஞ்சலே படேல் மற்றும் பூஜா ஷில்ப்கர் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும் செங்கரின் தண்டனை இடைநீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்

செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில முக்கியமான சட்டக் கேள்விகளை முன்வைத்துள்ளது. அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 376(2)(i)-ன் கீழ் வழங்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ததா இல்லையா? எனக் கேட்ட உச்ச நீதிமன்றம், "மிகச்சிறந்த நீதிபதிகளும் தவறு செய்ய வாய்ப்புள்ளது, நீதித்துறை ஆய்வு என்பது அமைப்பின் ஒரு பகுதி" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் ஆழமான பரிசீலனைக்கு உரியது என்று கூறியது. மேலும் போக்சோ (POCSO) சட்டத் திருத்தங்கள் தண்டனையை அதிகரிப்பது தொடர்பானது மட்டுமே தவிர, புதிய குற்றத்தை உருவாக்குவது அல்ல என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

செங்கரின் தண்டனை நிறுத்தி வைப்பு

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையால் குல்தீப் சிங் செங்கர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க நேரிடும். அவர் ஏற்கனவே மற்றொரு வழக்கிலும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ தரப்பில் என்ன கூறப்பட்டது?

நீதிமன்ற விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இது ஒரு குழந்தைக்கு இழைக்கப்பட்ட கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு. குற்றம் நடந்த போது அந்தச் சிறுமிக்கு 15 வயது 10 மாதங்கள் மட்டுமே," என்று வாதிட்டார்.

இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. வாரந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், கடவுச்சீட்டை (Passport) ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

zeenews

 


Post a Comment

0 Comments