
நூற்றாண்டு சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2025/26 சீசன் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அத்தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்து கோப்பையை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகு முறையில் விளையாடி வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து தோல்வியை சந்தித்த போதிலும் 4வது போட்டியில் வென்றது.
அதனால் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 15 வருடங்கள் 16 தோல்விகளுக்கு பின் இங்கிலாந்து ஒரு வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த நிலையில் கடைசி போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 384 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 160, ஹாரி ப்ரூக் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கேல் நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 567 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 138, ட்ராவிஸ் ஹெட் 163, பியூ வெப்ஸ்டர் 71* ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ், ஜோஸ் டாங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்ததாக 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் போராடி 342 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தல் 154, ஹாரி ப்ரூக் 42 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இறுதியில் 160 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 29, ஜேக் வெதர்லேண்ட் 34, மார்னஸ் லபுஸ்ஷேன் 37, கேமரூன் கிரீன் 22*, அலெக்ஸ் கேரி 16* ரன்கள் எடுத்தார்கள். அதனால் 161/5 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக 4 – 1 (5) என்ற கணக்கில் 2025/26 ஆஷஸ் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
இதையும் சேர்த்து வரலாற்றில் 35வது முறையாக ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து 32 முறை வென்றுள்ள நிலையில் 7 தொடர்கள் டிராவில் முடிந்தன. அதனால் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ள ஆஸ்திரேலியா சாதாரண முறையில் பொறுப்புடன் விளையாடினாலே கோப்பையை வெல்லலாம் என்பதையும் காண்பித்துள்ளது. மறுபுறம் பஸ்பால் முறையில் அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments